Pages

இந்திய முடியரசு

 

சுதந்திரத்திற்க்கு முன்னால், இந்தியா பிரிட்டிஷ் ராஜ பரம்பரையின் கட்டுபாட்டில் இருந்தது. கிழக்கிந்திய கம்பெனிக்கு முன்னால், முகலாய அரசர் நாட்டை ஆண்டு வந்தார்கள். பல்வேறு பகுதிகளை குறுநில மன்னர்கள் ஆண்டு வந்தார்கள். ஒரே பரம்பரையின் வாரிசுகள் ஆட்சியில் இருந்ததுடன்,  மன்னர் குடும்ப உறவினர்கள், மன்னர் குடும்ப விசுவாசிகளையே முக்கிய பதவிகளில்  நியமித்து, ஆட்சிக்கு எந்த பிரச்சனையையும் வராமல் பார்த்துக் கொண்டார்கள். இவையெல்லாம் நாம் பள்ளி பாடப்புத்தகத்தில் படித்தவைகள். அதோடு, இந்தியாவில் நடைபெறுவது மக்களாட்சி என்று சொல்லி, மக்களால், மக்களுக்காக நடத்துபடும் அரசு என 2 மதிப்பெண் வினாவில் கேட்பார்கள்.

முடியாட்சிக்கும், குடியாட்சிக்கும் முக்கய வேறுபாடாக குறிப்பிடப்படுவது, ஆட்சியின் அதிகாரவர்க்கத்தினை மக்கள் நிர்ணயிக்கலாம் என்பது மட்டும்தான். இன்றைய இந்தியா குடியரசுவாக அறிவிக்க பட்டு, 60 ஆண்டுகளை நிறைவுசெய்துவிட்டோம்.  இன்றைக்கும், நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் குறிப்பிட்ட சில குடும்பங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திவருகின்றன. ஒவ்வொரு அமைச்சரும் தங்களை ஒரு குறுநில மன்னராகவே நினைத்துக் கொண்டு, தங்கள் பகுதிகளில், தங்கள் துறைகளில் அதிகாரத்தை பறக்கவிடுகின்றனர்.

மத்திய ஆட்சியை பொறுத்தவரை, நேரு குடும்பத்திற்க்கு இன்னும் 100 ஆண்டுகளுக்கு எழுதி கொடுத்தாகிவிட்டது. காங்கிரஸ் கட்சியின் கடைக்கோடி குடிமகன், பிரியங்காவின் மகனுக்கு கொடி பிடிக்க இப்போதே தயாராகி விட்டான். ஜவகர்லால் நேருவின் தந்தை மோதிலால் நேரு, மனைவி கமலா நேரு இவர்கள் இருவரையும் தவிர்த்து பார்த்தால், நேரு குடும்பத்தில் மட்டும் 17 நபர்கள் சுதந்திர இந்தியாவின் அரசியல் அதிகாரங்களில் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள்.

இந்திரா காந்தி, ஃப்ரோஸ் காந்தி, சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா, மேனகா காந்தி, வருண் காந்தி என ஒட்டுமொத்த நேரு குடும்பங்கள் அரசியலில் ஆதிக்கம் செலுத்துகின்றன. நேரு குடும்ப அடிவருடிகள் நாட்டின் ஆட்சி அதிகாரங்களில் அமர்ந்து ஊழலில் திளைக்கின்றனர். மக்களாட்சியின் மாண்புகள் காற்றில் பறக்கவிடப்பட்டு, ஊடகங்களும், நேரு குடும்ப அடிமைகளாகிவிட்டனர்.

மத்திய அரசில்தான் இந்த நிலை என்றால், மாநிலங்களிலோ குறுநில மன்னர்களின் குடும்பங்கள் செய்யும் அக்கிரமங்கள் கணக்கிலடங்காதவை.  மாநிலத்திற்க்கு ஒரு கட்சியை ஏற்படுத்தி, தங்கள் குடும்ப உறுப்பினர்களை எல்லா பதவிகளிலும் உட்கார வைத்து, மக்களின் வரிப்பணத்தை குவித்துவிடுகின்றனர். தமிழ்நாடு உட்பட  இந்தியாவின் 11 மாநிலங்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் அதிகாரத்தில் உள்ளனர்.

ஆந்திரா – N.T.ராமாராவ் குடும்பத்தினர், Y.S.ராஜசேகர ரெட்டி குடும்பத்தினர்

பீகார் – அனுராக் நாராயணன் குடும்பத்தினர், லாலுபிரசாத் யாதவ் குடும்பத்தினர், லலித்  நாராயணன் மிஷ்ரா குடும்பத்தினர்

பஞ்சாப் – பிரதாப் சிங் கைரோன் குடும்பத்தினர், ஆச்சார் சிங் சிங்கால் குடும்பத்தினர்

காஷ்மீர் – ஷேக் அப்துல்லா குடும்பத்தினர், குலாம் முகமது ஷா குடும்பத்தினர், முப்தி முகமது சயீத் குடும்பத்தினர்

மகாராஷ்டிரா – பால் தாக்கரே குடும்பத்தினர், சரத் பவார் குடும்பத்தினர், கணேஷ் நாயக் குடும்பத்தினர்

உத்திரப் பிரதேசம் – சவுத்ரி சரண் சிங்(முன்னாள் பிரதமர்) குடும்பத்தினர்

கேரளா – கருணாகரன் குடும்பத்தினர்

ராஜஸ்தான் – பல்தேவ் ராம் மிர்தா குடும்பத்தினர்

மத்தியப் பிரதேசம் – விஜயராஜீ சிந்தியா (ராஜ பரம்பரை) குடும்பத்தினர்

ஹரியாணா – ரண்பீர் சிங் கூடா குடும்பத்தினர்

ஒரிஸ்ஸா – பிஜூ பட்நாயக் குடும்பத்தினர்

இதில் தமிழ்நாட்டை தேடாதீர்கள். நமது கதை ஊருக்கு வெளிச்சம். வட  இந்திய ஊடகங்கள் ஒவ்வொரு முறையும் கருணாநிதி குடும்ப வரைபடம் இல்லாமல் நிகழ்ச்சியை தொடங்குவதே இல்லை. மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு குடும்பத்திற்க்கும், மிகப் பெரிய வரைபடம் உண்டு. முழு விபரத்திற்க்கு சுட்டி

ஒவ்வொருவரின் குடும்பத்திலிருந்தும் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் முதலமைச்சர், அமைச்சர், சட்ட மன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.  காங்கிரஸ் மட்டுமன்றி பாரதிய ஜனதா கட்சி, ஜனதா தளம், இவ்வளவு ஏன் இடதுசாரி கட்சிகளிலும் தஞ்சம் அடைந்து ஒரே குடும்பம் வழிவழியாக அதிகாரங்களை அனுபவித்து, மக்களை சுரண்டி வருகிறார்கள்.

தேர்தலில் யார் நிற்கவேண்டும், யார் அமைச்சராக வேண்டும், யார் எந்த துறை என்று நிர்ணயிப்பது எல்லாமே இந்த சில குடும்பங்கள்தான்.  நீங்களும், நானும் வாக்களித்தால் இவர்களில் யாரேனும் ஒருவருக்குத் தான் வாக்களிக்க வேண்டும்.

ஒரு சில குடும்பங்களால், குடும்ப உறுப்பினர்களுக்காக   நடத்தப்படும் குடும்ப குறுநில மன்னர்களின் ஆட்சியே இங்கு நடைபெற்று வருகிறது!

இப்போது சொல்லுங்கள் இந்தியா குடியரசுவா, முடியரசா?

(நன்றி  விக்கிப்பீடியா

http://en.wikipedia.org/wiki/Political_families_of_India

http://en.wikipedia.org/wiki/Nehru-Gandhi_family

சுயவிளம்பர மோகம்

 

வணக்கம் நண்பர்களே,

இரண்டு மாதங்களுக்கு முன், விடுமுறையில் இந்தியா சென்றிருந்தபோது, பல உறவினர்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டியிருந்ததால், நிறைய சன்னலோர பேருந்து பயணம். சுகமானதாகத் தான் இருந்தது. ஆனால் இரண்டு விஷயங்கள் ஒருவித பீதியையும், மன வேதனையையும் கொடுத்தது. அதில் முதல் விஷயம் பற்றிய பதிவுதான் இது….

அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், திரை நட்சித்திரங்களுக்கு போட்டியாக வெகுமானப்பட்ட நம்ம பொதுஜனமும் புகழுக்காக விளம்பரம் யுத்தத்தில் குதித்துவிட்டதை நினைத்து புளகாங்கிதம் அடைந்தேன்.

