Pages

உலக கோப்பையை வென்றது இந்தியா!

பஞ்சாப், லூதியானாவில் நடந்த கபடி உலக கோப்பையின் இறுதி ஆட்டத்தில், இந்திய அணி பாகிஸ்தான் அணியை 58-24 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.


இந்திய அணியின் தலைவர் மங்கத் சிங் மாங்கி சிறந்த தடுப்பாட்டக்காரர் விருதினைத் தட்டி சென்றார்.  அவருக்கு ஒரு டிராக்டர் (Tractor) பரிசாக வழங்கப்பட்டது.

கனடா நாட்டு அணி, இத்தாலி அணியை 66-22 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி மூன்றாவது இடத்தை பிடித்தது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஈரான் உட்பட 10 நாட்டு அணிகள் இந்த உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்றன.


முத‌ல் இட‌ம் பிடித்த‌ இந்திய‌ அணிக்கு, இந்திய‌ ரூபாய் மதிப்பில் ஒரு கோடிக்கான காசோலையும் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டது. இர‌ண்டாம் இட‌ம் பிடித்த‌ பாகிஸ்தான் அணிக்கு 51 ல‌ட்ச‌மும், மூன்றாம் இட‌ம் பிடித்த கனடா அணிக்கு 25 ல‌ட்ச‌மும், நான்காம் இட‌ம் பிடித்த இத்தாலி அணிக்கு 10 ல‌ட்ச‌மும் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டது.

குருநானக் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டியை காண‌, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில அரசின் உயர் தலைவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், மற்றும் திரளான பொதுமக்கள்(!??!@#$) வந்திருந்த‌ன‌ர்.

இறுதி போட்டியை க‌ண்டு க‌ளித்த‌ ப‌ஞ்சாப் முத‌ல்வ‌ர் பிர‌காஷ் சிங் பாத‌ல், வெற்றி பெற்ற‌ இந்திய‌ அணி வீர‌ர்க‌ளுக்கு, அர‌சு ப‌ணி வ‌ழ‌ங்க‌ப் ப‌டும் என அறிவித்தார்.

அடுத்த‌ உல‌க‌ கோப்பை போட்டிக‌ள், மேம்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ விளையாட்டு அர‌ங்க‌ங்க‌ளில் ந‌ட‌த்த‌ப் ப‌டும் என்றும் அவ‌ர் தெரிவித்தார்.

பஞ்சாப் மாநிலத்தின் பாரம்பரிய விளையாட்டான கபடியை மேம்படுத்த எல்லா நடவடிக்கைகளையும் அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து முயற்சி மேற்கொள்ளப் பட்டு வருவதாக துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல் தெரிவித்தார். இந்த ஆண்டின் இறுதியில் எட்டு நாடுகள் பங்கு பெறும் பஞ்சாப் தங்க கோப்பை ஹாக்கி போட்டிகள் நடத்தப் படும் என்றும் அவர் தெரிவித்தார்.

வெற்றி பெற்ற இந்திய அணிக்கும், பாரம்பரிய விளையாட்டை ஊக்குவித்து, உலக கோப்பையை வெற்றிகரமாக நடத்திக் காட்டிய பஞ்சாப் மாநில அரசுக்கும் பாராட்டுக்கள்!

"மறத் தமிழரின் வீர விளையாட்டு சடுகுடு. கபடி என்ற சொல்லே, கை‍‍-பிடி என்பதன் மூலம்தான்" என "விக்கி" கூறுகிறது. ஹாக்கி, கபடி, பாரம்பரிய கிரிக்கெட் என எதுவாகிலும் சர்தார்ஜிக்கள் முன்னிலையில் இருக்கின்றனர். நாம் சர்தார்ஜி ஜோக்குகளை பரிமாறிக் கொள்வதில் முதலில் இருக்கிறோம்!


கபடி….கபடி….


எல்லாருக்கும் வணக்கமுங்க!

