Pages

ரஜினியை வாழ்த்துவதால் மானம் போய்விடுமா?

 

நம்மாளுங்களை 2 வகையா பிரிக்கலாம்.. தமிழினம்தான் எல்லாத்துலயும் சிறந்ததுன்னு சொல்லிட்டே இருக்கிற தற்பெருமை உள்ளவர்கள்..  நம்மளை  நாமளே கேவலபடுத்திக்கிற, தாழ்த்திக்கிற தாழ்வு மனப்பான்மை உள்ளவங்க...

பெரும்பாலும், எல்லாரிடம் இந்த இருவேறு குணங்கள் பச்சோந்தி மாதிரி, இடத்திற்க்கு தகுந்தார் போல், நேரத்துக்கு தகுந்தார் போல் மாறி மாறி வந்துகொண்டே இருக்கும். அதே மாதிரி சில குறிப்பிட்ட நிகழ்வுகளை, நமக்கு நாமே கேவலமானது எனக்கூறி கூனிக்குறுகுவது.

திரைக் கதாநாயகர்களுக்காக, காவடி எடுப்பது, அலகு குத்துவது போன்ற எல்லா மூடத்தனங்களும்  உலகமெங்கும் உண்டு... வட இந்தியர்கள், அரேபியர்கள், வெள்ளையர்கள் என எல்லாரும் இதை செய்து கொண்டேதான் இருக்கிறார்கள்... ஆனால் அவற்றின் வடிவங்கள் வேறு...

அமிதாப் மருத்துவனையில், அறுவைசிகிச்சைக்காக அனுமதிக்கபட்ட போது, மும்பை சித்தி விநாயகர் கோவில் உட்பட, வட இந்தியாவில் பல இடங்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.. சஞ்சய்தத் சிறையில் அடைக்கபட்ட போது, உண்ணாவிரதம் இருந்து பாத யாத்திரை செய்தவர்கள் பலர்... மாதுரியை வரைந்த ஹுசைன், மர்லின் மன்றோ உடையை பல கோடிகளுக்கு ஏலம் எடுத்த தொழிலதிபர்,  என பல வடிவங்களில் எல்லா மூடத்தனங்களும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன..

உலகத்தில் உள்ள எந்த நடிகர்களுக்கும் பேஸ்புக், ட்வீட்டர், ப்ளாக்கர், போன்றவற்றில் வாழ்த்து செய்திகள் சொல்லப்படுவதே இல்லையா?

ஆஜ் தக், ஸ்டார் ப்ளஸ் போன்ற சேனல்கள் பார்த்தால் மும்பையைத் தாண்டி வட இந்தியாவின் மற்ற ஊர்களில் என்ன நடக்கிறது என்று தெரியும். திரைப்பட நடிகர்களின் சொந்த விஷயங்களை மட்டுமே பல மணி நேரத்துக்கு செய்தியாக சொல்லும் ஒரு சில அலைவரிசைகள் இருக்கிறது என்றால் வட இந்தியர்கள் எப்படி தமிழனின் ரசனையை கிண்டலடிக்கலாம்?. அதற்க்கு நம்மவர்களும் எப்படி ஒத்து ஊதலாம்? வாரமலரில் மட்டும்தான் துணுக்குமுட்டை வருகிறதா, டைம்ஸ் ஆப் இந்தியாவில் வருவதில்லையா?

ராகுல் காந்தியின் புகைப்படம், பால்பேடா படையலையும், வாஜ்பாயின் புகைப்படம், லட்டு படையலையும், ஏற்றுக் கொள்ளும் என்றால், ரஜினியின் கட் அவுட் பாலாபிஷேகத்தையும் ஏற்றுக் கொள்ளும்.

மைக்கேல் ஜாக்சன் பிறந்தநாளில், மர்லின் மன்றோ பிறந்த நாளில் மெழுகுவர்த்தி ஏந்தி பொது இடங்களில் கூடி, பிரார்த்தனை செய்வது கூட மூட நம்பிக்கைதான்.

வெள்ளைக்காரன் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் போற மாதிரி, தமிழ்நாட்டுக்காரன் காவடி எடுத்துட்டு ஊர்வலம் போறான். வடிவம்தான் மாறுகிறதே ஒழிய, எல்லாமே மூட நம்பிக்கைகள்தான். மடத்தனம் தான்.

மைக்கேல் ஜாக்சன் மட்டுமின்றி, வில் ஸ்மித், ஜாக்கிசான், புருஸ்லி, அர்னால்டு, ஜெனிபர் லோபஸ், மர்லின் மன்றோ, ஜூலியா ராபர்ட்ஸ் போன்ற பல நடிகர்களின் டி ஷர்டுகள், அவர்களின் திரைப்பட ஸ்டில்கள், ஸ்டைல்கள் எல்லாவற்றையும் வெள்ளையர்கள், அரேபியர்கள் பலர் பயன்படுத்துவதை பார்த்திருக்கிறேன்...

அர்னால்டு, ஜாக்கிசான், ஜாக்சன் எல்லோருமெ ஒவ்வொரு துறையிலும் தனித்திறமை படைத்தவர்கள். ஒத்துக் கொள்கிறேன். அதே போல ரஜினிக்கும் சில திறமைகள் உண்டு என்பதை நீங்கள் ஒத்துக் கொண்டுதான் ஆகவேண்டும். அவருக்கு எந்த திறமையும் இல்லை என்று   நீங்கள் சொன்னால், இத்தோடு பதிவை மூடிவிட்டு, வேறு வேலையை பாருங்கள்.

அர்னால்டு படம் போட்ட டிஷர்ட் போட்டா படிச்ச மேதாவி, ரஜினி படம் போட்ட டிஷர்ட் போட்டா உங்களுக்கு பட்டி காட்டான்.. முட்டாப் பய.... 

ஜாக்கிசான், புருஸ்லீ, ஜாக்சன் படம் போட்ட டிஷர்ட்களை அவர்கள் போட்டுக் கொண்டு வந்தால், பாராட்டுவீர்களா?  ”பட்டிகாட்டானுக்கு பொழப்ப பார்த்தியா, ஜாக்சன் டிஷர்ட்டு! என்று கிண்டலடிப்பீர்கள்!

வெள்ளையர்கள், அரேபியர்கள், வட இந்தியர்கள்,  ஹாலிவுட், பாலிவுட் நட்சித்திரங்கள் படம் போட்ட டி-ஷர்ட் போடவே மாட்டார்களா?

டி காப்ரியோ வந்தால் அவர்கள் கூடி, ரோடு ப்ளாக் ஆகும். மோகன்லால் வந்தால் நம்மவர்கள் கூடி ரோடு ப்ளாக் ஆகும். (சமீபத்தில் பஹ்ரைனில் நடந்த்து).  இரண்டுமே கேவலமில்லை. அவரவர்களுக்கு பிடித்தத, அவரவர்கள் செய்கிறார்கள்.

காவடி எடுத்து, பாலாபிஷேகம் செய்பவர்கள், விழிப்புணர்வு இல்லாதவர்கள்.. படிப்பறிவு இல்லாதவர்கள், வியாபார நிறுவனங்களால் ஆட்டுவிக்கபடுகிறவர்கள்.. போலியான விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டவர்கள். தன்னிலை மறந்து போலி புகழுக்குப் பின்னால் அலைந்து திரியும் சாதாரண மனிதர்கள்.  திரைப்பட நாயகன் என்பதையும் தாண்டி, அவனை தலைவனாக ஏற்றுக் கொள்ள செய்தது சுயநலம் மிகுந்த வியாபாரிகள், அரசியல்வாதிகள்.

மன்மோகன் உலகிலேயே அதிகம் படித்த மேதைதான்... நடப்பது எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு, அமைதியாகத்தான் இருக்க முடிகிறதே தவிர, அவரின் பெயரால், அவரின் தலைமையின் கீழ் நடைபெறும் அரசின் தவறுகளை தடுக்க இயலாது. அதே போல, ரஜினியே நினைத்தாலும் சில விஷயங்களை தடுக்க இயலாது. அவரே நினைத்தாலும் அதிலிருந்து வெளிவருவதென்பது இயலாத காரியம்.

ஹாலிவுட்டில் செய்யாத எந்த பறக்கும் வித்தையையும், விஜய்யும், தனுஷும் செய்வதில்லை.  ஹாலிவுட்டில் எவ்வளவு பூ சுத்தினாலும் பார்க்க்கும் அறிவுஜீவிகள், தமிழ் படத்தில் மட்டும் லாஜிக் பேசுவார்கள்.

சில விஷயங்களை குறை சொல்லுவதை விட்டுவிட்டு  நிதர்சனத்தை புரிந்து கொண்டு, வெறுப்பை உமிழாதீர்கள்.

