குழந்தைகளை, அவர்கள் செய்யும் குறும்புகளை இரசிக்காதவர்கள் இருக்க முடியுமா என்ன?
நமது வீடுகளில் இருக்கும் குழந்தைகளின் சேட்டைகளை பற்றி எவ்வளவு பெருமையாக சொல்லிக் கொள்வோம். குட்டிச் சாத்தான்கள், வாலுகள் என்று அடைமொழியிட்டு அழைப்பதிலும், பிறரிடத்தில் அதைப் பறைசாற்றிக் கொள்வதிலும் ஒரு பெருமை.
குழந்தை பிறந்ததிலிருந்து ஒவ்வொரு அசைவிற்க்கும் ஒரு அர்த்தம் சொல்லி, குழந்தை ரொம்ப சூட்டிகை இல்ல என்று சொல்லிக் கொள்வதில், வீட்டிலுள்ள பெரிசுகளுக்கு அலாதி ஆனந்தம். குழந்தைகள் நடக்க ஆரம்பித்து விட்டால் போதும் அவ்வளவுதான், அவர்களின் ஒட்டத்தை யாராலும் தடுக்க முடியாது. ஒரு பொம்மையை, ஒன்றிரண்டு நாட்களுக்கு மேல் உடையாமல் வைத்திருந்தால் பெரிய அதிசயம்.
அவர்கள் எவ்வளவுதான் சேட்டை செய்தாலும், யாராவது ஒருவர் கண்டிக்கும் போது, "அவன் குழந்தைதானே அவனுக்கு என்ன தெரியும்" என்று மற்றொருவர் செல்லம் கொடுப்பார்கள்.
கடவுளைப் போல, குழந்தையின் ஒவ்வொரு செயலும் நமக்கு எல்லையில்லாத மகிழ்ச்சியைத் தருவதால், குழந்தைகளை கடவுளுக்கு நிகராக ஒப்பிடுவார்கள். அந்த கடவுளே குழந்தையாக வந்தால் எவ்வளவு மகிழ்ச்சி இருக்கும்?
கடவுளே குழந்தையாக வந்ததால் கடவுள்தானே குழந்தையாக வந்திருக்கிறார், அவர் சேட்டை எதுவும் செய்ய மாட்டார்னு சொல்ல முடியுமா என்ன? அகில உலகங்களுக்கும் ஆதர்ச நாயகனான கடவுளை, அவர் செய்யும் குறும்புகளுக்காக கண்டிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தால்? கற்பனை செய்தாலே மனம் துள்ளிக் குதிக்கிறது அல்லவா? அப்படி ஒரு வாய்ப்புத்தான் யசோதைக்கு கிடைத்தது.
இராமயணத்தில், குழந்தையாக இருந்த இராமனின் குறும்புகளை பற்றி ஒன்றும் இடம் பெறாது. ஆக குழந்தை இராமன் குறும்புத் தனம் எதுவும் செய்யவில்லை என்றே கொள்ளலாம். ஏனென்றால் அரச குடும்பத்து பிள்ளை அல்லவா. இந்த காலத்தில் கூட, பணக்கார வீட்டு குழந்தைகளுக்கு குறும்புத்தனம் செய்யும் வாய்ப்பு குறைவு. அதே குழந்தைகள் வளர்த்து பெரியவர்களானதும், அவர்கள் செய்யும் அலும்புகள் தனி.
இராமாவதாரத்தில். செய்ய விட்டுப் போன சேட்டைகளையும் சேர்த்து, மொத்தமாக சேர்த்து செய்து விட்டார் கிருஷ்ணாவதாரத்தில்.
குழந்தை கிருஷ்ணன் மண்ணை அள்ளி திண்கின்றான். வெண்ணைத் தாழிகளை உடைத்து, வெண்ணையை பருகுகின்றான். ஆயர்குல பெண்களிடம் வம்பு செய்கின்றான். என்ன தான் அரச குடும்பத்தில் பிறந்திருந்தாலும், வளர்ந்த்து என்னவோ, சாதாரண ஆயர்குல குடில்களில். யசோதை கண்ணனுடைய லீலைகளை இரசித்தாலும், ஊரிலுள்ள மற்றவர்களுக்காக உரலில் கட்டி வைத்து கண்டித்தாள். உலகையே கட்டி ஆளும் பரந்தாமன் என்று இந்து புராணங்களினால் வர்ணிக்கப் படும் கண்ணனை, யசோதை கட்டி வைத்தாளென்றால், அவள் எவ்வளவு தவம் செய்திருக்க வேண்டும்.
குழந்தை கண்ணனை பற்றிய எல்லா பாடல்களிலுமே, கண்ணனின் விளையாட்டுக்கள், வீர பிரதாபங்கள் என்று மட்டுமே வரும். கிருஷ்ண பகவானின் பெருமைகளை, அவனை வளர்த்த யசோதயை, அவளது சிறப்பினை குறிப்பிட்டு பாபநாசம் சிவன் அவர்களால் இயற்றப்பட்ட இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும், எனக்கு அலுப்பதில்லை.
