கட்டுரையாளர் : என்.முருகன், சமூகவியலாளர், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி
தமிழக அரசின் 2010ம் ஆண்டுக்கான கவர்னர் உரையில், இலவசங்கள் அள்ளித் தெளிக்கப்பட்டதை அகில இந்தியாவும் ஆச்சரியமும், கிண்டலும் கலந்த உணர்வுடன் கவனித்து, கருத்துக்களை வெளியிட்டுள்ளது. பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்று, "தமிழக அரசின் நல்வாழ்வுத் திட்டம் எனும் போர்வையிலான இலவசங்கள், ஒரு கடிதம் அதன் உறையை விட பெரிதான தாளில் எழுதப்பட்டு, அந்த உறையினுள் திணிக்க முடியாத அளவு உள்ளது' என கிண்டலடித்துள்ளது. அதாவது, பட்ஜெட்டில் பணம் இருக்காது எனக் கூறுகிறது இந்தப் பத்திரிகை.
பொருளாதார நிபுணர்களும், சமூக, அரசியல் ஆய்வாளர்களும், "ஓட்டு வங்கி அரசியலின் உச்சக்கட்டம்' என, இந்த இலவசங்களை குறிப்பிட்டு, தங்கள் கவலையை வெளிப்படுத்துகின்றனர். மத்திய அரசின் 2001ம் ஆண்டு கணக்குப்படி, தமிழகத்தில் 36 லட்சத்து 32 ஆயிரத்து 119 குடும்பங்கள் தான் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவை. ஆனால், ஜூன் 16, 2008 கணக்குப்படி, தமிழக அரசு, 59 லட்சத்து 55 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவச, "டிவி' அனுமதித்துள்ளது. இது மேலும் அதிகரிக்கப் பட்டு, ஏழைகள் மட்டுமின்றி, கலர் "டிவி' இல்லாத எல்லாருக்கும் இலவச, "டிவி'க்கள் வழங்கப்படும் எனவும் அறிவித்து விட்டனர். தி.மு.க., ஆட்சிக் காலங்களில் அளிக்கப்பட்ட அதிகமான சம்பளம் மற்றும் சலுகைகள் விளைவாக தமிழக அரசின் துண்டு விழும் பட்ஜெட்டில் கணிசமான பகுதி, அரசு ஊழியர் சம்பளம் சார்ந்த செலவுகள். அதாவது, 2008-09ம் ஆண்டுக்கான இறுதி பட்ஜெட் மொத்த செலவினம் 55,402 கோடியே 56 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய். இதில், 24 ஆயிரத்து 358 கோடி ரூபாய், அரசு ஊழியர், ஆசிரியர் மற்றும் பல அரசு திட்டங்களில் பணிபுரிபவர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியம் சார்ந்த செலவினங்கள். இது, பட்ஜெட்டில் 52 சதவீதம். உலகின் எந்த பணக்கார, நடுத்தர நாடுகளிலும் பட்ஜெட்டில் இவ்வளவு சதவீதம் ஊழியர் செலவினங்களுக்கு ஆவதில்லை.
இந்த முறை ஆட்சியமைக்கப்பட்டு, 44 மாதங்களில் தி.மு.க., அரசு அள்ளித் தெளித்த இலவசங்கள், சலுகைகள் அதிகமாகி, நமது பட்ஜெட்டில் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு அடிகோலும் கட்டமைப்பு வசதிகளுக்குத் தேவையான நிதி, அறவே அற்றுப் போகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. கடன் தள்ளுபடிகள், குறிப்பாக தொழில் தொடங்க வாங்கப்படும் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவது, அடுத்து கடன் பெறுபவர்கள் யாரும் கடனை திருப்பிச் செலுத்தாத மனநிலையை உருவாக்கும். இந்த அடிப்படை உண்மையை அரசு அதிகாரிகள் பல முறை அரசியல் தலைவர்களுக்கு, குறிப்பாக முதல்வர்களுக்கு எடுத்துக் கூறியிருக்கின்றனர். உயர் அதிகாரிகள் பலரும் முதல்வரின் கவனத்தைக் கவர, போட்டி போட்டு இலவசம் மற்றும் நடைமுறைக்கு ஒவ்வாத பல செலவினங்களை உருவாக்கி, நமது மாநில பொருளாதாரத்தை பாழடித்து விட்டனர்.
தமிழக அரசு தனது பட்ஜெட்டை, துண்டு விழாத வகையில் திட்டமிடல் வேண்டும். அரசு கடனுக்கு வட்டியாக, கடந்த ஆண்டு 6,227 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. கடன் தொகை 71 ஆயிரத்து 668 கோடி ரூபாயை தாண்டிவிட்டது. மக்களுக்கு பொது நன்மைகளும், பின்வரும் சந்ததியினருக்கு வளமான வாழ்க்கைத் தரமும் உருவாக, ஏழைகள் நிறைந்த ஒரு நாட்டில் இரண்டு துறைகள் சிறப்பாக கவனிக்கப்பட வேண்டும். அவை, கல்வி மற்றும் சுகாதாரத் துறைகள். கல்வியில் சமச்சீர் எனும் திட்டத்தை தவறாக புரிந்து கொண்டு, கல்வியின் தரத்தை உயர்த்தாமல், எல்லா பாடத் திட்டங்களையும் சரிசமமாக்கி, தரமான கல்வியை அழித்தொழிக்கும் நடைமுறைகள் ஆரம்பமாகியுள்ளன.
