Pages

நாட்காட்டி

இதோ இன்னும் சில தினங்களில் உலகில் ஒரு புதிய ஆண்டு பிறக்கப் போகிறது. இந்த ஆண்டு முதலில் வரப்போவது இஸ்லாமியர்களின் புதிய ஆண்டு. பிறகு ஆங்கில புத்தாண்டு, தை புத்தாண்டு, திருவள்ளுவர் ஆண்டு, தெலுங்கு, சித்திரை புத்தாண்டு என வரவிருக்கின்றன. மேலே குறிப்பிட்ட புத்தாண்டுகள் தான் உள்ளது என நீங்கள் நினைத்தால், அது தான் இல்லை..எகிப்து நாட்காட்டி, சீன நாட்காட்டி, டச்சு நாட்காட்டி போன்ற சுமார் 300 நாட்காட்டிகள் உள்ளன.

தற்போது, உலகில் எல்லா மக்களும், அரசுகளும் பயன்படுத்துவது ஆங்கில நாட்காட்டி எனப்படும் கிரிகோரியன் நாட்காட்டியைத்தான் என்றாலும், நாடுகளுக்கென்று தனித்தனியாக அதிகாரப் பூர்வ நாட்காட்டி உள்ளது. இந்தியாவின் தேசிய நாட்காட்டி "இந்து நாட்காட்டி" (விளக்கம் பின்பு வரும்).


உலகில் உள்ள எல்லா நாட்காட்டிகளையும் எடுத்துப் பார்த்தால், ஒவ்வொன்றும் ஒவ்வோரு நாளை காட்டும். யார், எந்த அடிப்படையில் இவற்றையெல்லாம் வகுத்தார்கள்? எப்படி நாட்கள் கணக்கிடப்படுகிறது?
மனித இனம் மதங்களுக்குள் புகுந்த கொண்ட பின்னர், மதங்களின் பெயராலேயே நாட்காட்டிகள் வகுக்கப் பட்டன. மத குருமார்களின் அனுமதியோடுதான், வானியல் அறிஞர்கள் வகுத்த நாட்காட்டிகள் அங்கீரிக்கப்பட்டன. இன்றைய பகுத்தறிவாளர்கள் கூட, மதங்களின் பெயரால் வழங்கப் படுகின்ற, இவற்றை பயன்படுத்துகின்றனர்.
இந்தியாவில் பெரிய சமயங்களாக உள்ள இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ சமயங்கள் ஒவ்வொன்றும் ஒரு நாட்காட்டிகளைக் கொண்டுள்ளன. இவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

நாட்காட்டி ஆண்டு-மாதம்-நாள் மற்றும் ஆண்டு-வாரம்-வாரநாள் போன்ற சுழற்சி முறைகளில் கணக்கிடப் படுகிற‌து. இந்த சுழ‌ற்சி முறைக‌ள், சூரிய‌ன்-ச‌ந்திர‌ன் இவ‌ற்றின் சுழ‌ற்சியைக் கொண்டு க‌ண‌க்கிட‌ப் ப‌டுகிற‌து.‌ நிலவின் சுழற்சியை மட்டும் கணக்கிடப்பட்ட நாட்காட்டி, சூரியனின் சுழற்சியை மட்டும் கணக்கிடப்பட்ட நாட்காட்டி ஆகியவையும் உண்டு. இது மட்டுமல்லாது வியாழனின் சுழற்சியைக் கொண்டு கணக்கிடப்பட்ட நாட்காட்டியும் உண்டு.

இந்த முறை இஸ்லாமியப் புத்தாண்டு வரும் 18‍-ம் தேதி பிறக்கிறது. இதை எப்படி கணக்கிடுகிறார்கள் என்று பார்ப்போம். இஸ்லாமிய நாட்காட்டி அல்லது ஹிஜ்ரி நாட்காட்டி என்பது சந்திரனின் (Lunar Circle) சுழற்சியை கொண்டு கணக்கிடப் பட்ட, 12 மாதங்களைக் கொண்ட நாட்காட்டியாகும். நிலவு பூமியை சுற்றி வர 29.53 நாட்கள் (சாராசரியாக 29 நாட்கள், 12 மணிகள், 44 நிமிடம்) ஆகிறது. 

இந்த முறையில் கணக்கிட்டதால், ஒரு இஸ்லாமிய நாட்காட்டி ஆண்டு என்பது 354.37 நாட்களை மட்டுமே கொண்டுள்ளது. கிரிகோரியன் நாட்காட்டியுடன் ஒப்பிடும் போது 11 நாட்கள் (12 நாட்கள், லீப் ஆண்டில்) பின்னோக்கி உள்ளது. அதாவது, இந்த ஆண்டு டிசம்பர் 18‍ம் நாள் வரும் முகரம் எனப்படும் இஸ்லாமிய புத்தாண்டு, அடுத்தாண்டு 11 நாட்களுக்கு முன்பாகவே வந்துவிடும். 

இந்த 11 நாட்கள் இடைவெளி, சராசரியாக 33 இஸ்லாமிய ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப் படுகிறது. இந்த மாற்றியமைக்கும் முறைக்கு பல விதிகள் உள்ளன.

இஸ்லாமிய நாட்காட்டியின், மாதம் முதல் நாள் என்பது, அமாவாசைக்குப் பின் நிலா தோன்றும் நாள். இதனால் தான் இஸ்லாமிய பண்டிகை தினங்கள் பிறை தோன்றுவதைக் கொண்டு மாத முதல் நாளை கணக்கிட்ட பின்னர் பண்டிகை தினத்தை முடிவு செய்வார்கள். எல்லா சந்திர நாட்காட்டிகளும் இந்த முறையை பின்பற்றுவதில்லை. சில சீன, இந்திய நாட்காட்டிகள், முழு பெளர்ணமியை மாத முதல் நாளாக கொள்கின்றன.

இஸ்லாமிய நாட்காட்டியின் வருடங்கள் முகமது அவர்களின் மெதினா பயணத்தைக் கொண்டு கணக்கிடப்படுகின்றன. அவர் மெக்காவிலிருந்து, மெதினாவுக்கு பயணம் (அதற்கு "ஹிஜ்ரி" என்று பெயர்) செய்த ஆண்டு முதல் ஆண்டாக வகுக்கப் பட்டது. அதன் படி பார்த்தால் அவர் பிறந்த ஆண்டை ஹிஜ்ரிக்கு முன் 53 (Before Hijiri 53) என்று குறிப்பிடுகிறார்கள். அதன் படி பார்த்தால், தற்போதய ஹிஜ்ரி ஆண்டு, ஹிஜ்ரிக்குப் பின் 1430 (AH 1430) (கிரிகோரியன் ஆண்டு 2008 டிசம்பர் 28 மாலை முதல் 2009 டிசம்பர் 17 மாலை வரை).

இஸ்லாமிய நாட்காட்டி, சவுதிஅரேபியாவில் மட்டுமே அதிகாரப் பூர்வமாக பயன்படுத்தப் படுகிறது. ஏனைய இஸ்லாமிய நாடுகளான எகிப்து, ஈரான், மொராக்கோ போன்றவை தனித் தனியாக நாட்காட்டிகளைக் கொண்டுள்ளன. இஸ்லாமிய பண்டிகைகளைக் குறிப்பதற்க்கும் இது பயன் படுத்தப் படுகிறது.

அடுத்ததாக உலகில் எல்லோராலும் பயன்படுத்தப்படும் கிரிகோரியன் எனப்படும் ஆங்கில நாட்காட்டி. இதைப்பற்றி எல்லோருமே பள்ளி நாட்களில் படித்திருப்போம். பூமி, சூரியனைச் சுற்றி வரும் நாட்களைக் கொண்டு நாட்களும், மாதங்களும் கணக்கிடப் படும் சூரிய நாட்காட்டியாகும். மணி ‍ நாள் ‍ ஆண்டு என்ற முறையைக் கொண்டு, ஒரு ஆண்டுக்கு 365 அல்லது 366 நாட்களைக் கொண்டுள்ளது. இதே கணக்கீடுகள் 146,097 நாட்களுக்கு அதாவது 400 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக செயல்படுத்தப் படுகிறது.

லீப் ஆண்டு பற்றி உங்களுக்குத் தெரியும். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூமியின் சுழற்சியோடு நாட்காட்டியை ஒருங்கிணைக்க ஒரு நாள் சேர்க்கப் படுகிறது. ஆனால், இதிலும் ஒரு விதி உண்டு. எல்லா நூறாவது ஆண்டும் லீப் ஆண்டு அல்ல. உதாரணமாக, 2000‍-வது ஆண்டு லீப் ஆண்டாகும். ஆனால் 2100, 2200, 2300 ஆண்டுகள் லீப் ஆண்டுகள் அல்ல. 400 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் சேர்க்கப் படும்.

ஆண்டுகளுக்கு எண், இயேசு பெருமான் பிறந்ததாக சொல்லப்பட்ட ஆண்டை முதல் ஆண்டாகக் கொண்டு கணக்கிடப் பட்டது. 12 மாதங்கள், முறையற்ற நாட்களைக் கொண்டுள்ளன. மாதங்கள் 30 அல்லது 31 நாட்கள் கொண்டுள்ளதற்க்கு எந்த காரணமும் கிடையாது. (யாருக்காவது தெரிந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்).

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமையிடமான வாடிகனில்,  போப்பாண்டவர் 13-வது கிரிகோரியால் துவக்கி வைக்கப் பட்டதால், இது கிரிகோரியன் நாட்காட்டி என்று குறிப்பிடப்படுகிறது. ஆண்டின் முதல் நாளை எங்கு தொடங்குவது பெரும் குழப்பம் நிலவியதாம். கிறிஸ்தவ சமுதாயத்தில் சிலர், இயேசு கிறிஸ்து பிறந்த தினமான டிசம்பர் 25‍தான் ஆண்டின் முதல் நாள் எனக் கூறி அதையே கடைப்பிடிக்கின்றனர். இங்கிலாந்தில் 12‍-ம் நூற்றாண்டு முதல் 1751 வரை இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளான மார்ச் 25-‍ம் நாளையே ஆண்டின் முதல் நாளாக கொண்டிருந்தனர். 1752‍-ம் ஆண்டு, ஜனவரி முதல் நாளாக மாற்றியமைத்தனர். இதனால் 1751-‍ம் ஆண்டு 282 நாட்களையே கொண்டிருந்தது.  ஐரோப்பாவில் ஒவ்வொரு நாடும் தனித்தனியாக நாட்காட்டிகளைக் கொண்டிருந்த போதிலும், 18 மற்றும் 19‍ம் நூற்றாண்டுகளில் கிரிகோரியன் நாட்காட்டியை ஏற்றுக் கொண்டன. ஐரோப்பிய‌ காலனி ஆதிக்கம் உலகெங்கிலும் பரவியிருந்தபடியால், எல்லா நாடுகளிலும் இதையே அதிகார பூர்வ நாட்காட்டியாக அறிவித்தனர்.

அரேபியர்கள், ஐரோப்பியர்கள் வகுத்த நாட்காட்டிகள் இருக்கட்டும், இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் என்ன செய்தார்கள் என்று கேட்கிறீர்களா? அவற்றை அடுத்த பதிவில் சொல்கிறேன்.

1 comment:

கனவுகள் விற்பவன் said...

நல்ல பதிவு...அடுத்ததையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.