பின்குறிப்பு : இப்பதிவு பாலேபிஷேகம், காவடி எடுத்தல், மண் சோறு சாப்பிடுதல் போன்ற மூட நம்பிக்கைகளை ஆதரித்து எழுதப்பட்ட பதிவு அல்ல. வட இந்தியன் கிண்டலடிக்கிறான்.. வெள்ளைக்காரன் சிரிக்கிறான். மலையாளி  நக்கல் பண்றான் என்று பொருமுபவர்களுக்காக எழுதப்பட்ட பதிவு.

இந்திய முடியரசு

 

சுதந்திரத்திற்க்கு முன்னால், இந்தியா பிரிட்டிஷ் ராஜ பரம்பரையின் கட்டுபாட்டில் இருந்தது. கிழக்கிந்திய கம்பெனிக்கு முன்னால், முகலாய அரசர் நாட்டை ஆண்டு வந்தார்கள். பல்வேறு பகுதிகளை குறுநில மன்னர்கள் ஆண்டு வந்தார்கள். ஒரே பரம்பரையின் வாரிசுகள் ஆட்சியில் இருந்ததுடன்,  மன்னர் குடும்ப உறவினர்கள், மன்னர் குடும்ப விசுவாசிகளையே முக்கிய பதவிகளில்  நியமித்து, ஆட்சிக்கு எந்த பிரச்சனையையும் வராமல் பார்த்துக் கொண்டார்கள். இவையெல்லாம் நாம் பள்ளி பாடப்புத்தகத்தில் படித்தவைகள். அதோடு, இந்தியாவில் நடைபெறுவது மக்களாட்சி என்று சொல்லி, மக்களால், மக்களுக்காக நடத்துபடும் அரசு என 2 மதிப்பெண் வினாவில் கேட்பார்கள்.

முடியாட்சிக்கும், குடியாட்சிக்கும் முக்கய வேறுபாடாக குறிப்பிடப்படுவது, ஆட்சியின் அதிகாரவர்க்கத்தினை மக்கள் நிர்ணயிக்கலாம் என்பது மட்டும்தான். இன்றைய இந்தியா குடியரசுவாக அறிவிக்க பட்டு, 60 ஆண்டுகளை நிறைவுசெய்துவிட்டோம்.  இன்றைக்கும், நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் குறிப்பிட்ட சில குடும்பங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திவருகின்றன. ஒவ்வொரு அமைச்சரும் தங்களை ஒரு குறுநில மன்னராகவே நினைத்துக் கொண்டு, தங்கள் பகுதிகளில், தங்கள் துறைகளில் அதிகாரத்தை பறக்கவிடுகின்றனர்.

மத்திய ஆட்சியை பொறுத்தவரை, நேரு குடும்பத்திற்க்கு இன்னும் 100 ஆண்டுகளுக்கு எழுதி கொடுத்தாகிவிட்டது. காங்கிரஸ் கட்சியின் கடைக்கோடி குடிமகன், பிரியங்காவின் மகனுக்கு கொடி பிடிக்க இப்போதே தயாராகி விட்டான். ஜவகர்லால் நேருவின் தந்தை மோதிலால் நேரு, மனைவி கமலா நேரு இவர்கள் இருவரையும் தவிர்த்து பார்த்தால், நேரு குடும்பத்தில் மட்டும் 17 நபர்கள் சுதந்திர இந்தியாவின் அரசியல் அதிகாரங்களில் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள்.

இந்திரா காந்தி, ஃப்ரோஸ் காந்தி, சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா, மேனகா காந்தி, வருண் காந்தி என ஒட்டுமொத்த நேரு குடும்பங்கள் அரசியலில் ஆதிக்கம் செலுத்துகின்றன. நேரு குடும்ப அடிவருடிகள் நாட்டின் ஆட்சி அதிகாரங்களில் அமர்ந்து ஊழலில் திளைக்கின்றனர். மக்களாட்சியின் மாண்புகள் காற்றில் பறக்கவிடப்பட்டு, ஊடகங்களும், நேரு குடும்ப அடிமைகளாகிவிட்டனர்.

மத்திய அரசில்தான் இந்த நிலை என்றால், மாநிலங்களிலோ குறுநில மன்னர்களின் குடும்பங்கள் செய்யும் அக்கிரமங்கள் கணக்கிலடங்காதவை.  மாநிலத்திற்க்கு ஒரு கட்சியை ஏற்படுத்தி, தங்கள் குடும்ப உறுப்பினர்களை எல்லா பதவிகளிலும் உட்கார வைத்து, மக்களின் வரிப்பணத்தை குவித்துவிடுகின்றனர். தமிழ்நாடு உட்பட  இந்தியாவின் 11 மாநிலங்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் அதிகாரத்தில் உள்ளனர்.

ஆந்திரா – N.T.ராமாராவ் குடும்பத்தினர், Y.S.ராஜசேகர ரெட்டி குடும்பத்தினர்

பீகார் – அனுராக் நாராயணன் குடும்பத்தினர், லாலுபிரசாத் யாதவ் குடும்பத்தினர், லலித்  நாராயணன் மிஷ்ரா குடும்பத்தினர்

பஞ்சாப் – பிரதாப் சிங் கைரோன் குடும்பத்தினர், ஆச்சார் சிங் சிங்கால் குடும்பத்தினர்

காஷ்மீர் – ஷேக் அப்துல்லா குடும்பத்தினர், குலாம் முகமது ஷா குடும்பத்தினர், முப்தி முகமது சயீத் குடும்பத்தினர்

மகாராஷ்டிரா – பால் தாக்கரே குடும்பத்தினர், சரத் பவார் குடும்பத்தினர், கணேஷ் நாயக் குடும்பத்தினர்

உத்திரப் பிரதேசம் – சவுத்ரி சரண் சிங்(முன்னாள் பிரதமர்) குடும்பத்தினர்

கேரளா – கருணாகரன் குடும்பத்தினர்

ராஜஸ்தான் – பல்தேவ் ராம் மிர்தா குடும்பத்தினர்

மத்தியப் பிரதேசம் – விஜயராஜீ சிந்தியா (ராஜ பரம்பரை) குடும்பத்தினர்

ஹரியாணா – ரண்பீர் சிங் கூடா குடும்பத்தினர்

ஒரிஸ்ஸா – பிஜூ பட்நாயக் குடும்பத்தினர்

இதில் தமிழ்நாட்டை தேடாதீர்கள். நமது கதை ஊருக்கு வெளிச்சம். வட  இந்திய ஊடகங்கள் ஒவ்வொரு முறையும் கருணாநிதி குடும்ப வரைபடம் இல்லாமல் நிகழ்ச்சியை தொடங்குவதே இல்லை. மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு குடும்பத்திற்க்கும், மிகப் பெரிய வரைபடம் உண்டு. முழு விபரத்திற்க்கு சுட்டி

ஒவ்வொருவரின் குடும்பத்திலிருந்தும் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் முதலமைச்சர், அமைச்சர், சட்ட மன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.  காங்கிரஸ் மட்டுமன்றி பாரதிய ஜனதா கட்சி, ஜனதா தளம், இவ்வளவு ஏன் இடதுசாரி கட்சிகளிலும் தஞ்சம் அடைந்து ஒரே குடும்பம் வழிவழியாக அதிகாரங்களை அனுபவித்து, மக்களை சுரண்டி வருகிறார்கள்.

தேர்தலில் யார் நிற்கவேண்டும், யார் அமைச்சராக வேண்டும், யார் எந்த துறை என்று நிர்ணயிப்பது எல்லாமே இந்த சில குடும்பங்கள்தான்.  நீங்களும், நானும் வாக்களித்தால் இவர்களில் யாரேனும் ஒருவருக்குத் தான் வாக்களிக்க வேண்டும்.

ஒரு சில குடும்பங்களால், குடும்ப உறுப்பினர்களுக்காக   நடத்தப்படும் குடும்ப குறுநில மன்னர்களின் ஆட்சியே இங்கு நடைபெற்று வருகிறது!

இப்போது சொல்லுங்கள் இந்தியா குடியரசுவா, முடியரசா?

(நன்றி  விக்கிப்பீடியா

http://en.wikipedia.org/wiki/Political_families_of_India

http://en.wikipedia.org/wiki/Nehru-Gandhi_family

சுயவிளம்பர மோகம்

 

வணக்கம் நண்பர்களே,

இரண்டு மாதங்களுக்கு முன், விடுமுறையில் இந்தியா சென்றிருந்தபோது, பல உறவினர்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டியிருந்ததால், நிறைய சன்னலோர பேருந்து பயணம். சுகமானதாகத் தான் இருந்தது. ஆனால் இரண்டு விஷயங்கள் ஒருவித பீதியையும், மன வேதனையையும் கொடுத்தது. அதில் முதல் விஷயம் பற்றிய பதிவுதான் இது….

அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், திரை நட்சித்திரங்களுக்கு போட்டியாக வெகுமானப்பட்ட நம்ம பொதுஜனமும் புகழுக்காக விளம்பரம் யுத்தத்தில் குதித்துவிட்டதை நினைத்து புளகாங்கிதம் அடைந்தேன்.

தமிழகத்தில், தொண்ணூறுகளின் இறுதிவரை திரைப்பட சுவரொட்டிகள் தவிர, தனியார் நிறுவனங்களின் விளம்பர சுவரொட்டிகளை மட்டுமே காண இயலும். அது போக திரைப்பட நடிகர்களின் ரசிகர் பெருமக்கள், தங்கள் கதாநாயகனின் புதுப் படத்தைப் பற்றி சுவர்களில் எழுதிவைப்பார்கள். தேர்தல் வரும் போது அந்த சுவர்களையெல்லாம் (அனுமதியின்றியே) அரசியல் கட்சிகள் ஒட்டு மொத்த குத்தகை எடுத்துவிடும்.

”விளம்பரம் செய்யாதீர்” என்று எழுதிவைத்தாலும், அறிவிப்பை மட்டும் விட்டுவிட்டு, சுற்றி விளம்பரம் எழுதிவைப்பார்கள். துணியால் அல்லது ஸ்கீரின் பிரிண்டிங் முறையில் எழுதப்பட்ட பேனர்களை விழாக்காலங்களில் பார்க்கலாம். ரசிக கண்மணிகளால் வைக்கப்படும் பேனர்கள்/கட் அவுட்கள், திரையரங்குகள் இருக்கும் பகுதிகளில் மட்டுமே காணக் கிடைக்கும். தனியார் வர்த்தக  நிறுவனங்களால் வைக்கப்படும் விளம்பர தட்டிகள் விழாக்காலங்கள் அல்லது ஆடி தள்ளுபடி நாட்களில் மட்டுமே இருக்கும். இவை தவிர, நெடுஞ்சாலைகளில், ஊருக்கு வெளியில் தகரத்தில் செய்யப்பட்ட மெகா வடிவ விளம்பரங்களை வைத்திருப்பார்கள்.

பள்ளி விடுமுறையில், முதன்முறையாக சென்னை வந்தபோது, சாதாரண நாட்களில் கூட மெகா விளம்பரங்களை பார்த்து வியந்திருக்கிறேன். குறிப்பாக அண்ணா மேம்பாலத்தை சுற்றிலும் இருந்த தனியார் நிறுவனங்களின் விளம்பர தட்டிகள் மற்றும் திரைப்பட விளம்பரங்களை வாய் பிளந்து ரசித்திருக்கிறேன். ஒரு வழியாக சென்னை உயர்நீதிமன்றம்  கடிவாளம் போட்டு, மழைக்காலத்தில் சாலையில் பயணிப்பவர்களின் வயிற்றில் பால் வார்த்தது.

ஆனால், இன்றோ எங்கு பார்த்தாலும் டிஜிட்டல் தொழில் நுட்பத்தின் தயவினால் ப்ளக்ஸ் பேனர்கள். ஒவ்வொரு பேருந்து நிறுத்தம், முச்சந்திகள், நாற்சந்திகள், கோவில் வாசலகள் என எங்கெங்கிலும் அரசியல்வாதிகள், திரை நட்சத்திரங்கள், தனியார் நிறுவனங்களையே மிஞ்சும் அளவுக்கு சாதாரண பாமரனின் விளம்பரங்கள்.

திருமண விழா, புது மனை புகுவிழா, பேரன்/பேத்திகளின் காதுகுத்துவிழா, இவ்வளவு ஏன் மஞ்சள் நீராட்டுவிழாவுக்கு கூட ஒட்டு மொத்த குடும்பத்தினரின் புகைப்படங்களோடு வாழ்த்தி ப்ளக்ஸ் பேனர்கள். ”வாழ்த்தும் அன்பு நெஞ்சங்கள்” என 20 பேரின் புகைப்படங்கள் அலைபேசி சகிதம், குறிப்பாக அடைமொழிகளோடு. மணமகன் அல்லது மணமகள் அலைபேசியை வைத்துகொண்டு, விதவிதமான வடிவங்களில் மெகா அளவு விளம்பரங்கள். 

திருவாரூர்-மயிலாடுதுறை சாலையிலுள்ள கொல்லுமாங்குடி பேருந்து நிறுத்தத்தில் ஒரு பேனர் பார்த்து மயக்கம் போட்டு விழாத குறை. மணமகன், மணமகளுக்கு தாலி (சங்கிலி போன்ற) கட்டுவது போன்ற மிகப் பெரிய விளம்பரம். வழக்கம் போல வாழ்த்திய மணமகனின் நண்பர் வட்டாரம். சரி திருமணம் முடிந்துவிட்டது என நினைத்து தேதியை பார்த்தால், நான் பார்த்த நாளுக்கு, அடுத்த நாள்தான் திருமணம்.  நிச்சயமாக அந்த விளம்பரம், 5 நாட்களுக்கு முன்பாக அங்கே வைக்கப் பட்டிருக்க வேண்டும். 10 நாளைக்கு முன்பாக புகைப்படம் எடுத்திருப்பார்கள். ஒரு வேளை அந்த திருமணம் நடைபெறாவிட்டால் மணமக்களின் கதி???

அதைவிட மற்றுமொரு கொடுமையை மயிலாடுதுறைக்கருகே பார்க்க நேர்ந்தது. ”அம்மனுக்கு காவடி எடுக்கும் அன்பு உள்ளங்களை வாழ்த்துகிறோம்” என்றொரு ப்ளகஸ் பேனர். ஒவ்வொரு குழந்தையும் சிரித்த முகத்தோடு கையில் காவடிகளை வைத்து போஸ் கொடுத்து கொண்டிருந்தார்கள். காவடி விழா, ஒரு வாரம் கழித்தே நடைபெற இருப்பதாக விளம்பரம் சொல்லியது. தாத்தா, பாட்டி, மாமா, அத்தைகள் என்று ஒரு பெரிய குடும்பமே மகழ்ச்சியாக சிரித்து கொண்டிருந்தார்கள். என்ன கொடுமையென்று இதை சொல்வது. இறைவனுக்கு செய்யும் நேர்த்திக் கடனுக்குமா விளம்பரம்?

கொட்டிய மழைக்காக ATM மையத்தில் ஒதுங்கி நின்றிருந்த நான் திருவாரூரில் கண்ணெதிரே கண்ட காட்சி.   இரவு 9 மணிக்கு, முக்கிய சாலையான பனகல் சாலையில் அந்த   மெகா விளம்பர தட்டி,  கொட்டிய மழையில் விழுந்துவிட்டது. அதை சரி செய்த போக்குவரத்து காவலர் செய்த வசவுகள் அந்த குடும்பத்தின் ஏழேழு தலைமுறையையும் சென்றடையும். விளமபரத்தில் இருந்த மணமக்களை மட்டுமல்லாமல், அதை ப்ரிண்ட் செய்த விளம்பர நிறுவனம், அனுமதியளித்த காவல்துறை உயரதிகாரிகள் என அனைவரையும் கொச்சையாக திட்டிக் கொண்டிருந்தார். அவர்களின் வாழ்த்துக்கள் விரயமானதோடு, பணமும் விரயமானதுதான் மிச்சம்!

இது போதாதென்று, உள்ளூர் தனியார் அலைவரிசைகளில்( Local Cable TV Channels) , எல்லாவற்றிற்க்கும் வாழ்த்து சொல்லி 5 முதல் 10 நிமிடம் வரை விளம்பரங்கள். ஒவ்வொருவரின் உறவுமுறைகளோடு, பல்வேறுவித அடைமொழிகளோடு, குடும்பத்தினரின் ஒட்டு மொத்த புகைப்படங்கள்.  ஒரு குடும்ப விழாவுக்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்களை அழைப்பிதழ் கொடுத்து அழைப்பது நமது மரபு. பிறகு இந்த விளம்பர தட்டிகளை வைத்து யாருக்காக தம்பட்டம் அடிக்கீறிர்கள்?  யாருடைய மனம குளிர தங்கள் வாழ்த்துக்களை ஊருக்கே அறிவிக்கிறார்கள்? இதைப் பார்த்து வெறுப்படைந்து என் போன்றவர்கள் சாபம் விட்டால் அது யாரை சென்றடையும்?

விளம்பர தட்டிகளை 5 நாட்களுக்குள் எடுக்க வேண்டுமென்று சட்டத்தை பெரு நகரங்களில் மட்டுமே செயல்படுத்த முடியும். சிறிய ஊர்கள், குறிப்பாக ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் இருக்கும் தனியொரு மனிதனின் ஒராயிரம் விளம்பரங்களுக்கு யார் கடிவாளம் போடுவது? அதன் கீழ் மழைக்கு ஒதுங்கி நிற்க்கும் பொதுஜனத்தின் உயிருக்கு யார் காப்பீடு தருவது?

அரசாங்கமா? அனுமதியளித்த காவல்துறை / நகராட்சி / ஊராட்சி துறையா? விளம்பரத்தை வைத்த நிறுவனம்? வாழ்த்தும் அன்பு நெஞ்சங்கள்? அல்லது அந்த மணமக்கள்? உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம்!

ஆழித் தேர்

 

என்னுடைய இந்த பதிவு, இட்லிவடை தளத்தில் வெளியாகி உள்ளது.

நமது ஊர் கோவில்களில் எல்லாம் திருவிழா என்றால், ”தேரோட்டம்” நிச்சயமாக இடம் பெறும்.  எல்லா ஊர்களிலும் தேர் திருவிழா நடைபெறும். ஊர் கூடி தேரிழுப்பார்கள். இரண்டு வடங்களைக் கொண்டு, காலையில் தொடங்கி, மாலையில் நிலைக்கு கொண்டு வந்து விடுவார்கள். இதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்தது தானே என்கிறீர்களா?

ஊர் கூடி இழுத்தால் மட்டும் போதாது, புல்டோசர்கள் நான்கை வைத்து தேர் இழுத்து பார்த்திருக்கிறீர்களா? லாரி, லாரியாக ஸ்லீப்பர் கட்டைகளையும், முட்டுக் கட்டைகளையும் வைத்து அங்குலம் அங்குலமாக தேர் நகர்ந்து பார்த்திருக்கிறீர்களா?  ஹைட்ராலிக் ப்ரேக் முறையில் தேர் அசைந்து ஆடுவதை பார்த்திருக்கிறீர்களா? தேர் என்று நிலைக்கு வரும் என்றே தெரியாமல் ஆயிரக்கணக்கான கூட்டம் காத்திருந்ததை கேள்விப் பட்டிருக்கிறீர்களா?

ThiruvarurCarமேற்க்கண்ட கேள்விகளுக்கெல்லாம் உங்கள் பதில் இல்லையென்றால், நீங்கள் திருவாரூர் ஆழித் தேரைப் பற்றிக் கேள்விப் பட்டதில்லை.

”திருவாரூர் தேரழகு” மாத்திரம் இல்லை. தலைமுறை, தலைமுறையாக, ஆழித் தோரோட்டத்தை  நடத்தும் குடும்பங்களுக்கு, ஒரு தவம்.

சுமார் 96 அடி (30 மீட்டர்) உயரம், 360 டன் எடை கொண்ட தியாகராஜரின் ரதம்தான் திருவாரூர் தேர். ஆசியாவின் மிகப் பெரிய தேர்களில் ஒன்று என்று புகழப் படும் ஆழித்தேர் நான்கு நிலைகளை கொண்டது. முதல் நிலை 6 மீட்டர்களும், இரண்டாவது நிலை 1.2 மீட்டர்கள் உயரமும் கொண்டது.  மூன்று மட்டும் நான்காவது நிலைகள 1.6 மீட்டர் உயரம் கொண்ட பீட வடிவமைப்பு கொண்டது. இந்த நிலைகளில் தான் தியாகேசப் பெருமான், அம்மையுடன் வீற்றிருப்பார்.

இரும்பு தகடுகள் பொருத்தப்பட்ட தேரினுடைய ஆறு சக்கரங்கள், ஒவ்வொன்றும் 2.59 மீட்டர் விட்டம் கொண்டது. தேரை நிறுத்த ஹைட்ராலிக் ப்ரேக் முறை, திருச்சி பாரத் மிகுமின்  நிறுவன (BHEL) பொறியாளர்களைக் கொண்டு கையாளப் படுகிறது.

மரத்தினால் ஆன தேரில், அழகிய கலை நயத்துடன் புராணத்திலிருந்து சிற்பங்கள் வடிவமைக்கப் பட்டுள்ளன.  மரத்தேரின் மீது, 20 மீட்டர்கள் அளவிற்க்கு, மூங்கில் கம்புகள், தோரணங்கள், தேர் சீலைகள் கொண்டு அலங்கரிக்கப் பட்டு, காகிதக் கூழில் செய்யப் பட்ட பிரம்மா தேரோட்டியாகவும், நான்கு வேதங்களை குதிரைகளாகவும் நிறுத்தகின்றனர்.

26 டன் எடை கொண்ட அலங்கரிக்கப்படாத தேர்,  அலங்கரிக்கப் பட்டபின் 360 டன் எடை கொண்ட ஆழித் தேராக உருவெடுக்கிறது. தேரை அலங்கரிக்க மட்டும் 3000 மீட்டர் அளவிலான தேர்சீலைகள் உபயோகப்படுத்தப் படுகின்றன. தேரின் உச்சியில் 1 மீட்டர் உயரத்திற்க்கு கூம்பு வடிவ கலசமும், கொடியும் வைக்கப் பட்டு, 30 மீட்டராக வடிவெடுக்கின்றது. (சென்னை வள்ளுவர் கோட்டம், திருவாரூர் தேர் மாதிரியில் வடிவமைக்க பட்டது)

சுமார் 24 மீட்டர் கொண்ட நான்கு மிகப் பெரிய வடங்கள் தேரை இழுக்க பயன்படுத்தப்படுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன் வரை, தேரிழுக்க, திருவாரூருக்கு அருகில் உள்ள வடபாதிமங்கலம் சர்க்கரை ஆலையிலிருந்து ஆட்களை அழைத்து வரப்படுவார்கள். நவீன யுகத்தில், பெல் நிறுவன பொறியாளர்களின் மேற்பார்வையில் ஹைட்ராலிக் முறைகள் பொருத்தப் பட்டு, முன்னால் இரண்டு புல்டோசர்கள் இழுக்க, பின்னால் இரண்டு புல்டோசர்கள் தள்ள ஒன்று அல்லது இரண்டு நாட்களில் நிலைக்கு கொண்டு வந்து விடுகின்றார்கள். ஒரு காலத்தில் மனித சக்தியால் இழுக்கப் பட்ட தேரை நிலைக்கு கொண்டு வர ஆறு மாதங்கள் ஆனதாம்

ஆழித் தேரின் சிறப்பம்சம், வளைவுகளில் திரும்புவது. ஒரு வீதியிலிருந்து மற்றொரு வீதிக்கு தேர் திரும்புவதை காண்பது கண் கொள்ளாக் காட்சி. தேர் சக்கரங்களுக்கு அடியில் கிரீஸ் தடவப்பட்ட மிகப் பெரிய இரும்பு தகடுகளை வைத்து, நின்ற நிலையிலேயே (முன் நகராமல்) தேர் திரும்புவதை வெளி நாட்டவர்களும் கண்டு வியப்பார்கள். தேர் திரும்பும் காணொளி இங்கே

ஒரு வேளை தேர் பாதையிலிருந்து விலகி சென்று விட்டால், தேரின் பாதையை மாற்ற லாரி மற்றும் ட்ராக்டர்களில் ஸ்லீப்பர் கட்டைகள் மற்றும் முட்டு கட்டைகள் கூடவே கொண்டுவரப்படும்.

1927-ம் ஆண்டு வாக்கில், தேர் மேற்கு கோபுரத்திற்க்கு அருகில் வரும் போது தீப்பிடித்து எரிந்து போய்விட்டதாகக் கூறுவார்கள். பின்பு புதிய தேர் செய்யப் பட்டு 1947 வரை  நடைபெற்ற திருவிழா,  சுதந்திரத்திற்க்கு பின் நிதி பற்றக்க்குறையால் நிறுத்தப்பட்ட தேரோட்டம் 1970-ஆம் ஆண்டு வாக்கில் பல்வேறு முயற்சிகளுக்குப் பின் திரும்ப தொடங்கியது.

”அஸ்தத்தில் கொடியேற்றி, ஆயில்யத்தில் தேரோட்டி, உத்திரத்தில் தீர்த்தம்” என்பது 27 நாட்கள் நடைபெறும் திருவாரூர் பங்குனி உத்திர திருவிழாவின் சாராம்சம். அதாவது மாசி மாதம் (பிப்ரவரி) அஸ்த நட்சித்தரமன்று கொடியேற்றி, பங்குனி (மார்ச் இறுதி/ஏப்ரல் முதல் வாரம்) ஆயில்யம் நட்சத்திரத்தில் தேர் ஒட்டி, பங்குனி உத்திர நட்சத்திரன்று சுவாமி தீர்த்தம் கொடுப்பது ஐதீகம்.