சுகாதாரத்தைப் பொறுத்தவரை, அரசு மருத்துவமனைகள் மற்றும் அடித்தட்டு கிராம சுகாதார மையங்களை வலுப்படுத்தாமல், தனியார் மருத்துவமனைகளை வளப்படுத்தும் காப்பீட்டுத் திட்டத்தை அரசு ஊக்கப்படுத்துகிறது. கிராமப்புறங்களில் 2001ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின் படி, 21 லட்சம் வீடுகள், "தற்காலம்' என பெயரிடப்படுகின்றனவாம். அவை கூரை மற்றும் மண் சுவர்களால் ஆன வீடுகளாம். அவற்றை நிலையான குடியிருப்புகளாக ஆறு வருடங்களில் மாற்றப் போவதாக, "கலைஞர் வீட்டு வசதி திட்டம்' அறிவிக்கிறது. இத்திட்டத்தில் ஒரு கூரை வீட்டிற்கு 60 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்; கான்ட்ராக்ட் கிடையாது; வீட்டின் சொந்தக்காரரே தனது வீட்டை கான்கிரீட் வீடாகக் கட்டிக்கொள்ள இத் தொகை வழங்கப்படுமாம். நடைமுறைக்கு ஒத்துவராத ஏட்டுச் சுரைக்காய் திட்டம் இது என்பதற்கு, இதை விட சிறந்த காரணம் கிடையாது. மத்திய அரசின் திட்டமான இந்திரா காந்தி குடியிருப்புத் திட்டத்தை பின்பற்றி இத்திட்டம் அமைக்கப்படுகிறது என்பதால், கட்டுமானப் பொருட்களை அரசின் ஊராட்சி அதிகாரிகள் வாங்கி, கூரை வீட்டு ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்ட அளிப்பார்களாம். இப்பொருட்கள் வாங்க கமிஷன் உண்டல்லவா?
அடுத்து பயனாளிகள் தேர்வு, ஓட்டு வங்கி முறையை பின்பற்றி அடிமட்ட கட்சித் தொண்டர்களால் நடத்தப்படுமா எனும் கேள்வி எழுகிறது. சமத்துவபுரம், காஸ் அடுப்புகள், கலர் "டிவி' வினியோகம் தந்த அனுபவப்படி, கீழ்மட்ட கட்சியினர் தயாரித்த பட்டியல்படி பயனாளிகள் தேர்வு இருக்கும் என, இப்போதே கிராமத்து மக்கள் முணுமுணுக்கின்றனர். எல்லாவற்றையும் விட, மூன்று ஆண்டுகளில் நடந்த இலவசங்களினாலான செலவுகள், நமது பொருளாதாரத்தை வெகுவாக பாதித்துள்ளதை மத்திய அரசு இந்த மாதம் வெளியிட்டுள்ள, "ஸ்டேட் டொமஸ்டிக் ப்ராடக்ட்' எனும் மாநில பொருளாதார வளர்ச்சி குறியீடு வெளிப்படுத்துகிறது.
இதற்கு முழுப் பொறுப்பும், வளர்ச்சித் திட்டங்களை வகுக்காமல், ஓட்டு வங்கி அரசியலுக்காக இலவசங்களை அள்ளித் தெளிக்கும் மாநில அரசே! இது பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லாமல், வரும் நிதி ஆண்டில் 1,800 கோடி ரூபாயில் இலவச கான்கிரீட் வீடுகள், 400 கோடியில் நவீன சட்டசபை வளாகம், புதிய நூலகம் போன்றவற்றை உருவாக்குகின்றனர். "இப்படி நிறைய செலவுகளை செய்த பின்னர், அவைகள் சரியாக நடக்கின்றனவா என்பதை பற்றி விவாதித்து, குறைகளை திருத்துவதற்காகத்தான், மக்களுக்காக மக்கள் பணத்தில் இந்த நவீன சட்டசபை வளாகம் அமைக்கப்படுகிறது' என, ஜால்சாப்பு வேறு. கிராமப்புறங்களில் திட்டங்கள் நிறைவேறுவதை கிராமப்புறங்களில் நேரடியாக தணிக்கை செய்யாமல், சென்னையில் பளபளக்கும் நவீன அடுக்கு மாடிக் கட்டடங்களில் விவாதித்து மேற்பார்வையிடுவார்களாம். வாழ்க ஓட்டு வங்கி அரசியல்!
கட்டுரையாளர் : என்.முருகன், சமூகவியலாளர், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி
ஜனவரி 10, 2010 அன்று "தினமலர்" இணையதளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரை.
2 comments:
சுட்ட பழம்? but it is a good one.
வருகைக்கும், பின்னூட்டத்திற்க்கும் மிக்க நன்றி சித்ரா!
சுட்ட பழம் தான்... கட்டுரையை எழுதியவர் பெயரை குறிப்பிட்டுள்ளேனே! ^_^
Post a Comment