ரொம்ப நாளாகி விட்டது, பதிவுலகம் பக்கம் வந்து! நேரமில்லை என்றெல்லாம் பொய் சொல்ல விரும்பவில்லை. எழுதுவதற்க்கு மனம் வரவில்லை. எது நடந்தாலும், அடுத்த சில மணி நேரங்களில், 100 பதிவுகளைக் காணமுடிகிறது. புதிய படம்  வெளிவந்த சில மணி நேரங்களில், அதன் திரைப் பார்வைகள் Tamilish மற்றும் தமிழ் மணத்தின் முதல் பக்கங்களை நிரப்பி விடுகிறது. வலைப் பதிவர்களின் வேகம் வியக்க வைத்தாலும், ஊடகங்கள்தான் பரபரப்புக்காக, வியாபாரத்திற்க்காக செய்திகளை வெளியிடுகின்றன. வலைப் பதிவர்களும் அந்த பாதையில் செல்வது வருத்தமாக உள்ளது.  அதில் ஒரு கடைக் கோடியில் இருப்பதை நினைத்து பெருமையாக இருக்கிறது.

ஒட்டு மொத்த இந்தியாவே, IPL என்னும் பேஸ்பால் (BaseBall) விளையாட்டில் தங்கள் சுக துக்கங்களை மறந்துவிட்டு, கிறங்கி கிடக்கிறது. ஒரு வழியாக வெளி நாட்டினர், இந்தியா வந்து வேலை தேடும் சூழலை உருவாக்கி விட்டோம். வல்லரசாகி விட்டோம் என்று பெருமைப் பட்டுக்கொண்டு, பாரம்பரிய விளையாட்டுக்களை தொலைத்து விட்டோம். மாவோஸ்டுகளின் கொடூர தாக்குதல்களைக்  கூட ஐபில் போட்டிகள் முழுங்கி விட்டதுவோ என்று எனக்கு சந்தேகம்!  

கபடி (தூய தமிழில் ”சடுகுடு”) என்று ஒரு விளையாட்டு நினைவிருக்கிறதா? நல்ல வேளையாக விஜய் ஒரு படம் நடித்து, இன்றைய பள்ளி குழந்தைகளுக்கு நினைவூட்டினார். இன்றைய கிராமங்களில் கூட இது இருக்கிறதா என்று தெரியவில்லை. இதற்கு உலக கோப்பை நடந்துக் கொண்டிருக்கிறது, அதுவும் நமது இந்தியாவில்.  இன்றைய தினம் (12-ஏப்ரல்-2010) கபடிக்கான உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில், இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன.

IPL-போட்டிகளினால் மிகவும் வலிமைவாய்ந்த திரைஉலகமே ஆடிப் போயிருக்கும் நிலையில், கபடிப் போட்டிகள் எம்மாத்திரம். எந்த ஊடகமும் இது பற்றிய செய்தி்களை ஒளிபரப்பியதாக தெரியவில்லை. கூகிளாண்டவர் கூட மிக குறைவான தகவல்களையே தருகிறார். சரி விஷயத்திற்க்கு வருவோம்.


logo_WCCS
கபடி உலக கோப்பை, பஞ்சாப் மாநில அரசு உதவியுடன், பஞ்சாப்பின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 10 நாடுகளின் அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில், இந்தியா முதல் பிரிவில் (”A” Group) முதலிடத்தையும், பாகிஸ்தான் இரண்டாவது பிரிவில் (”B” Group) முதலிடத்தையும் பிடித்து திங்கள் மாலை லூதியானாவில் இறுதிப் போட்டியில் சந்திக்கின்றன.

முதல் பரிசை வெல்லும் அணிக்கு ஒரு கோடி இந்திய ரூபாய்கள் பரிசாம்.
கபடி என்பது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு என்று கூறுவார்கள். ஆனால் தமிழ் கலாசாரக் காவலர்கள் என்றுக் கூறிக் கொள்பவர்களுக்கு இது பற்றியெல்லாம் தெரியுமா? நாம் நாள் தோறும் எள்ளி நகையாடும் சர்தார்ஜிக்கள், ஹாக்கியிலும், கபடியிலும் சிறந்து விளங்கி நமது பெருமையை நிலை நாட்டிக் கொண்டிருக்கிறார்கள். அணி வீரர்கள் பற்றிய எந்த ஒரு தகவலையும் தெரிந்து கொள்ள முடியவில்லை. யாருக்காவது தெரிந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.  இறுதிப் போட்டி, இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு, DD Sports Chennal-ல் ஒளிபரப்புகிறார்கள்.

 Kabaadi

முடிந்தால் இதையும் தான் பாருங்களேன்!!

கபடி மற்றும் உலகக் கோப்பை பற்றிய செய்திகளை அறிந்து கொள்ள, http://www.kabaddi.org/

கபடிக்கான ட்வீட்டர்(Twitter) பக்கம், http://twitter.com/kabaddiorg