தியாகேசர், ஆழித் தேருக்கு எழுந்தருளுவதற்க்கு முன்னால், தேவாசரிய மண்டபம் எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்திற்க்கு கொண்டு வரப்படுவார். அங்கிருந்து தேரோட்ட தினத்திற்க்கு இரண்டு நாட்கள் முன்பு தேருக்கு கொண்டுவரப்படுவார். முறைப்படி எல்லாம் நடந்தால், அடுத்த ஒரு வாரத்திற்க்குள், சுவாமி யதாஸ்தானம் வரவேண்டும். பணம் சம்பாதிக்கும் கும்பல்கள தங்கள் வேலையை காட்ட தொடங்கியதன் விளைவு, கடந்த சில ஆண்டுகளாக எல்லாம் மாறி போய்விட்டது.

தொண்ணூறுகளின் இறுதிவரை ஐதீக முறைப்படி நடைபெற்று வந்த பல்வேறு சிறப்புகள் வாய்ந்த ஆழித் தேரோட்ட திருவிழா, அதற்க்குப் பின்பு அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் கைக்கு மாறி அவர்களுக்கு ஏற்ற நாட்களில், அவர்களுக்கு ஏற்றார் போல் நடத்தப்படும் சடங்காக மாறிப் போனதுதான் சோகம்.

கடந்த பல ஆண்டுகளாகவே, தேரோட்டத் திருவிழா, குறிப்பிட்ட பங்குனி ஆயில்ய நட்சத்திர தினத்தில் நடைபெறுவது இல்லை. பள்ளி/கல்லூரி தேர்வு சமயமாக இருப்பதால், திருவிழாவை மே அல்லது ஜூன் மாதத்தில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதுவரை சுவாமி, ஆயிரங்கால் மண்டபத்தில் மாதக் கணக்கில் தேவுடு காக்க வேண்டிவரும்.

பள்ளி மாணவர்களின் படிப்பு வீணாகப் போகக் கூடாது என்ற அக்கறை எல்லாம் ஒன்றும் கிடையாது. அப்படி அக்கறை ஏதாவது இருந்தால் கிரிக்கெட் போட்டிகளை நடத்த மட்டார்கள் அல்லவா? இதை விட பல்லாயிரம் மக்கள் கூடும் மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் மாதத்தில்தான்  நடக்கும் என்பது குறிப்பிடதக்கது.  பள்ளி நாட்களில் நடத்தினால் திருவிழாக் கூட்டம் குறைந்து, அவர்களுக்கு வருமானம் இல்லையாம்.

இந்து அமைப்புகள் மட்டும் ஐதீக முறைப்படி குறிப்பிட்ட நாளில் தான் தேரோட்டம் நடைபெற வேண்டும் என்று போராடி வருகிறார்கள். ஆயில்ய நட்சத்திரம் வரும் நாளில், இந்து அமைப்புகள், தாங்களே செலவு செய்து சப்பரம் போன்ற ஒன்றை இழுத்து வருவார்கள். அரசு நிர்வாகம் தனது சகல அஸ்திரங்களையும் பிரயோகித்து, அவர்க்ளை ராஜ வீதிகளில் வரவிடாமல் செய்யும். இந்த ஆண்டும் இது போன்ற ஒரு நிகழ்வு நடந்தது.

Chariot2 அடுத்தது, தேரோட்டத்திற்க்கு நாள் குறித்துவிட்டு, தேரை முன்னதாகவே கட்டி வைத்து விட்டு, சுவாமியை தேருக்கு கொண்டு வந்து ஒரு வாரம்/பத்து நாட்கள் வைத்து, பார்வையாளர்களை தேரில் ஏறவைத்து அதற்க்கு கட்டணம் வசூலித்து காசு பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு வழியாக, ஆழித் தேரோட்டம் நடைபெறும். செருப்பு/ஐஸ்கீரிம் உட்பட சகலவிதமான பொருட்களும் கிடைக்கும் திருவிழா வியாபாரம், பெரிய கோவிலின்  நான்காம் பிரகாரத்தில் (ஆயிரங்கால் மண்டபத்தின் முன்) கொடி கட்டி பறக்கும்.

இத்தனைக்கும் தியாகேசப் பெருமான் ஒன்றும் பஞ்சபராரி அல்ல. பல கோடி ரூபாய் சொத்து உள்ள, தமிழகத்தின் பெரிய கோவில்களில் ஒன்று. கோவிலுக்கு சொந்தமாக பல ஏக்கர் நிலங்கள் இருந்தன. இன்று என்னவானது என்று நான் சொல்ல வேண்டியதில்லை.

சரித்திர புகழ் வாய்ந்த ஒரு ஆழித் தேரோட்டம், சீர் குலைந்து போய் ஒரு சடங்காக வியாபாரிகளால்  நடத்தப் பட்டு கொண்டிருக்கிறது.

திருவாருர் ஆழி தேர் யூ ட்யூப்பில் காணொளி1   காணொளி2    காணொளி3

திருவாரூர் பிக்காசா ஆல்பம்

திருவாரூர் கோவில் 360 டிகிரி கோணத்தில் – தினமலர் தளத்தில்

பின்குறிப்பு

பங்குனி 10 (மார்ச் 26)  அன்று  நடைபெற வேண்டிய இந்த ஆண்டிற்க்கான தேரோட்டம், அதிகாரிகள்/மற்றும் அரசியல்வாதிகளின் கைங்கர்யத்தால் ஜூலை 16-ம் நாள், இன்று நடைபெறுகிறது.

   தமிழ் மணம் ஓட்டு

    தமிழிஷ் ஓட்டு

தமிங்கிலிஷ் டூ தமிழ்

 

டிஸ்கி :  என் நண்பர்கள் பலருக்கு, தமிழிணையம் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால், அவர்களுக்கு அறிமுகப் படுத்தும் பொருட்டு, நான் அனுப்பிய மின்னஞ்சல் இது. அதை இங்கே பதிவிடுகிறேன். . 

“Hello thalaiva, vanakkam epdi irukeenga, nalla irukkeengala’ 

இந்த மாதிரி தமிங்கிலிஷ் (தமிழை ஆங்கிலத்தில் எழுதுவது/தட்டச்சு செய்வது - Phonetic) முறையில் தான்,  நம்மில் (தமிழ் தெரிந்த) பெரும்பாலானவர்கள், உரையாடல்களிலும் (Chats) மின்னஞ்சல்களிலும் பேசிக் கொள்கின்றனர்.  ஏன் இப்படி, தமிழிலேயே தட்டச்சு செய்தால் (Type Writing) என்ன?

யோசித்தது இல்லையா?   நமது தாய் மொழியைப் பற்றி தெரிந்த கொள்ள வேண்டாமா? 

பெரும்பாலானவர்கள் நினைப்பது, கணினியில் தமிழில் எழுத, தமிழ் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும் என்று. தேவையே இல்லை. மேற்க்கண்ட தமிங்கிலிஷ் முறையில் தட்டச்சு (Type) செய்தாலே, தானாக தமிழில் மாற்றிக் கொடுக்கும் மென் பொருட்கள் (Softwares) வலைப் பக்கங்கள் வந்து பல ஆண்டுகளாகிவிட்டன.

இணையத்தில் வலைப் பக்கமாகவும், உங்கள் கணினியில் தரவிறக்கியும் (Download) உபயோகப் படுத்தலாம்.

முதலில் இணையத்தின் ஜாம்பவானான கூகிளாண்டவர் கொடுத்திருக்கும், ”கூகிள் எழுத்து மாற்றி” (Google Transiltration) முறையை பற்றி பார்க்கலாம். தமிழ் மட்டுமல்லாது, எல்லா இந்திய மொழிக்கும் இந்த கூகிள் ட்ரான்ஸில்டேரஷன் என்கின்ற எழுத்து மாற்றி பயன்படும்.

இந்த முறையை பயன் படுத்த உங்களும் தமிழ் உச்சரிப்பும், தமிங்கிலிஷ் முறையும் தெரிந்திருக்க வேண்டும். நீங்கள்,  “superda”  என்று தட்டச்சு செய்தீர்களானால் அதுவே, “சூப்பர்டா” என்று மாற்றிக் கொள்ளும்.  உங்களுக்கு தேவையானதை அங்கே தமிழில் எழுதி, படியெடுத்து (Copy) உங்களுக்கு தேவையான இடத்தில் இட்டுக் கொள்ளுங்கள்.

அழுத்தம் உள்ள எழுத்துக்களை, ஆங்கில உயிரெழுத்துக்களான (Vowels)  a, e, i, o , u ஆகியவற்றை சேர்ப்பதன் மூலம் பெறலாம்.  ”ஆ” என்பதற்க்கு  “aa”  என்று அடிக்க வேண்டும்.  ”தூ” என்ற எழுத்தைக் கொண்டுவர “thuu” என்றும் கூடுதலாக் ஒரு “u” சேர்க்க வேண்டும்.

இந்த கூகிள் எழுத்து மாற்றியை, உங்கள் இணைய/வலை பக்கங்களில் இணைத்துக் கொள்வதற்க்கான நிரலியையும் கூகிள் வழங்குகிறது. 

http://code.google.com/apis/ajaxlanguage/documentation/#Single

மென்பொருள் நிபுணர்கள், மேற்க்கண்ட தளத்தில் சென்று 19 இந்திய மொழிகளுக்கான API நிரலியை பெற்றுக் கொள்ளலாம்.

ஆரம்பத்தில் நீங்கள் தடுமாறினாலும், விரைவில், விரைவாக உங்களால் எழுத இயலும். முயற்சித்துப் பாருங்கள். இந்த Google Transiltration-ல் உள்ள ஒரே சிறிய பிரச்சனை, ஒரு வார்த்தை முடித்து, நீங்கள் இடைவெளி (Space) விட்டால் மாத்திரமே தமிழாக மாற்றும். ஒவ்வொரு எழுத்துக்கும் மாற்றாது.

ஒவ்வொரு எழுத்துக்கும் மாற்றும் இணைய வடிவிலான பக்கங்களும், தரவிறக்கம் (Download) செய்து உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளும் வகையில் ஏராளமான மென் பொருட்களும் உள்ளன.

இணைய வடிவிலான பக்கங்களில் குறிப்பிடத் தகுந்தது, “தகுடூர்” மற்றும் “தமிழ் எழுதி” பக்கங்கள். “தகுடூர்”  நிரலியை உங்கள் கணினியில் தரவிறக்கி, HTML பக்கமாக, இணைய இணைப்பு இல்லாத போதும் பயன்படுத்தலாம். இந்த வலைப் பக்கங்கள், தமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள்/தெரியாதவர்கள் அனைவரும் பயன் படுத்தும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட எழுத்து மாற்றிகள், ஒவ்வொரு எழுத்துக்களையும் மாற்றுவதால் புதிதாக பழகுபவர்களுக்கு இலகுவாக இருக்கும். a, e, i, o, u போன்ற எழுத்துக்களை ஒன்றிரண்டு கூடுதலாக சேர்ப்பதன் மூலம் சரியான வார்த்தைகளைப் பெறலாம்.

இந்த முறையை பயன்படுத்தும் போது கவனிக்கவேண்டியது, பெரிய/சிறிய எழுத்துகள் (Case Sensitive).  தமிழில் உள்ள,  ”ல, ள”, “ர, ற”, “ன, ண”  போன்ற எழுத்துக்களைப் பெற “Shift Key” யை பயன் படுத்த வேண்டும்.

மேற்க்கண்ட இணையப் பக்கங்கள் தவிர,  இ-கலப்பை, NHM Writer, அழகி போன்ற மென்பொருட்கள் உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளும் வகையிலேயே கிடைக்கின்றன. இவற்றின் மூலம் தமிழில்,  Word Document, Excel Spreadsheet, NotePad, Chat Window என எங்கு வேண்டுமானாலும் நீங்கள் தமிழைப் பயன்படுத்தலாம்.

NHM Writer-யை கணினியில் நிறுவ, http://software.nhm.in/products/writer என்ற தளத்திற்கு சென்று, அங்கு உள்ள Download என்பதை கிளிக் செய்து NHWM Writer-யை தரவிறக்கம் செய்து கொள்ளவும். தரவிறக்கம் செய்ததை இரட்டை கிளிக் செய்து Install செய்து கொள்ளுங்கள்.
இப்பொழுது உங்கள் டாஸ்க் பாரில் மணி வடிவ ஐகான் ஒன்று தோன்றும். இனி நீங்கள் Alt + 4 அழுத்துவதன் மூலம் தமிழிலும் அதே கீக்களை மீண்டும் அழுத்துவதன் மூலம் ஆங்கிலத்திலும் ரைப் செய்யலாம். மேலதிக விபரங்களுக்கு www.itvav.blogspot.com என்ற வலைப்பதிவில் பாருங்கள்.

தமிழில் எழுதுவதற்க்கான பக்கங்கள் அல்லது மென் பொருட்கள்

கூகிள் எழுத்து மாற்றி” (Google Transiltration) - http://www.google.co.in/transliterate/tamil

தகடூர்  - http://www.higopi.com/ucedit/Tamil.html

தமிழ் எழுதி - http://tamileditor.org/

”அழகி” மென்பொருள் - http://www.azhagi.com/docs.html

”இ-கலப்பை” மென்பொருள் - http://thamizha.com/

                         http://code.google.com/p/ekalappai/downloads/list

இணையத்தில் தமிழை பயன்படுத்துவோம்! தமிழ் வளர உறுதுணையாயிருப்போம்!

தகவல் உதவிகளுக்காக : கூகிள், தமிழ் மணம், ”தமிழ் இணையப் பயிரங்கம்” கூகிள் வலைக் குழுமம்,  போன்றவற்றிக்கு என் நன்றிகள்!!

தமிழர் தினங்கள் இனி தமிழர் வரலாறு படி....


அமெரிக்க நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டு குடிமக்களின் பெயரால் காதலர் தினம், மனைவியர் தினம், நண்பர்கள் தினம், பூமி தினம், பாதிரியார் மரம் நட்டால், மரம் நட்ட தினம், மீன் பிடித்தால், “மீன் பிடித்த தினம்” என்று அறிவித்து கொண்டாடி வருகின்றனர். அங்கே பஞ்சம் பிழைக்க சென்ற நம்மவர்கள் அதை இந்தியாவிற்க்கு இறக்குமதி செய்து வருகின்றனர்.

இதுவரை காதலர் தினம் மட்டும் தான் பெரிய கொண்டாட்டமாக இருந்தது. ஆனால், இந்த வருடம், அன்னையர் தினத்திற்க்கு நமது மக்கள் ட்வீட்டரிலும், பேஸ் புக்கிலும் அடித்த கூத்தை பார்த்தவுடன் எனக்கு பற்றிக் கொண்டு வந்தது. அன்னையர் தினத்தன்று மட்டும் வசனங்களையும், படங்களையும் போட்டு அன்னையை பெருமைபடுத்துகிறார்களாம், இதில் ஓராயிரம் பார்வேர்டு மெயில் வேறு. என்ன கொடுமை ஐயா இது?

இதுவரை தமிழுணர்வாளர்கள் யாரும் பொங்கி எழாமல் இருப்பது அதை விடக் கொடுமை. இன்னும் நாம் வெள்ளையனுக்கு அடிமை தான். 

அதனால், குத்துப் பாட்டுக்களை பார்ப்பதை தலையாய கடைமையாகக் கொண்டிருக்கும் வாழும் வள்ளுவர் முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதி தெரிவிக்கலாம் என்று இருக்கிறேன். உலகத்திலேயே, ஒரு கடிதங்களாக எழுதி எழுதி, தமிழையும், தமிழ் மண்ணையும், தமிழினத்தையும் வாழ வைத்து கொண்டிருப்பது, நம்ம முதல்வர் மட்டும்தான். தமிழ் செம்மொழி மாநாடு முடிவதற்க்குள் ஒரு நல்ல பதிலை சொல்வார் என்று நினைக்கிறேன்.

மாண்புமிகு முதல்வருக்கு

”கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே மூத்த குடி தமிழ்க் குடி” … இன்றைய தேதிக்கு சுமார் 750, 000 வருடங்களுக்கு நாகரீகம் தோன்றி, அன்று முதல் தமிழே உயிர்  மூச்சாக வாழ்ந்து வருவது நமது தமிழ் இனம்”. இப்படி பல்வேறு சிறப்பு வாய்ந்த தமிழ் இனத்துக்கு ஒரு நாட்காட்டியும், புத்தாண்டும் இருக்க வேண்டும் என்று தான், திருவள்ளுவர் பிறந்த நாளை தமிழ் புத்தாண்டாகவும், திருவள்ளுவர்  நாட்காட்டியை தமிழர்களின் அதிகாரபூர்வ நாட்காட்டியாகவும் அறிவித்தீர்கள்.

இந்த நிலையில், மேலை நாடுகள், ஒவ்வொரு நாளும், தங்கள் நாட்டு குடிமக்களின் பெயரால் காதலர் தினம், மனைவியர் தினம், நண்பர்கள் தினம், பூமி தினம் போன்ற பல தினங்களை அறிவித்து கொண்டாடி வருகின்றனர். கோவையில் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற இருக்கின்ற இந்த வேளையில், தமிழினத்துக்கென தனி அடையாளம் வேண்டுமா? 
தமிழர்கள் வரலாற்றை ஆராய்ந்து, தமிழர்களுக்கென சிறப்பு தினங்களை அறிவிக்க வேண்டும் என இதன் மூலம் கேட்டுக் கொள்கிறேன். என் சிற்றரிவுக்கு தெரிந்த வகையில் நானும் சில தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன். ஆனால் நாட்கள் தான் எனக்கு குழப்பமாக உள்ளது. தாங்கள் அமைக்கும் குழு சரியான நாட்களை கண்டுபிடித்து பரிந்துரைகளை வழங்கும் என நம்புகிறேன்.

april-fool

இனி சிறப்பு தினங்களை, அந்த குழு வழங்கும் பரிந்துரைகளின் படிதான் கொண்டாட வேண்டுமென அரசு உத்தரவிட வேண்டும். தமிழகத்திலே மீண்டும் அமைய உள்ள சட்ட மேலவை, இதை தனது முதல் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இனி  தமிழர்களுக்கான சிறப்பு தினங்கள் குறித்து என்னுடைய பரிந்துரைகள்


காதலர் தினம் :    சங்க காலத்திலே, காதலன் இறந்துவிட்டான் என்று அறிந்ததும், தனது இன்னுயிரையும் இழந்து, இறந்தும் இறவாமல் ஒன்று சேர்ந்த காதலர்கள், அம்பிகாபதி – அமராவதி.  அவர்கள் இறப்பிலே ஒன்று சேர்ந்த நாளையே காதலர் தினமாக அறிவிக்க வேண்டும்.

மகளிர் தினம் : முதலாம் பராந்தக சோழன் காலத்திலே, நமது தமிழ் நாட்டு நங்கையொருத்தி, காட்டிலேயிருந்து வழி தவறி, கிராமத்துக்குள் புகுந்த கொடிய மிருகமான புலியை, முறத்தாலேயே அடித்து துரத்தி, தமிழர்களின் வீரத்தை பறை சாற்றினாள். அவள் புலியை துரத்திய தினத்தை தமிழ் சான்றோர்கள் கண்டறிந்து, இனிவரும் காலங்களில் தமிழக மக்கள்,  மகளிர் தினமாக அந்த நாளையே பிடிக்க வேண்டும்.

நண்பர்கள் தினம் : பண்டைய தமிழகத்தில், நட்புக்கு இலக்கணமாக வாழ்ந்தவர்கள் கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார். தனது நண்பன் இறந்துவிட்டான் என்று அறிந்து வடக்கிருந்து உயிர் துறந்து நட்பின் பெருமையை நிலை நாட்டினார் பிசிராந்தையார் என்ற துறவி.  இறப்பின் போதும் நட்பை மாண்பென மதித்து, இறவாப் புகழ் பெற்ற அவர்கள் உயிர்  நீத்த நாளையே, தமிழினம் “ நண்பர்கள் தினமாக” கடைப்பிடிக்க வேண்டும்.

அன்னையர் தினம் :  அய்யன் வள்ளுவனின் வழி நின்று, பத்தினி தெய்வமாக, அவனுக்கு மனைவியாக வாழ்ந்து பெரும் புகழ் அடைந்தவள் தான் தாய் “வாசுகி அம்மையார்”. அவர் ஒருமுறை கிணற்றிலே நீரிறைத்துக் கொண்டிருக்கும் போது, அய்யன் அழைக்க, அம்மையார் கயிற்றை அப்படியே விட்டு விட்டு, அய்யனுக்கு பணிவிடை செய்ய ஓடி வந்தாராம். அவர் திரும்பி வரும் வரை, அந்த குடுவை, கீழே விழாமல் அப்படியே நின்று கொண்டிருந்தது என்று சிறு வயதிலே கதை கேட்டிருக்கிறேன். அந்த நாளை கண்டுபிடித்து, அன்னை வாசுகி அம்மையாரின் நினைவாக “அன்னையர் தினமாக” கொண்டாட வேண்டும்.

தந்தையர் தினம் : பசுவின் கன்றை மகன் தேரிலிட்டுக் கொன்று விட்டான் என்பதற்காகத் தன் மகனையே தேர்க்காலில் இட்டுக் கொன்ற மனு நீதி சோழன் புகழ் நிலைக்க, அவன் கொன்ற நாளை கண்டுபிடித்து, தந்தையர் தினமாக அறிவிக்க வேண்டும்.

மனைவியர் தினம் :  தமிழ் நாட்டில் கண்ணகியை தெரியாதவர்கள் இருக்க முடியுமா? கண்ணகி பற்றி நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டுமா. ஏதாவது ஒரு நாளை அறிவித்து விடுங்கள் மனைவியர் தினமாக

முட்டாள்கள் தினம் :  தமிழக மக்களை பொறுத்த வரையில் தினம், தினம் தங்களின் கேள்வி பதில் அறிக்கையால் ஏமாறுகிறார்கள். இதற்கு தனியாக ஒரு தினம் வேண்டுமா என்ன?

பக்கத்து/எதிர் வீட்டுக்காரன் தினம், எதிரிகள் தினம், இன்னும் பல தினங்களையும் தாங்களே அறிவித்து, தமிழர்களை முன் மாதிரியாக இருக்க விடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்!

இப்படி தமிழர்களுக்கென தனியாக தினங்களை அறிவித்தால், தமிழினத்தின் ஒப்பற்ற உயரிய தலைவர் என்று வரலாறு பேசும்.

நீங்கள் தேர்வு செய்யும் தினங்களில் மே 18 வந்துவிடப் போகிறது ஜாக்கிரதை!

இப்படிக்கு
உங்கள் குடும்ப மற்றும் தமிழின அரசியல்களால் ஏமாந்து கொண்டேயிருக்கும் தமிழன்உலக கோப்பையை வென்றது இந்தியா!

பஞ்சாப், லூதியானாவில் நடந்த கபடி உலக கோப்பையின் இறுதி ஆட்டத்தில், இந்திய அணி பாகிஸ்தான் அணியை 58-24 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.


இந்திய அணியின் தலைவர் மங்கத் சிங் மாங்கி சிறந்த தடுப்பாட்டக்காரர் விருதினைத் தட்டி சென்றார்.  அவருக்கு ஒரு டிராக்டர் (Tractor) பரிசாக வழங்கப்பட்டது.

கனடா நாட்டு அணி, இத்தாலி அணியை 66-22 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி மூன்றாவது இடத்தை பிடித்தது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஈரான் உட்பட 10 நாட்டு அணிகள் இந்த உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்றன.


முத‌ல் இட‌ம் பிடித்த‌ இந்திய‌ அணிக்கு, இந்திய‌ ரூபாய் மதிப்பில் ஒரு கோடிக்கான காசோலையும் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டது. இர‌ண்டாம் இட‌ம் பிடித்த‌ பாகிஸ்தான் அணிக்கு 51 ல‌ட்ச‌மும், மூன்றாம் இட‌ம் பிடித்த கனடா அணிக்கு 25 ல‌ட்ச‌மும், நான்காம் இட‌ம் பிடித்த இத்தாலி அணிக்கு 10 ல‌ட்ச‌மும் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டது.

குருநானக் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டியை காண‌, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில அரசின் உயர் தலைவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், மற்றும் திரளான பொதுமக்கள்(!??!@#$) வந்திருந்த‌ன‌ர்.

இறுதி போட்டியை க‌ண்டு க‌ளித்த‌ ப‌ஞ்சாப் முத‌ல்வ‌ர் பிர‌காஷ் சிங் பாத‌ல், வெற்றி பெற்ற‌ இந்திய‌ அணி வீர‌ர்க‌ளுக்கு, அர‌சு ப‌ணி வ‌ழ‌ங்க‌ப் ப‌டும் என அறிவித்தார்.

அடுத்த‌ உல‌க‌ கோப்பை போட்டிக‌ள், மேம்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ விளையாட்டு அர‌ங்க‌ங்க‌ளில் ந‌ட‌த்த‌ப் ப‌டும் என்றும் அவ‌ர் தெரிவித்தார்.

பஞ்சாப் மாநிலத்தின் பாரம்பரிய விளையாட்டான கபடியை மேம்படுத்த எல்லா நடவடிக்கைகளையும் அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து முயற்சி மேற்கொள்ளப் பட்டு வருவதாக துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல் தெரிவித்தார். இந்த ஆண்டின் இறுதியில் எட்டு நாடுகள் பங்கு பெறும் பஞ்சாப் தங்க கோப்பை ஹாக்கி போட்டிகள் நடத்தப் படும் என்றும் அவர் தெரிவித்தார்.

வெற்றி பெற்ற இந்திய அணிக்கும், பாரம்பரிய விளையாட்டை ஊக்குவித்து, உலக கோப்பையை வெற்றிகரமாக நடத்திக் காட்டிய பஞ்சாப் மாநில அரசுக்கும் பாராட்டுக்கள்!

"மறத் தமிழரின் வீர விளையாட்டு சடுகுடு. கபடி என்ற சொல்லே, கை‍‍-பிடி என்பதன் மூலம்தான்" என "விக்கி" கூறுகிறது. ஹாக்கி, கபடி, பாரம்பரிய கிரிக்கெட் என எதுவாகிலும் சர்தார்ஜிக்கள் முன்னிலையில் இருக்கின்றனர். நாம் சர்தார்ஜி ஜோக்குகளை பரிமாறிக் கொள்வதில் முதலில் இருக்கிறோம்!


கபடி….கபடி….


எல்லாருக்கும் வணக்கமுங்க!

ரொம்ப நாளாகி விட்டது, பதிவுலகம் பக்கம் வந்து! நேரமில்லை என்றெல்லாம் பொய் சொல்ல விரும்பவில்லை. எழுதுவதற்க்கு மனம் வரவில்லை. எது நடந்தாலும், அடுத்த சில மணி நேரங்களில், 100 பதிவுகளைக் காணமுடிகிறது. புதிய படம்  வெளிவந்த சில மணி நேரங்களில், அதன் திரைப் பார்வைகள் Tamilish மற்றும் தமிழ் மணத்தின் முதல் பக்கங்களை நிரப்பி விடுகிறது. வலைப் பதிவர்களின் வேகம் வியக்க வைத்தாலும், ஊடகங்கள்தான் பரபரப்புக்காக, வியாபாரத்திற்க்காக செய்திகளை வெளியிடுகின்றன. வலைப் பதிவர்களும் அந்த பாதையில் செல்வது வருத்தமாக உள்ளது.  அதில் ஒரு கடைக் கோடியில் இருப்பதை நினைத்து பெருமையாக இருக்கிறது.

ஒட்டு மொத்த இந்தியாவே, IPL என்னும் பேஸ்பால் (BaseBall) விளையாட்டில் தங்கள் சுக துக்கங்களை மறந்துவிட்டு, கிறங்கி கிடக்கிறது. ஒரு வழியாக வெளி நாட்டினர், இந்தியா வந்து வேலை தேடும் சூழலை உருவாக்கி விட்டோம். வல்லரசாகி விட்டோம் என்று பெருமைப் பட்டுக்கொண்டு, பாரம்பரிய விளையாட்டுக்களை தொலைத்து விட்டோம். மாவோஸ்டுகளின் கொடூர தாக்குதல்களைக்  கூட ஐபில் போட்டிகள் முழுங்கி விட்டதுவோ என்று எனக்கு சந்தேகம்!  

கபடி (தூய தமிழில் ”சடுகுடு”) என்று ஒரு விளையாட்டு நினைவிருக்கிறதா? நல்ல வேளையாக விஜய் ஒரு படம் நடித்து, இன்றைய பள்ளி குழந்தைகளுக்கு நினைவூட்டினார். இன்றைய கிராமங்களில் கூட இது இருக்கிறதா என்று தெரியவில்லை. இதற்கு உலக கோப்பை நடந்துக் கொண்டிருக்கிறது, அதுவும் நமது இந்தியாவில்.  இன்றைய தினம் (12-ஏப்ரல்-2010) கபடிக்கான உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில், இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன.

IPL-போட்டிகளினால் மிகவும் வலிமைவாய்ந்த திரைஉலகமே ஆடிப் போயிருக்கும் நிலையில், கபடிப் போட்டிகள் எம்மாத்திரம். எந்த ஊடகமும் இது பற்றிய செய்தி்களை ஒளிபரப்பியதாக தெரியவில்லை. கூகிளாண்டவர் கூட மிக குறைவான தகவல்களையே தருகிறார். சரி விஷயத்திற்க்கு வருவோம்.


logo_WCCS
கபடி உலக கோப்பை, பஞ்சாப் மாநில அரசு உதவியுடன், பஞ்சாப்பின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 10 நாடுகளின் அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில், இந்தியா முதல் பிரிவில் (”A” Group) முதலிடத்தையும், பாகிஸ்தான் இரண்டாவது பிரிவில் (”B” Group) முதலிடத்தையும் பிடித்து திங்கள் மாலை லூதியானாவில் இறுதிப் போட்டியில் சந்திக்கின்றன.

முதல் பரிசை வெல்லும் அணிக்கு ஒரு கோடி இந்திய ரூபாய்கள் பரிசாம்.
கபடி என்பது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு என்று கூறுவார்கள். ஆனால் தமிழ் கலாசாரக் காவலர்கள் என்றுக் கூறிக் கொள்பவர்களுக்கு இது பற்றியெல்லாம் தெரியுமா? நாம் நாள் தோறும் எள்ளி நகையாடும் சர்தார்ஜிக்கள், ஹாக்கியிலும், கபடியிலும் சிறந்து விளங்கி நமது பெருமையை நிலை நாட்டிக் கொண்டிருக்கிறார்கள். அணி வீரர்கள் பற்றிய எந்த ஒரு தகவலையும் தெரிந்து கொள்ள முடியவில்லை. யாருக்காவது தெரிந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.  இறுதிப் போட்டி, இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு, DD Sports Chennal-ல் ஒளிபரப்புகிறார்கள்.

 Kabaadi

முடிந்தால் இதையும் தான் பாருங்களேன்!!

கபடி மற்றும் உலகக் கோப்பை பற்றிய செய்திகளை அறிந்து கொள்ள, http://www.kabaddi.org/

கபடிக்கான ட்வீட்டர்(Twitter) பக்கம், http://twitter.com/kabaddiorg

இழந்த பெருமையை மீட்பது சாத்தியமே!


"எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு பிரச்சனை?" என்று பலர் புலம்புவதை கேட்டிருக்கலாம். இவ்வாறு புலம்புபவர்கள், தனக்கு பிரச்சனை என்பதை விட, தன்னைப் போல உள்ள, ஆனால் "பிரச்சனை" இல்லாத மற்றொருவரை ஒப்பிடுகிறார் என்று நாம் புரிந்து கொள்ளலாம். இந்திய ஹாக்கிக்கு உயிர் இருந்தால் இப்படித்தான் புலம்பும்.

ஒரு விளையாட்டுத் தொடரில் பங்கேற்க்கும் ஒவ்வொரு அணியும் நாங்கள் தான் வெல்வோம் என்று சொல்லியே களமிற‌ங்கும். ஆனால் இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளரோ, உலக கோப்பையில் ஐந்தாவது இடம் பெற முயற்சிப்போம் என்று பகிரங்கமாக சொல்கிறார். இப்போது புரிந்திருக்குமே, இந்திய ஹாக்கியின் நிலை. அடுத்தடுத்து பல சோதனைகளை சந்தித்து, அவசர சிகிச்சைப் பிரிவில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது, இந்தியாவின் தேசிய விளையாட்டு.

இலவசங்கள் : இல்லாத ஊருக்கு போகும் பாதை : உரத்த சிந்தனை

கட்டுரையாளர் : என்.முருகன், சமூகவியலாளர், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி

தமிழக அரசின் 2010ம் ஆண்டுக்கான கவர்னர் உரையில், இலவசங்கள் அள்ளித் தெளிக்கப்பட்டதை அகில இந்தியாவும் ஆச்சரியமும், கிண்டலும் கலந்த உணர்வுடன் கவனித்து, கருத்துக்களை வெளியிட்டுள்ளது. பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்று, "தமிழக அரசின் நல்வாழ்வுத் திட்டம் எனும் போர்வையிலான இலவசங்கள், ஒரு கடிதம் அதன் உறையை விட பெரிதான தாளில் எழுதப்பட்டு, அந்த உறையினுள் திணிக்க முடியாத அளவு உள்ளது' என கிண்டலடித்துள்ளது. அதாவது, பட்ஜெட்டில் பணம் இருக்காது எனக் கூறுகிறது இந்தப் பத்திரிகை.