Pages

ரஜினியை வாழ்த்துவதால் மானம் போய்விடுமா?

 

நம்மாளுங்களை 2 வகையா பிரிக்கலாம்.. தமிழினம்தான் எல்லாத்துலயும் சிறந்ததுன்னு சொல்லிட்டே இருக்கிற தற்பெருமை உள்ளவர்கள்..  நம்மளை  நாமளே கேவலபடுத்திக்கிற, தாழ்த்திக்கிற தாழ்வு மனப்பான்மை உள்ளவங்க...

பெரும்பாலும், எல்லாரிடம் இந்த இருவேறு குணங்கள் பச்சோந்தி மாதிரி, இடத்திற்க்கு தகுந்தார் போல், நேரத்துக்கு தகுந்தார் போல் மாறி மாறி வந்துகொண்டே இருக்கும். அதே மாதிரி சில குறிப்பிட்ட நிகழ்வுகளை, நமக்கு நாமே கேவலமானது எனக்கூறி கூனிக்குறுகுவது.

திரைக் கதாநாயகர்களுக்காக, காவடி எடுப்பது, அலகு குத்துவது போன்ற எல்லா மூடத்தனங்களும்  உலகமெங்கும் உண்டு... வட இந்தியர்கள், அரேபியர்கள், வெள்ளையர்கள் என எல்லாரும் இதை செய்து கொண்டேதான் இருக்கிறார்கள்... ஆனால் அவற்றின் வடிவங்கள் வேறு...

அமிதாப் மருத்துவனையில், அறுவைசிகிச்சைக்காக அனுமதிக்கபட்ட போது, மும்பை சித்தி விநாயகர் கோவில் உட்பட, வட இந்தியாவில் பல இடங்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.. சஞ்சய்தத் சிறையில் அடைக்கபட்ட போது, உண்ணாவிரதம் இருந்து பாத யாத்திரை செய்தவர்கள் பலர்... மாதுரியை வரைந்த ஹுசைன், மர்லின் மன்றோ உடையை பல கோடிகளுக்கு ஏலம் எடுத்த தொழிலதிபர்,  என பல வடிவங்களில் எல்லா மூடத்தனங்களும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன..

உலகத்தில் உள்ள எந்த நடிகர்களுக்கும் பேஸ்புக், ட்வீட்டர், ப்ளாக்கர், போன்றவற்றில் வாழ்த்து செய்திகள் சொல்லப்படுவதே இல்லையா?

ஆஜ் தக், ஸ்டார் ப்ளஸ் போன்ற சேனல்கள் பார்த்தால் மும்பையைத் தாண்டி வட இந்தியாவின் மற்ற ஊர்களில் என்ன நடக்கிறது என்று தெரியும். திரைப்பட நடிகர்களின் சொந்த விஷயங்களை மட்டுமே பல மணி நேரத்துக்கு செய்தியாக சொல்லும் ஒரு சில அலைவரிசைகள் இருக்கிறது என்றால் வட இந்தியர்கள் எப்படி தமிழனின் ரசனையை கிண்டலடிக்கலாம்?. அதற்க்கு நம்மவர்களும் எப்படி ஒத்து ஊதலாம்? வாரமலரில் மட்டும்தான் துணுக்குமுட்டை வருகிறதா, டைம்ஸ் ஆப் இந்தியாவில் வருவதில்லையா?

ராகுல் காந்தியின் புகைப்படம், பால்பேடா படையலையும், வாஜ்பாயின் புகைப்படம், லட்டு படையலையும், ஏற்றுக் கொள்ளும் என்றால், ரஜினியின் கட் அவுட் பாலாபிஷேகத்தையும் ஏற்றுக் கொள்ளும்.

மைக்கேல் ஜாக்சன் பிறந்தநாளில், மர்லின் மன்றோ பிறந்த நாளில் மெழுகுவர்த்தி ஏந்தி பொது இடங்களில் கூடி, பிரார்த்தனை செய்வது கூட மூட நம்பிக்கைதான்.

வெள்ளைக்காரன் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் போற மாதிரி, தமிழ்நாட்டுக்காரன் காவடி எடுத்துட்டு ஊர்வலம் போறான். வடிவம்தான் மாறுகிறதே ஒழிய, எல்லாமே மூட நம்பிக்கைகள்தான். மடத்தனம் தான்.

மைக்கேல் ஜாக்சன் மட்டுமின்றி, வில் ஸ்மித், ஜாக்கிசான், புருஸ்லி, அர்னால்டு, ஜெனிபர் லோபஸ், மர்லின் மன்றோ, ஜூலியா ராபர்ட்ஸ் போன்ற பல நடிகர்களின் டி ஷர்டுகள், அவர்களின் திரைப்பட ஸ்டில்கள், ஸ்டைல்கள் எல்லாவற்றையும் வெள்ளையர்கள், அரேபியர்கள் பலர் பயன்படுத்துவதை பார்த்திருக்கிறேன்...

அர்னால்டு, ஜாக்கிசான், ஜாக்சன் எல்லோருமெ ஒவ்வொரு துறையிலும் தனித்திறமை படைத்தவர்கள். ஒத்துக் கொள்கிறேன். அதே போல ரஜினிக்கும் சில திறமைகள் உண்டு என்பதை நீங்கள் ஒத்துக் கொண்டுதான் ஆகவேண்டும். அவருக்கு எந்த திறமையும் இல்லை என்று   நீங்கள் சொன்னால், இத்தோடு பதிவை மூடிவிட்டு, வேறு வேலையை பாருங்கள்.

அர்னால்டு படம் போட்ட டிஷர்ட் போட்டா படிச்ச மேதாவி, ரஜினி படம் போட்ட டிஷர்ட் போட்டா உங்களுக்கு பட்டி காட்டான்.. முட்டாப் பய.... 

ஜாக்கிசான், புருஸ்லீ, ஜாக்சன் படம் போட்ட டிஷர்ட்களை அவர்கள் போட்டுக் கொண்டு வந்தால், பாராட்டுவீர்களா?  ”பட்டிகாட்டானுக்கு பொழப்ப பார்த்தியா, ஜாக்சன் டிஷர்ட்டு! என்று கிண்டலடிப்பீர்கள்!

வெள்ளையர்கள், அரேபியர்கள், வட இந்தியர்கள்,  ஹாலிவுட், பாலிவுட் நட்சித்திரங்கள் படம் போட்ட டி-ஷர்ட் போடவே மாட்டார்களா?

டி காப்ரியோ வந்தால் அவர்கள் கூடி, ரோடு ப்ளாக் ஆகும். மோகன்லால் வந்தால் நம்மவர்கள் கூடி ரோடு ப்ளாக் ஆகும். (சமீபத்தில் பஹ்ரைனில் நடந்த்து).  இரண்டுமே கேவலமில்லை. அவரவர்களுக்கு பிடித்தத, அவரவர்கள் செய்கிறார்கள்.

காவடி எடுத்து, பாலாபிஷேகம் செய்பவர்கள், விழிப்புணர்வு இல்லாதவர்கள்.. படிப்பறிவு இல்லாதவர்கள், வியாபார நிறுவனங்களால் ஆட்டுவிக்கபடுகிறவர்கள்.. போலியான விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டவர்கள். தன்னிலை மறந்து போலி புகழுக்குப் பின்னால் அலைந்து திரியும் சாதாரண மனிதர்கள்.  திரைப்பட நாயகன் என்பதையும் தாண்டி, அவனை தலைவனாக ஏற்றுக் கொள்ள செய்தது சுயநலம் மிகுந்த வியாபாரிகள், அரசியல்வாதிகள்.

மன்மோகன் உலகிலேயே அதிகம் படித்த மேதைதான்... நடப்பது எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு, அமைதியாகத்தான் இருக்க முடிகிறதே தவிர, அவரின் பெயரால், அவரின் தலைமையின் கீழ் நடைபெறும் அரசின் தவறுகளை தடுக்க இயலாது. அதே போல, ரஜினியே நினைத்தாலும் சில விஷயங்களை தடுக்க இயலாது. அவரே நினைத்தாலும் அதிலிருந்து வெளிவருவதென்பது இயலாத காரியம்.

ஹாலிவுட்டில் செய்யாத எந்த பறக்கும் வித்தையையும், விஜய்யும், தனுஷும் செய்வதில்லை.  ஹாலிவுட்டில் எவ்வளவு பூ சுத்தினாலும் பார்க்க்கும் அறிவுஜீவிகள், தமிழ் படத்தில் மட்டும் லாஜிக் பேசுவார்கள்.

சில விஷயங்களை குறை சொல்லுவதை விட்டுவிட்டு  நிதர்சனத்தை புரிந்து கொண்டு, வெறுப்பை உமிழாதீர்கள்.

பின்குறிப்பு : இப்பதிவு பாலேபிஷேகம், காவடி எடுத்தல், மண் சோறு சாப்பிடுதல் போன்ற மூட நம்பிக்கைகளை ஆதரித்து எழுதப்பட்ட பதிவு அல்ல. வட இந்தியன் கிண்டலடிக்கிறான்.. வெள்ளைக்காரன் சிரிக்கிறான். மலையாளி  நக்கல் பண்றான் என்று பொருமுபவர்களுக்காக எழுதப்பட்ட பதிவு.