தமிழகத்தில், தொண்ணூறுகளின் இறுதிவரை திரைப்பட சுவரொட்டிகள் தவிர, தனியார் நிறுவனங்களின் விளம்பர சுவரொட்டிகளை மட்டுமே காண இயலும். அது போக திரைப்பட நடிகர்களின் ரசிகர் பெருமக்கள், தங்கள் கதாநாயகனின் புதுப் படத்தைப் பற்றி சுவர்களில் எழுதிவைப்பார்கள். தேர்தல் வரும் போது அந்த சுவர்களையெல்லாம் (அனுமதியின்றியே) அரசியல் கட்சிகள் ஒட்டு மொத்த குத்தகை எடுத்துவிடும்.

”விளம்பரம் செய்யாதீர்” என்று எழுதிவைத்தாலும், அறிவிப்பை மட்டும் விட்டுவிட்டு, சுற்றி விளம்பரம் எழுதிவைப்பார்கள். துணியால் அல்லது ஸ்கீரின் பிரிண்டிங் முறையில் எழுதப்பட்ட பேனர்களை விழாக்காலங்களில் பார்க்கலாம். ரசிக கண்மணிகளால் வைக்கப்படும் பேனர்கள்/கட் அவுட்கள், திரையரங்குகள் இருக்கும் பகுதிகளில் மட்டுமே காணக் கிடைக்கும். தனியார் வர்த்தக  நிறுவனங்களால் வைக்கப்படும் விளம்பர தட்டிகள் விழாக்காலங்கள் அல்லது ஆடி தள்ளுபடி நாட்களில் மட்டுமே இருக்கும். இவை தவிர, நெடுஞ்சாலைகளில், ஊருக்கு வெளியில் தகரத்தில் செய்யப்பட்ட மெகா வடிவ விளம்பரங்களை வைத்திருப்பார்கள்.

பள்ளி விடுமுறையில், முதன்முறையாக சென்னை வந்தபோது, சாதாரண நாட்களில் கூட மெகா விளம்பரங்களை பார்த்து வியந்திருக்கிறேன். குறிப்பாக அண்ணா மேம்பாலத்தை சுற்றிலும் இருந்த தனியார் நிறுவனங்களின் விளம்பர தட்டிகள் மற்றும் திரைப்பட விளம்பரங்களை வாய் பிளந்து ரசித்திருக்கிறேன். ஒரு வழியாக சென்னை உயர்நீதிமன்றம்  கடிவாளம் போட்டு, மழைக்காலத்தில் சாலையில் பயணிப்பவர்களின் வயிற்றில் பால் வார்த்தது.

ஆனால், இன்றோ எங்கு பார்த்தாலும் டிஜிட்டல் தொழில் நுட்பத்தின் தயவினால் ப்ளக்ஸ் பேனர்கள். ஒவ்வொரு பேருந்து நிறுத்தம், முச்சந்திகள், நாற்சந்திகள், கோவில் வாசலகள் என எங்கெங்கிலும் அரசியல்வாதிகள், திரை நட்சத்திரங்கள், தனியார் நிறுவனங்களையே மிஞ்சும் அளவுக்கு சாதாரண பாமரனின் விளம்பரங்கள்.

திருமண விழா, புது மனை புகுவிழா, பேரன்/பேத்திகளின் காதுகுத்துவிழா, இவ்வளவு ஏன் மஞ்சள் நீராட்டுவிழாவுக்கு கூட ஒட்டு மொத்த குடும்பத்தினரின் புகைப்படங்களோடு வாழ்த்தி ப்ளக்ஸ் பேனர்கள். ”வாழ்த்தும் அன்பு நெஞ்சங்கள்” என 20 பேரின் புகைப்படங்கள் அலைபேசி சகிதம், குறிப்பாக அடைமொழிகளோடு. மணமகன் அல்லது மணமகள் அலைபேசியை வைத்துகொண்டு, விதவிதமான வடிவங்களில் மெகா அளவு விளம்பரங்கள். 

திருவாரூர்-மயிலாடுதுறை சாலையிலுள்ள கொல்லுமாங்குடி பேருந்து நிறுத்தத்தில் ஒரு பேனர் பார்த்து மயக்கம் போட்டு விழாத குறை. மணமகன், மணமகளுக்கு தாலி (சங்கிலி போன்ற) கட்டுவது போன்ற மிகப் பெரிய விளம்பரம். வழக்கம் போல வாழ்த்திய மணமகனின் நண்பர் வட்டாரம். சரி திருமணம் முடிந்துவிட்டது என நினைத்து தேதியை பார்த்தால், நான் பார்த்த நாளுக்கு, அடுத்த நாள்தான் திருமணம்.  நிச்சயமாக அந்த விளம்பரம், 5 நாட்களுக்கு முன்பாக அங்கே வைக்கப் பட்டிருக்க வேண்டும். 10 நாளைக்கு முன்பாக புகைப்படம் எடுத்திருப்பார்கள். ஒரு வேளை அந்த திருமணம் நடைபெறாவிட்டால் மணமக்களின் கதி???

