Pages

ஆயுதப் போராட்டம் தேவையா?

என்னுடைய "பிரபாகரனும் பழசிராஜாவும்" என்ற பதிவை படித்துவிட்டு, நண்பர் பிரசன்னா அவர்கள் எனக்கு ஒரு மின் அஞ்சல் அனுப்பியிருந்தார். அதில் ஒரு சில பகுதிகள் மட்டும் இங்கே!

"ராஜிவ் காந்தி, அமிர்தலிங்கம், ஸ்ரீசபாரத்னம், பத்மநாபா, பிரேமதாசா எல்லாரையும் தெரியுமாண்ணே?அவுனுகள விடுன்னே.அப்ப செத்த ஜனங்கள என்னண்ணே செய்ய சொல்ற? பொணத்து மேல ராஜாங்கம் பண்ண வேணாம்னே...அங்க ஒரு காலோ கையோ போயி அழுவுற குழந்தைகிட்ட அவுங்க அம்மா "இது ஈழ போராட்டம்,பொறுத்துக்க"‍ன்னு சொல்ல முடியுமா? இல்ல பசிக்குதுன்னு அழுவுற குழந்தைகிட்ட அப்டி சொல்ல முடியுமா? யாருக்குமே அடிச்சா வலிக்கதானே செய்யும்.அது பிரபாகரனோ ராஜபக்க்ஷேவோ... முப்பது வருசமா ஒன்னும் பாக்காத சனம். இனிமேவாவுது எதாவுது நடக்குமான்னு பாக்குது...முடிஞ்சா நம்ம சிநேகித புள்ளைங்கள கூட்டிகிட்டு Beach Resort க்கு போகாம ராமேஸ்வரம் மண்டபம் முகாமுக்கு ஒரு தடவை போயிட்டு வாங்க..."

என்று குறிப்பிட்டு எழுத்தாளர் சாருநிவேதிதா அவர்களின் "வன்முறையின் தோல்வி" என்ற பதிவையும் படிக்க சொல்லியிருந்தார்.

அவருக்கு மட்டுமல்ல, ஆயுதப் போராட்டம் பற்றி விமர்சனம் செய்பவர்களுக்கு என்னுடைய பதில் இதோ,

இந்திய அரசு சமாதான பேச்சில் ஈடுபட்ட 1986-‍ம் வருடம், சென்னையில் பிரபாகரன் தமிழக காவல்துறையால் சிறைபிடிக்கப் பட்டதும், சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். பின்னர், அவர் விடுதலை செய்யப்பட்ட நேரத்தில் பத்திரிக்கையாளர்கள் அவரிடம், "இந்தியாவில் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றியும் கண்டிருக்கும் நீங்கள், இலங்கையில் மட்டும் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுகிறீகளே, ஏன்?" என்று கேட்டார்கள்.

அறப்போராட்டத்தால் சுதந்திரம் அடைந்த இந்தியாவுக்குத்தான் அந்தத் போராட்டத்தின் மதிப்புத் தெரியும் நாங்கள் எந்த வகையான ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை எங்கள் எதிரிகள்தான் தீர்மானிக்கிறார்கள். அதனால்தான், "செய்து முடி; அல்லது செத்து மடி!" என்ற கொள்கையுடன் ஈழத்தில் உயிர்ப் போராட்டம் நடத்துகிறோம்" என்றார் பிரபாகரன்.

கோயில் பூசாரிகளாக இருந்த தமிழரை உயிருடன் தீ வைத்து சிங்களர்கள் கொளுத்திப் போட்டதையும், தமிழ்க் குழந்தைகளைக் கொதிக்கும் தார் டின்களில் உயிருடன் போட்டக் கொடுரங்களையும் கேட்ட பிரபாகரன் இரத்தம் கொதித்துப் போய், பத்தாம் வகுப்புடன் தனது படிப்பை நிறுத்தி விட்டு, டி.என்.டி எனப்ப்டும் "தமிழ் புதிய புலிகள்" எனும் அமைப்பைத் தொடங்கினார்.

1983-‍ம் வருடம் ராணுவம் தாக்குதலைத் தொடங்கி பல்லாயிரக் கணக்கான தமிழ்ப் பெண்களை சூரையாடியதைத் தொடர்ந்து, புலிகள் இயக்கம் போரை தொடங்கியது.

ஒரு இயக்கம் ஆயுதப் போராட்டத்திற்க்கு த‌ள்ள‌ப் ப‌ட்ட‌ வ‌ர‌லாறு இது.

மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் யாவும், நான் புத்தகங்கள் படித்து தெரிந்துக் கொண்டவை.

சில ஆண்டுகளுக்கு முன், மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் நிர்வாணப் போரட்டம் நடத்தினார்கள். அது வரையிலும், "இந்திய இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் அம்மாநில பெண்களை கற்பழித்து கொன்று குவிக்கிறார்கள்" என்ற குற்றச்சாட்டை ஆளும் அரசியல்வாதிகள் கேட்க வில்லை. தகவல் தொடர்பு சாதனங்களும் அதை கண்டுகொள்ளவில்லை. ஆனால், இந்த போராட்ட செய்தியை போட்டி போட்டுக் கொண்டு ஒளிபரப்பி ஒய்ந்தன். இன்று வரையிலும், இந்த குற்றச்சாட்டு வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது.

ஒரிசா, மேற்கு வங்கம், உத்தராஜ்சல் போன்ற மாநிலங்களில் நிலவும் குடி தண்ணீர், சாலை வசதி போன்ற உள்கட்டமைப்பு பிரச்சனைகள் குறித்து பல முறை கோரிக்கை விடுத்தும் எந்த பலனும் இன்றி, மக்கள் நக்ஸல் இயத்தத்தினரை ஆதரிக்கத் துவங்கி இருக்கிறார்கள். ஊடகங்கள் மாறி மாறி ஒளிபரப்புகின்றன. இப்போது பிரதமர், உள் கட்டமைப்பை மேம்படுத்த சொல்லி குரல் கொடுக்கிறார். நக்ஸல் இயக்கங்கள் வெற்றி பெற்றதா இல்லையா என்பது கேள்வியில்லை. அவர்களின் ஆயுதப் போரட்டம் தான் இன்றைய இந்திய அரசை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.

இன்றைய உலகில், அறப் போராட்டங்கள் கண்டுக் கொள்ளப் படுவதில்லை. காந்தியின் நாட்டிலேயே இந்த நிலைமை.....

ஒருவேளை விடுதலைப் புலிகள் ஆயுதப் போரட்டத்தில் ஈடுபடாமல் இருந்திருந்தால், தமிழர்களின் இனப்படுகொலைகள், உலகின் கவனத்தை இந்த அளவுக்கு ஈர்த்திருக்குமா என்பது சந்தேகமே!

ஆயுதப் போராட்டம் வெற்றி பெற்றதா இல்லையா என்பதை காலம் தான் தீர்மானிக்க வேண்டும்!

பிரபாகரனும் பழசிராஜாவும்

தமிழினத்தின் விடுதலைக்காகவே தன் வாழ் நாள் முழுவதும் செலவிட்ட ஒரு ஒப்பற்ற தலைவனின் பிறந்த தினம் இன்று. அவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சைகள் ஒரு புறம் இருக்க, ஒரு மாவீரனை, அவரது ஒப்பற்ற தியாக உணர்வை நினைவு கூற வேண்டும். Prabhagood


சமீபத்தில், பழசி ராஜா என்ற திரைப்படத்தில், கேரளா நாட்டை சேர்ந்த மன்னரின் சுதந்திர போராட்ட வரலாற்றை காண நேர்ந்தது. அத்திரைப்படம் பார்க்கும் போது, எனக்கு நினைவுக்கு வந்தது இலங்கையின் யுத்த களம்தான்.


சிங்கள இராணுவம் பிரிட்டிஷ் இராணுவம் போன்று போர்க்கான எந்த விதமான விதிகளையும் பின்பற்றவில்லை என்றாலும், போராளிகளின் வாழ்க்கை இரு இடங்களிலும் ஒரே மாதிரிதான் உள்ளது.

மக்களை காப்பாற்ற வேண்டி, அமைதி ஒப்பந்தத்தில் பழசி ராஜாவாக வரும் மம்முட்டி கையொப்பமிடுகிறார். ஒப்பந்தத்தில் உள்ள எதையும் நிறைவேற்றாமல் இழுத்தடிப்பதாய் கூறி, நாட்டை விட்டு வெளியேறி போர்க் கோலம் பூணுகிறார்.

2003‍ல் நடந்த டோக்கியோ பேச்சு வார்த்தைகளின் போது விடுதலைப் புலிகள் வெளியேறியதற்க்கும் பல காரணங்கள் இருந்தன என்பது உலகமே அறியும்.

ஒவ்வொரு முறை, பழசி ராஜாவைக் காக்க ஒவ்வொரு தளபதியும் எவ்வளவு முயற்சி செய்கிறார்கள் என்று பார்க்கும் போது, ஈழத்தில் பிரபாகரனை பாதுகாக்க இப்படித்தானே போராடியிருப்பார்கள் என்று பதைபதைக்கிறது நெஞ்சம்! ஒவ்வொரு தளபதியும் கொல்லப்பட்டார் என்று, நாள் தோறும் செய்திகள் வந்தபோது எப்படி ஏமாந்து போயிருப்பார்கள் எம் சகோதர மக்கள்.

இறுதிக் காட்சியிலே, தானே போருக்கு சென்று, அத்தனை வீரர்களையும் வீழ்த்தி துப்பாக்கியால் மாண்டு போகிறார் பழசி ராஜா. இதே போலத் தான் பிரபாகரனும் போரிட்டிருப்பார். தப்பித்து செல்லும் போது சுட்டுக் கொன்றோம் என்று சிங்கள இராணுவம் கூறும் கட்டுக் கதைகளை யாரும் நம்பத் தயாரில்லை.

பழசிராஜா மாண்டதற்க்குப் பின், பிரிட்டிஷ் கலெக்டர் சகல இராணுவ மரியாதைகளொடு அவருக்கு வீர வணக்கம் செலுத்துகிறார். இதையெல்லாம் வெறி பிடித்த சிங்கள இராணுவத்திடம் எதிர்பார்க்க இயலாது.

பழயம்வீடன் சந்துவாக வரும் நடிகர் சுமன் இல்லாமல் அவர்களால் ராஜாவை நெருங்கிருக்க முடியாது. கருங்காலி கருணாவின் இல்லாமல் அவர்களால் ஈழத்தை வீழ்த்தி இருக்க முடியாது.

நடிகர் திலகம் சிவாஜி நடித்த கர்ணன் திரைப்படத்தின் இறுதிக் காட்சியில், கிருஷ்ணனாக் வந்த என்.டி.ர், அர்ஜீனனிடம், "உனக்கு முன்பே 10 பேர் கர்ணனை கொன்று விட்டோம். செத்த பாம்பை அடித்து விட்டு, நான் கொன்றேன் நான் கொன்றேன் என்று சொல்லுகிறாய். " என்று கூறி பத்து காரணங்களையும் பட்டியிலுடுவார்.

அதே வரிகளைத் தான், சிங்கள இராணுவ தளபதி சரத் பொன்சகோவிற்க்கும், இராஜபக்சேவிற்க்கும் சொல்ல விரும்புகிறோம்.

1. கருங்காலி கருணா
2. காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா ‍
3. பாரதப் பிரதமர் மன்மோகன் சிங்
4. இந்திய இராணுவம்
5. தமிழக முதல்வர் கருணாநிதி
6. முதுகெலும்பில்லாத‌ த‌மிழ‌க தலைவர்கள்
7. சீன இராடர்கள்
8. மலேசிய அரசு
9. இன்டர்போல்
10. முதுகெலும்பில்லாத தமிழக மக்கள் (என்னையும் சேர்த்து தான்)

வணக்கம்!

தமிழுக்கு முதல் வணக்கம்!
என் தலைவன் பாரதிக்கு வணக்கம்!

தமிழ் பேசும் எம்மக்களுக்கு வணக்கம்!
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்! - என்றான் பாரதி

எனக்கு பாரதி போல் பல மொழிகள் தெரியாவிட்டாலும், என் தாய் மொழியாம் தமிழில் முதல் பகுப்பு தொடங்குவதே உசிதம் என்று நினைத்து இணைகிறேன்.

நான், நேற்றைய நினைவுகளிலும் நாளைய கற்பனைகளிலும் மிதந்து கொண்டு இருக்கும் இன்றைய இளைய சமுதாயத்தின் அங்கம்.


உலகின் ஏதாவது ஒரு மூலையில் பெரிய அசம்பாவிதம் நடந்தால் கூட, அந்த செய்தியை பத்து பேருக்கு அனுப்பி விட்டு அடுத்த வேலையை கவனிக்க செல்லும் மனிதாபிமானி!.

அரசு பள்ளியில் கணினி படித்துவிட்டு, அமெரிக்க கனவில் வாழ்ந்து கொண்டு இருக்கும் இன்றைய இளைஞன்.

நாற்பது ரூபாய் கொடுத்து, முன்பதிவு இல்லாத ரயிலில் சென்னையிலிருந்து என் சொந்த ஊருக்கு சென்று கொண்டு இருந்த நான், நானூறு ரூபாய் கொடுத்து சொகுசு பேருந்தில் முன் பதிவு செய்யும் இன்றைய இளைஞன்.

இனி என்னுடைய கருத்துக்களை, எனக்கு தெரிந்தவைகளை, எனக்கு பிடித்தவைகளை இங்கு பகிர்த்து கொள்ள இருக்கிறேன்.

நாள் தோறும் வளரும். மெல்லத் தமிழ் இனி வளரும்.

படித்ததில் பிடித்தது - வாழ்க்கை!


சில தினங்களுக்கு முன் தொடர் மின்னஞ்சல் மூலம் இந்த சிறிய கதை எனக்கு வந்தது. இதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்

நான் சிறிய பெண்ணாக இருந்தபோது, என் அம்மா இரவு உணவு தயாரித்து தருவார்கள். ஒரு நாள் அம்மா தன்னுடைய அலுவலக வேலைகளை முடித்துவிட்டு மிகவும் சோர்வாக, இரவு உணவு தயாரித்து கொண்டிருந்தார்கள். நீண்ட நேரத்திற்குப் பின், தட்டில் முட்டை மற்றும் தீய்ந்த போன பிரட் கொண்டு வந்து, என் அப்பாவின் முன் வைத்தார்கள். நான் திகைத்து போய் அப்பாவை நோக்கினேன். அப்பாவோ, அம்மாவை பார்த்து புன்னகைத்து விட்டு, என்னிடம் என் படிப்பு பற்றி விசாரித்தார். நான் என்ன பதில் சொன்னேன் என்று எனக்கு சரியாக நினைவு இல்லை. எனக்கோ அந்த தீய்ந்து போன பிரட்டை எப்படி அப்பா சாப்பிடுகிறார் என்று பார்த்து கொண்டிருந்தேன்.

சிறிது நேரம் கழித்து அம்மா, அப்பாவிடம் மன்னிப்பு கேட்டு கொண்டிருந்தார். அதற்க்கு அப்பா, "கண்ணே, எனக்கு தீய்ந்து போன பிரட் ரொம்ப பிடிக்கும்" என்றார்.

அன்றைய பின்னிரவில், நான் அப்பாவிற்கு குட் நைட் சொல்லி விட்டு, கேட்டேன்., "உங்களுக்கு உண்மையாகவே தீய்ந்து போன பிரட் பிடிக்குமா என்று".
என்னை தூக்கி மடியில் வைத்துக் கொண்டு அப்பா சொன்னார். "செல்லம், உன் அம்மா இன்று நிறைய அலுவலக வேலை செய்து விட்டு சோர்வாக உள்ளார். ஒரு நாள் தீய்ந்து போன ரொட்டி சாப்பிட்டால் ஒன்றும் ஆகாது.

ஒன்று தெரிந்து கொள், "வாழ்க்கையில் அனேக விஷயங்கள் சரியாக அமையாது, நான் கூட சரியாக சமைக்க மாட்டேன்! வீட்டை சுத்தமாக வைத்திருக்க மாட்டேன்.

அடுத்தவரின் தவறுகளை சகிக்க கற்றுக் கள்ள வேண்டும். மற்றவரின் உணர்வுகளை மதிக்க வேண்டும். சகிப்புத்தன்மை என்பது ஆரோக்கியமான நீண்ட உறவை கொடுக்கும். " என்றார்.

நமது தேச தந்தை காந்தி சொன்னதும் இது தான். நமது வாழ்வில் ஒவ்வொரு நிலையிலும் வெவ்வேறு வகையான மனிதர்களை சந்திக்கிறோம். அவர்கள் செய்யும் சில விஷயங்கள் நமக்கு பிடிக்காமல் இருக்கலாம். அதற்காக அவர்கள் மேல் கோபப்படுவது சரியாக இருக்காது.