“படைப்புக் கடவுளான பிரம்மா, தேவர்களின் தலைவனான இந்திரன் ஆகியோர் கண்ணனின் கால்கள் தம்மீது படாதா என்று ஏங்கின்றனர். ஆனால், சாதாரண இந்தப் பெண், பல்வேறு உலகங்களையும் காத்து வருகின்ற பரந்தாமனை, கண்ணனை சீராட்டுகிறாள், தண்டனைக் கொடுக்கிறாள். , பல்வேறு மகா முனிகள் கடுமையான தவங்களின் மூலம் தரிசித்ததை, எளிதாக அதுவும் பெற்றெடுக்காமலே சாதித்து விட்டாளே” என்கிற பொருளில் வரும்.
மிகவும் எளிமையான நடையில், மிக குறைந்த வரிகளில் யசோதையின் சிறப்பைக் கொண்டு கண்ணனை போற்றும் இந்த பாடல் கர்நாடக சங்கீதத்தில் காபி என்னும் ராகத்தைக் அடிப்படையாக கொண்டது.
"பார்த்திபன் கனவு" என்ற தமிழ் திரைப்படத்தில் சில வரிகள் மட்டும் வரும். ஹரிணி நன்றாகவே பாடியிருப்பார் என்றாலும், இடையே நாயகனும், நாயகியும் எங்கேயோ சென்று டூயட் பாடிவிட்டு வருவார்கள். புதுமை என்ற பெயரில் ஒரு நல்ல பாடலை கொலை செய்திருப்பார்கள்.
எல்லா கர்நாடக இசைக் கலைஞர்களுமே இந்த பாடலை பாடியிருக்கிறார்கள். அதில் காயத்ரி அவர்கள் பாடிய வாய்ப்பாட்டும், கத்ரி கோபால்நாத் அவர்களின் சாக்ஸ்போன் இசையும் குறிப்பிட தகுந்தது. எங்கள் ஊரில் நடைபெற்ற சங்கீத மும்மூர்த்திகள் இசைவிழாவில், சுதா ரகுநாதன் அற்புதமாகப் பாடினார்.
இவர்கள் எல்லோரையும் மறக்கடிக்க செய்தது, "திலக்கம்" என்ற மலையாள படத்தில் வரும் சின்மயி அவர்களின் குயிலிசை. நாயகன் திலிப் மனநிலை பாதிக்க பட்டவராகவும், நாயகி காவ்யா மாதவன் அவரை கவனிப்பது கொள்வது போல உள்ள சூழ்நிலையில் வரும் இந்த பாடல், கேட்போர் நெஞ்சங்களை உருகவைப்பது.
பாடலின் ஆரம்பத்தில் வரும் குழந்தை நிமிஷாவின் குரல் கண்டிப்பாக நம்மை கரைய வைக்கும். பல நாட்கள், பல்லாயிரம் முறை கேட்டாலும், இன்னும் ஒரு முறை கேட்கத் தூண்டும் பாடல்.
என்னை கவர்ந்த சின்மயி, கண்டிப்பாக உங்களையும் கவர்வார்.
குழந்தை நிமிஷா, சின்மயி ஆகியோரின் குரலில் – Music PlugIn-ல் கேட்க
குழந்தை நிமிஷா, சின்மயி ஆகியோரின் குரலில் - You Tube-ல் கேட்க
உங்களுக்குத் தேவையானவற்றைக் கேட்க சுட்டிகளை பயன்படுத்திக் கொள்ளவும். பாடல் வரிகளையும் உங்களுக்காக கொடுத்துள்ளேன்.
ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் ஆடும் பரதம்!
மாதங்கி-ன் குரலில்
S. காயத்ரி அவர்களின் குரலில்
S.P. ராம் அவர்களின் குரலில்
நிர்மலா ராஜசேகர் அவர்களின் வீணையிசையில்
வயலினிசையில்
ரமணி அவர்களின் புல்லாங்குழலிசையில்
கத்ரி கோபால் நாத் அவர்களின் சாக்ஸ்போன் இசையில்
பாடல்: என்ன தவம் செய்தனை
வரிகள்: பாபநாசம் சிவன்
ராகம்: காபி
தாளம்: ஆதி
என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை
எங்கும் நிறை பரப்ரம்மம் - அம்மா வென்றழைக்க
(என்ன தவம்)
ஈரேழு புவனங்கள் படைத்தவனைக் - கையில்
ஏந்திச் சீராட்டி பாலூட்டி தாலாட்ட - நீ
(என்ன தவம்)
பிரமனும் இந்தரனும் மனதில் பொறாமை கொள்ள - உரலில்
கட்டி வாய் பொத்திக் கெஞ்ச வைத் தாயே - நீ
(என்ன தவம்)
சனகாதியர் தவ யோகம் செய்து வருந்திச் சாதித்ததை
புனித மாதே எளிதில் பெற - நீ
(என்ன தவம்)
4 comments:
அருமையா சொன்னீங்க குழந்தைகளை பற்றி.. இதுபோல் எழுத யாருமிங்கில்லை..
Good post.Try 2 read Bala's "Thulasi" noval...
குழந்தைகளை இத்தனை அழகா ரசிச்சி எழுதிய உங்களுக்கு பாராட்டுக்கள்!!!
கலையரசன், கனவுகள் விற்பவன், பிரியா,
வருகைக்கும், பின்னூட்டத்திற்க்கும் மிக்க நன்றி!
Post a Comment