அதைவிட மற்றுமொரு கொடுமையை மயிலாடுதுறைக்கருகே பார்க்க நேர்ந்தது. ”அம்மனுக்கு காவடி எடுக்கும் அன்பு உள்ளங்களை வாழ்த்துகிறோம்” என்றொரு ப்ளகஸ் பேனர். ஒவ்வொரு குழந்தையும் சிரித்த முகத்தோடு கையில் காவடிகளை வைத்து போஸ் கொடுத்து கொண்டிருந்தார்கள். காவடி விழா, ஒரு வாரம் கழித்தே நடைபெற இருப்பதாக விளம்பரம் சொல்லியது. தாத்தா, பாட்டி, மாமா, அத்தைகள் என்று ஒரு பெரிய குடும்பமே மகழ்ச்சியாக சிரித்து கொண்டிருந்தார்கள். என்ன கொடுமையென்று இதை சொல்வது. இறைவனுக்கு செய்யும் நேர்த்திக் கடனுக்குமா விளம்பரம்?

கொட்டிய மழைக்காக ATM மையத்தில் ஒதுங்கி நின்றிருந்த நான் திருவாரூரில் கண்ணெதிரே கண்ட காட்சி.   இரவு 9 மணிக்கு, முக்கிய சாலையான பனகல் சாலையில் அந்த   மெகா விளம்பர தட்டி,  கொட்டிய மழையில் விழுந்துவிட்டது. அதை சரி செய்த போக்குவரத்து காவலர் செய்த வசவுகள் அந்த குடும்பத்தின் ஏழேழு தலைமுறையையும் சென்றடையும். விளமபரத்தில் இருந்த மணமக்களை மட்டுமல்லாமல், அதை ப்ரிண்ட் செய்த விளம்பர நிறுவனம், அனுமதியளித்த காவல்துறை உயரதிகாரிகள் என அனைவரையும் கொச்சையாக திட்டிக் கொண்டிருந்தார். அவர்களின் வாழ்த்துக்கள் விரயமானதோடு, பணமும் விரயமானதுதான் மிச்சம்!

இது போதாதென்று, உள்ளூர் தனியார் அலைவரிசைகளில்( Local Cable TV Channels) , எல்லாவற்றிற்க்கும் வாழ்த்து சொல்லி 5 முதல் 10 நிமிடம் வரை விளம்பரங்கள். ஒவ்வொருவரின் உறவுமுறைகளோடு, பல்வேறுவித அடைமொழிகளோடு, குடும்பத்தினரின் ஒட்டு மொத்த புகைப்படங்கள்.  ஒரு குடும்ப விழாவுக்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்களை அழைப்பிதழ் கொடுத்து அழைப்பது நமது மரபு. பிறகு இந்த விளம்பர தட்டிகளை வைத்து யாருக்காக தம்பட்டம் அடிக்கீறிர்கள்?  யாருடைய மனம குளிர தங்கள் வாழ்த்துக்களை ஊருக்கே அறிவிக்கிறார்கள்? இதைப் பார்த்து வெறுப்படைந்து என் போன்றவர்கள் சாபம் விட்டால் அது யாரை சென்றடையும்?

விளம்பர தட்டிகளை 5 நாட்களுக்குள் எடுக்க வேண்டுமென்று சட்டத்தை பெரு நகரங்களில் மட்டுமே செயல்படுத்த முடியும். சிறிய ஊர்கள், குறிப்பாக ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் இருக்கும் தனியொரு மனிதனின் ஒராயிரம் விளம்பரங்களுக்கு யார் கடிவாளம் போடுவது? அதன் கீழ் மழைக்கு ஒதுங்கி நிற்க்கும் பொதுஜனத்தின் உயிருக்கு யார் காப்பீடு தருவது?

அரசாங்கமா? அனுமதியளித்த காவல்துறை / நகராட்சி / ஊராட்சி துறையா? விளம்பரத்தை வைத்த நிறுவனம்? வாழ்த்தும் அன்பு நெஞ்சங்கள்? அல்லது அந்த மணமக்கள்? உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம்!