Pages

ஆரவாரமில்லாமல், அழகான வெற்றி

Celebrations were restrained - "subdued" - 1952-ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் முதல் வெற்றி குறித்து, கிரிக்கெட்டின் பைபிளான "விஸ்டன்" இதழ் இப்படித்தான் வர்ணித்தது. அதே வர்ணனையைத்தான் சென்ற வாரம் 100‍வது வெற்றியின் போதும் கூறியிருக்கிறது.

IndianTeam57 ஆண்டுகள், 432 டெஸ்ட் போட்டிகளுக்குப் பிறகு நூறாவது வெற்றி பெறும் ஆறாவது அணி. ஆஸ்திரேலியா (199 போட்டிகளில்), இங்கிலாந்து (241), மேற்க்கிந்தியத் தீவுகள் (266), தென்னாப்பிரிக்கா (310), பாகிஸ்தான் (320) ஆகிய அணிகள் முன்பே பட்டியலில் நூறு வெற்றிகளை ருசித்து விட்டன.

மிக மெதுவாகத் தான் 100-வது வெற்றியை பெற்று இருந்தாலும், கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் வெற்றி விகிதம் அதிகம். பங்கேற்ற 102 போட்டிகளில், 39‍-ல் வெற்றி பெற்று, 36 சதவிகித வெற்றி விகிதத்தை கண்டுள்ளது. முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் இது இரண்டு மடங்கு அதிகமாகும். 2000-ஆம் ஆண்டுக்கு முன் பங்கேற்ற 330 போட்டிகளில் 61‍ல் மட்டுமே (வெற்றி விகிதம் 18.48%) வெற்றி பெற்றுள்ளது. இந்த நூற்றாண்டில் முதல் முறையாக தோல்வி விகிதத்தை (1.44%) காட்டிலும் வெற்றி விகிதம் அதிகரித்துள்ளது.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் விஜய் காசேரே தலைமையிலான இந்திய அணி, டொனால்டு கார் தலைமையிலான இங்கிலாந்து அணியை வென்று முதல் முறையாக தொடரை சமன் செய்தது. அதற்குப் பிறகு முதல் முறையாக‌ தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

இந்தியா போன்ற ஒரு நாட்டில், ஒருங்கிணைந்த அணியை உருவாக்குவது என்பது எளிதல்ல என்பது அனைவரும் அறிந்ததே! பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்வேறு கலாச்சாரங்கள் கொண்ட வீரர்கள் இணைந்து விளையாடி வெற்றி பெற்றிருக்கிறார்கள். இனமான உணர்வு கொண்டு பிரித்தாட வேண்டும் என்று நான் குறிப்பிட வில்லை. "வேற்றுமையில் ஒற்றுமை" என்ற நமது தத்துவம் மீண்டும் ஒரு முறை வெற்றி பெற்றிருக்கிறது.

முதல் இடத்தைப் பிடிக்க, கடந்த பத்தாண்டுகளில் அணியை திறம்பட நிர்வகித்த கேப்டன்களை பாராட்டியே ஆக வேண்டும். நீண்ட இடைவேளைக்குப் பின்னர், செளரவ் கங்குலி தலைமையில் தான், அணி ஒருங்கிணைந்து செயல்பட்டு பல வெற்றிகளை குவித்தது. அவரது வழியில், ராகுல் திராவிட்டும், கும்ளேவும் சிறப்பாக வழி நடத்தி அணியை பலப்படுத்தினார்கள். வந்தார் தோனி! என்ன மாயமோ தெரியவில்லை. இவர் தொட்டதெல்லாம் வெற்றியாகிறது. 20 ஓவர் உலகக் கோப்பை வெற்றிக்கு பின்னர், ஒரு நாள் போட்டிகளிலும் வெற்றியை குவித்தவர், இது வரை டெஸ்ட் போட்டிகளில் தோல்வியைக் கண்டதில்லை. இவரது தலைமையில் இந்திய அணி 10 போட்டிகளில் 7-‍ல் வெற்றி பெற்று சாதனைகளை படைத்து வருகிறது.

1933‍-ல் முதல் முதலாக மும்பையில் உள்ள பான்பரா மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற இந்திய அணி, தந்து 101‍-வது போட்டியிலும் அதே மைதானத்தில் வெற்றி பெற்று, உலகின் முதன்மை அணியாக வாகை சூடியிருக்கிறது.

ஒரு சிறந்த அணியில் விளையாடியிருப்பதாக சச்சின் பெருமிதமடைகிறார். "ஒரு கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது. அனைத்து வீரர்களும், இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடியிருக்கிறார்கள், பேட்டிங், பௌலிங், பீல்டிங் என எல்லா துறையிலும் சிறப்பாக விளையாடியிருக்கிறார்கள்." என்று புகழாரம் சூட்டுகிறார் கவாஸ்கர்.

அடுத்த ஆறு மாதங்களில், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பங்கேற்கவிருக்கும் இந்திய அணி முதல் இடத்தை தக்க வைப்பது கடினமே! இருப்பினும் பணபலத்தில் மட்டுமல்ல, விளையாட்டிலும் நாங்கள் முதன்மையானவர்கள் என்று நிருபித்திருக்கும் வீரர்களை வாழ்த்துவோம்!

பி.கு: பிடிச்சிருந்தா ஓட்டு போட்டுட்டு போங்க! பிடிக்கலைனாலும்  ஓட்டு போட்டுட்டு போங்க! தமிழ் மணத்திலும், Tamilish-லும்

No comments: