Pages

கோபன்ஹெகன்

 

கடந்த சில நாட்களாக "கோபன்ஹெகன்" என்பதை பற்றி ஊடகங்கள் பரபரப்பாக பேசி வருகின்றன. ஆங்காங்கெ விளம்பரங்கள், நாடளுமன்றத்திலும் அது பற்றித்தான் பேச்சு. அது என்ன "கோபன்ஹெகன்"?  புதிதாக வந்திருக்கும் கைபேசி நிறுவனமா? இல்லை "ஸ்பெக்ட்ரெம்" மாதிரி ஏதேனும் ஊழல் சமாச்சாரமா? என்று கேட்காதீர்கள்.

கோபன்ஹெகன், டென்மார்க் நாட்டின் தலைந‌கரம். புவி வெப்பமடைதல் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த சர்வதேச மாநாடு இன்று (டிசம்பர் 7), இங்குதான் தொடங்குகிறது. 192 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள், குறிப்பாக 60 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் இதில் பங்கு பெறுகிறார்கள். டிசம்பர் 18‍ம் தேதி வரை நடக்கும் இந்த மாநாட்டில் உலக அளவில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்பர். மாநாட்டின் இறுதி 2 நாட்களில் அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்திய பிரதமர் மன்மோகன்சிங், பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரவுன், சீன அதிபர் வென்ஜியாபோ உள்பட பலர் பங்கேற்று பேசுகின்றனர்.

ஏன் கோபன்ஹெகன் நகரத்தில் இந்த மாநாட்டை நடத்துகிறார்கள் என்பதற்க்கு சுவையான வரலாறு உள்ளது. 1000 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த கோபன்ஹெகன் நகரம், 15‍ம் நூற்றாண்டு முதல் டென்மார்க் நாட்டின் தலைநகரமாக திகழ்கிறது. பல ஆண்டுகளாக மக்கள் வாழ்வதற்க்கேற்ற நகரங்களில் முதலிடத்தை பிடித்துள்ளது. 2008 ஆம் ஆண்டு  Monacle என்ற சர்வதேச மக்கள் வாழ்க்கைமுறை இதழ், சிறந்த 25 வாழ்வதேற்க்கேற்ற நகரங்களில் முதன்மையான நகரமாக கோபன்ஹெகன்னை அறிவித்துள்ளது.

இதைவிட முக்கியமானது சுற்றுச்சூழலில் சிறந்த நகரமாக கோபன்ஹெகன் விளங்குகிறது. 36 சதவிகிதம் மக்கள் மிதிவண்டியையே பயன்படுத்துகின்றனர். ஐரோப்பாவிலேயே மிகவும்  சுத்தமான நகரமாக சுற்றுலாப் பயணிகள் வாக்களித்துள்ளனர்.

கோபன்ஹெகன் மாநாட்டின் முதல்நாள் ஒளிப்பரப்பப் பட்ட‌  "தயவு செய்து உதவுங்கள் உலகுக்கு" (Please help the world) என்ற காணொளியை கீழே இணைத்துள்ளென்.

 

எரிபொருளில் இருந்து வெளியேறும் நச்சுக்காற்றின் ( கிரீன் எமிசன்) அளவை குறைப்பது, புவி வெப்பமடைதல் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்ப்படுத்துவது, பருவ நிலை மாற்றங்களால் ஏற்படப் போகும் விளைவுகள் போன்ற முக்கியப் பிரச்சனைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப் படுகின்றன. இதற்குப் போய் இடது சாரிக் கட்சிகள் ஏன் "அணு ஆயுத உடன்படிக்கை" போல சண்டை போடுகிறார்கள்? இதனால் இந்தியாவுக்கு என்னப் பிரச்சனை என்கிறீர்களா?

உலக நாடுகள் கார்பன் வெளியேற்றத்தை குறைக்க முன் வரவேண்டும் என்ற சட்டதிட்டம்தான். இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, பிரெசில் போன்ற நாடுகள் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன. இவர்களால் தான் புவி வெப்பமடைகிறது என்பது அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளின் குற்றச்சாட்டு. 200 ஆண்டுகளாக பணக்கார நாடுகள் எல்லாவற்றையும் அனுபவித்து, நச்சுக்காற்றை பரப்பிவிட்டார்கள். இப்போது அவர்களுக்கும் எங்களுக்கும் ஒரே சட்டமா? என்பது இந்தியாவின் குற்றச் சாட்டு.

இது ப‌ற்றிப் பேசிய மத்திய சுற்றுச்சூழல் இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், "இந்தியா ஏற்கனவே கடந்த 1990-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை 17 சதவீத புகை மாசைக் குறைத்துள்ளது. 2005-ம் ஆண்டு அளவிலிருந்து, அடுத்த 11 ஆண்டுகளுக்குள் (2020க்குள்) 20 முதல் 25 சதவீத அளவுக்கு புகை மாசு குறைக்கப்படும். அதேசமயத்தில், இதை சர்வதேச சட்டங்களின் மூலமாக இந்தியாவின் மீது திணிக்க முடியாது. இந்தியாவே விரும்பி இதை செய்கிறது. இதில் இந்தியாவின் மீது நிர்ப்பந்தங்களை ஏற்க முடியாது." என்கிறார்.

பருவ நிலை மாற்றத்தால் இந்தியா கடுமையாக பாதிக்கப்படக் கூடிய நாடுகளில் ஒன்று. காரணம், பெரும்பாலான மாநிலங்கள் பருவ மழைகளை நம்பி உள்ளது. இமயமலைப் பனிச் சிகரங்கள் உருகத் தொடங்கியுள்ளன, ஜார்க்கண்ட், ஒரிசா, சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில் காடுகள் முழுமையாக அழியும் அபாயம் உள்ளது. உண்மையில், இந்தியாவுக்கு இதனால் என்ன பாதிப்பு என்பது குறித்து தகவலே இல்லை. இது மிகவும் வேதனையான விஷயம். மேற்கத்திய நாடுகளிடமிருந்து புவிவெப்ப மாற்றம் குறித்து நமக்கு கிடைக்கும் தகவல்களில் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்ற தகவல் இடம் பெறுவதில்லை. எனவே நமது விஞ்ஞானிகள் மூலம் விரிவான அறிவியல் ஆய்வை மேற்கொண்டு நமது பாதிப்பு என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம் என்று கூறுகிறார் அமைச்சர்.

இந்த மாநாட்டில் நிறைவேற்றப்படும் உடன்படிக்கைகளின் படி அனைத்து நாடுகளும் மாசுக் கட்டுப்பாட்டு நடவடக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வன வளங்களை மேம்படுத்த வேண்டும்.

அரசுகள் செய்வது இருக்கட்டும். பொதுமக்களாகிய நாம் செய்ய வேண்டியது என்ன‌

1. மின்சாரத்தை சேமிக்க வேண்டும். இதனால் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிப்பதை கட்டுப் படுத்த முடியும்.
2. நெகிழ்வு பைகள் பயன்படுத்துவதை குறைக்க வேண்டும் அல்லது நிறுத்த வேண்டும்.
3. நமது வாகனங்களில் மூலம் புகை மாசு ஏற்படுத்துவதை நிறுத்தவேண்டும்.
4. குடி நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
5. மரம் வளர்த்தலில் ஈடுபட வேண்டும்.

2012, Day After Tomorrow போன்ற ஆங்கிலத் திரைப்படங்கள் பார்த்தவர்களுக்கு இம்மாதிரியான மாநாடு எவ்வளவு அவசியம் என்பது புரியும். மிகப் பெரிய ஆபத்தை எதிர் நோக்கியுள்ளோம். பருவ நிலை மாற்றத்தைத் தடுக்கும் முயற்சிகளில் நாமும் ஈடுபட வேண்டியுள்ளது அவசியம்.

பி.கு: பிடிச்சிருந்தா ஓட்டு போட்டுட்டு போங்க! பிடிக்கலைனாலும்  ஓட்டு போட்டுட்டு போங்க! தமிழ் மணத்திலும், Tamilish-லும்

No comments: