Pages

இழந்த பெருமையை மீட்பது சாத்தியமே!


"எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு பிரச்சனை?" என்று பலர் புலம்புவதை கேட்டிருக்கலாம். இவ்வாறு புலம்புபவர்கள், தனக்கு பிரச்சனை என்பதை விட, தன்னைப் போல உள்ள, ஆனால் "பிரச்சனை" இல்லாத மற்றொருவரை ஒப்பிடுகிறார் என்று நாம் புரிந்து கொள்ளலாம். இந்திய ஹாக்கிக்கு உயிர் இருந்தால் இப்படித்தான் புலம்பும்.

ஒரு விளையாட்டுத் தொடரில் பங்கேற்க்கும் ஒவ்வொரு அணியும் நாங்கள் தான் வெல்வோம் என்று சொல்லியே களமிற‌ங்கும். ஆனால் இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளரோ, உலக கோப்பையில் ஐந்தாவது இடம் பெற முயற்சிப்போம் என்று பகிரங்கமாக சொல்கிறார். இப்போது புரிந்திருக்குமே, இந்திய ஹாக்கியின் நிலை. அடுத்தடுத்து பல சோதனைகளை சந்தித்து, அவசர சிகிச்சைப் பிரிவில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது, இந்தியாவின் தேசிய விளையாட்டு.


2008-ம் ஆண்டு, இந்திய ஹாக்கியை பிடித்தது சனி. 8 முறை ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அணி, தொடர்ச்சியாக 24 போட்டிகளில் 178 கோல்களை அடித்து வெற்றி பெற்ற, யாராலும் வெல்ல முடியாத வரலாற்று சாதனைகளை கொண்ட இந்திய ஆடவர் ஹாக்கி அணி, முதல் முறையாக பெய்ஜிங் ஒலிம்பிக்கிற்க்கு தகுதி இழந்தது 2008ம் ஆண்டில்.

இந்த சோகம் அடங்குவதற்க்குள், அஸ்லான் ஷா ஹாக்கிப் போட்டியில் பங்கு பெறும் அணியில் இடம் பிடிக்க டெல்லி வீரரிடமிருந்து லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்ட பட்டார் அப்போதய இந்திய ஹாக்கி சம்மேளன செயலாளர் ஜோதிகுமரன்.


அப்போதய இந்திய ஹாக்கி சம்மேளன தலைவர் கில், 14 ஆண்டுகளாக சர்வாதிகாரம் செய்தார், விளையாட்டை மேம்படுத்த அக்கறை காட்ட வில்லை என்று ஹாக்கி உலகமும், ஊடகங்களும் குற்றம் சாட்ட, இந்திய ஒலிம்பிக் சங்கம், ஹாக்கி சம்மேளனத்தை கலைத்து, ஒலிம்பிக் வீரர்கள் 5 பேரை இந்திய ஹாக்கியை நிர்வகிக்க நியமித்தது. அதோடு விடவில்லை, சனியின் விளையாட்டு.....


1927 முதல் இந்திய ஹாக்கி சம்மேளனம், உலக ஹாக்கி சம்மேளனத்தில் ஒரு உறுப்பினராக இருந்து வருகிறது. திடீரென்று சம்மேளனம் கலைக்கப்பட்டதால், உலகக் கோப்பை போட்டிகளை நடத்த முறையான அமைப்பை நிறுவ வேண்டும் என்று உலக ஹாக்கி சம்மேளனம் நிபந்தனை விதித்தது. உடனே, அரக்க பரக்க "ஹாக்கி இந்தியா" என்ற ஒன்றை, இந்திய ஒலிம்பிக் கழகம் உருவாக்கியது.


2009-ல், ஆசிய கோப்பை போட்டியில் 5வது இடம் பிடித்து அடுத்த அதிர்ச்சியை கொடுத்தது இந்திய ஆடவர் ஹாக்கி. இங்கிலாந்து, பெல்ஜியம், நெதர்லாந்து தொடர்களில், மிக மோசமாக தோற்றாலும், அஸ்லான் ஷா கோப்பையை வென்று மானம் காத்தது. மகளீர் ஹாக்கியிலும் பெரிதாக ஒன்றும் சாதிக்க வில்லை.

1980-வரை ஹாக்கி என்றாலே, இந்தியாதான் என்று இருந்த நிலை மாறியதற்க்கு யார் காரணம்? நாமெல்லாம், உடனே அரசியல் புதுந்துடுச்சுங்க என்று ஒரு காரணத்தை சொல்லிவிட்டு, வேறு வேலை பார்க்க சென்று விடுவோம். அது மட்டும் காரணமில்லை. இந்தியர்களுக்கு, நாம்தான் பாரம்பரியமானவர்கள் என்ற கர்வம் நிறையவே உண்டு. அதன் பலன் தான் இந்திய ஹாக்கியின் இந்த நிலை.

இந்திய ஹாக்கியின் இந்த நிலை ப‌ற்றி தெரிந்து கொள்ள, 30 ஆண்டுக‌ள் பின்னோக்கி சொல்வோம். உல‌க ஹாக்கியில் புகுத்த‌ப் ப‌ட்ட புதிய விதிமுறைக‌ளை, இந்திய வீரர்களால் ப‌ழ‌க்கிக் கொள்ள‌ முடிய‌வில்லை. ஐரோப்பிய‌ அணிக‌ள் உல‌க‌ ஹாக்கியில் கோலொச்சுவ‌த‌ற்க்கு முக்கிய‌ கார‌ண‌மாக முத‌லில் சொல்ல‌ப் ப‌டுவ‌து "ஆஃப் சைட்" எனப்ப‌டும் விதிமுறையை (கால்பந்தாட்டத்தில் இன்றும் உள்ளது) நீக்கிய‌து தான். புதிய‌ விதிமுறையின் ப‌டி கோல் போஸ்டிற்க்கு அருகில் சென்று, ம‌ற்றொருவ‌ர் ப‌ந்தைப் பெற்று கோல் அடிக்க‌லாம். இதை ஐரோப்பிய‌ ம‌ற்றும் ஆஸ்திரேலிய அணிக‌ள் எளிதாக க‌ற்றுக்கொண்டன‌. பாரம்பரிய விளையாட்டில் திறன் மிகுந்த இந்தைய துணைக் கண்டத்தினரால் புதிய‌ விதிமுறைக‌ளை க‌ற்றுக் கொள்ள‌ ப‌ல‌ ஆண்டுக‌ள் ஆகின‌ என்ற‌ குற்ற‌ச்சாட்டு ப‌ர‌வ‌லாக சொல்ல‌ப் ப‌டுகிறது.


உல‌க‌ ஹாக்கியில் புகுத்த‌ப் பட்ட‌ ப‌ல‌ புதிய‌ விதிமுறைக‌ளை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் த‌ர‌ப்பில் பெரிதாக எதிர்ப்பு காட்ட‌ப் ப‌ட‌வில்லை என்று முன்னாள் வீர‌ர்க‌ள் குற்ற‌ம் சாட்டுகின்றனர்.


எழுபதுகளுக்குப் பிறகு, உலக ஹாக்கி அரங்கில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வெற்றிகளை குவிக்க முடியாமல் போனதற்க்கு மற்றுமொரு காரணம், ஆஸ்ட்ரோ டர்ஃப் (Astro Turf) என்றழைக்கப்படும் செயற்கை புல் களம். இதற்கு இந்திய விளையாட்டுத் துறையும், இந்திய ஒலிம்பிக் கழகமுமே பொறுப்பேற்க்க வேண்டும்.


1980-களில் ஹாக்கி போட்டிகளில் அறிமுகப் படுத்தப் பட்ட செயற்கை புல் தளங்கள், இந்திய ஹாக்கி வீரர்களுக்கு பெரும் பின்னடைவை கொடுத்தன. ஒலிம்பிக் தகுதிச் சுற்று இறுதிப் போட்டியில் இந்தியாவை தோற்கடித்த இங்கிலாந்தில் உள்ள செயற்கை புல் ஆடுகளங்களின் எண்ணிக்கை சுமார் 600. ஆனால் இந்தியாவில் இன்றைய தேதிக்கு 20 மட்டுமே. தமிழகத்தில் 3 மட்டுமே.


வேக பந்து மைதானங்களில் பயிற்சி பெறாத இந்திய கிரிக்கெட் வீரர்கள், வெளி நாடுகளில் மண்ணை கவ்வுவது மாதிரி, ஹாக்கியிலும் இந்தியா சொதப்பியது.


வீர‌ர்க‌ளுக்கு ச‌ம்ப‌ள‌ம் கொடுக்க‌வே வ‌ழியில்லை, இதில் மைதான‌ங்க‌ள் எங்கு அமைப்ப‌து?


ஐபில் போட்டிகளுக்காக‌, வெளிநாட்டு வீரர்களை பல கோடி வாரி கொடுத்து அழைத்து வரும் ஒரு நாட்டில், ஹாக்கி வீரர்களுக்கு சில லட்சங்களை கொடுக்க முடியவில்லை. தங்களுக்குத் தேவையான அடிப்படை உரிமைகளை பெற போராட்டம் செய்யும் ஏழ்மை நிலைக்கு தள்ளப் பட்டுள்ளார்கள் தேசிய விளையாட்டின் வீரர்கள். எவ்வளவு பெரிய அவமானம்?


ஷாருக்கான், ஹாக்கி அணி வீரர்களின் நிலை குறித்து வருத்தம் தெரிவிக்கிறார். அடுத்த சில தினங்களில், ஐபில் ஏலத்திற்க்காக கோடிகளை கொடுத்து வீரர்களை வாங்குகிறார். ஏனென்றால் அது வியாபாரமல்லவா?
மைதானங்கள் அமைக்க அரசு முயற்சி எடுக்க வில்லை, அரசியல் புகுந்து விளையாடுகிறது என்பதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். நாம் என்ன செய்து விட்டோம்?

இந்திய கிரிக்கெட் அணி எத்தனை முறை ஆஸ்திரேலியாவிடம் தோற்றாலும், கிரிக்கெட் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்? கிரிக்கெட்டில் சூதாட்டம் வந்து விட்டது என்பதற்க்காக கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்தி விட்டோமா? தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இடம் பெறும் புதுமுக வீரர் பத்ரிநாத்தை தெரிந்து வைத்துக் கொண்டிருக்கும் நம்மால், உலக கோப்பை ஹாக்கி அணியில் இடம் பெறும் வீரர்கள் 5 பேரின் பெயரை சொல்ல முடியுமா? குறைந்தது கேப்டன் பெயரையாவது தெரிந்து வைத்து கொண்டிருக்கிறோமா? தன்ராஜ் பிள்ளை என்ற ஒரு தலைசிறந்த ஹாக்கி வீரனை, விமான நிலையத்தில் அழவிட்டதில் நமக்கும் பங்கு உண்டல்லவா?


டெஸ்ட் கிரிக்கெட்டின் பிதாம‌க‌ன் டான் பிராட்மேன், கால் ப‌ந்தாட்ட‌த்தின் பிதாம‌க‌ன் பீலே ஆகியோரைத் தெரிந்து வைத்திருக்கும் நம்மில் ப‌ல பேருக்குத் தெரியாதது, பார‌ம்ப‌ரிய‌ ஹாக்கியின் பிதாமக‌ன் தயான் ச‌ந்த்" எனப்ப‌டும் ஒரு இந்திய‌ ஹாக்கி வீர‌ன்.


உலக கோப்பை என்றவுடன், நிறைய பேருக்கு 2011-‍ல் நடைபெற இருக்கும் கிரிக்கெட் உலக கோப்பைதான் நினைவுக்கு வரும். இந்த மாதம் ஹாக்கி உலக கோப்பை டெல்லியில் நடைபெறவிருக்கிறது நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்காது. ஊடகங்களும் கிரிக்கெட் செய்திகளைத் தான் பெரிதாக சொல்வார்கள்.


ஹாக்கி விளையாட்டு பரவாமல் அல்லது இரசிக்கப் படாமல் போனதற்க்கு எல்லோரும் சொல்லும் காரணம், நிகழ் காலத்தில் ஹாக்கியில் இந்தியா பெரியதொரு வெற்றியைப் பெற வில்லை.


1983க்குப் பிறகு கிரிக்கெட்டிலும் இந்தியா சர்வதேசப் போட்டியில் வெற்றி பெறவில்லை. இரண்டு நாடுகள் போட்டி, மூன்று நாடுகள் போட்டி பலவற்றிலும், இந்திய ஹாக்கி அணி வெற்றி பெற்று இருந்தும், தங்கள் வியாபாரத்தை பெருக்கிக் கொள்ள‌ ஊடகங்களும், தனியார் நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு கிரிக்கெட்டை விளம்பரப் படுத்தி, ஹாக்கியை மக்கள் மனத்திலிருந்து வெளியெற்றி விட்டார்கள்.


குறைந்த‌ நேர‌த்தில், சுவார‌சிய‌ம் மிக்க‌ போட்டிக‌ள் என‌ அறிமுக‌ப் ப‌டுத்த‌ப் ப‌ட்ட‌ 20-20 போட்டிகளை விட, ஹாக்கி விளையாட்டின் நேர‌ம் குறைவுதான். மூன்று மணி நேரம் “Chak De India” திரைப் படத்தை ரசித்த நம்மால், அதே மூன்று மணி நேரம் ஒரு ஹாக்கிப் போட்டியை பார்க்க முடிவதில்லை. இன்றைய இணைய‌ உல‌கில் ஒரு விளையாட்டைப் ப‌ற்றியும், விளையாட்டு விதிமுறைகளையும் தெரிந்து கொள்வ‌து மிக‌வும் சுல‌ப‌ம். இருந்தும் நாம் யாரும் அதைப் ப‌ற்றி யோசிப்ப‌தில்லை.


ஆக‌வே ந‌ண்ப‌ர்க‌ளே, இன்றே நம‌து தேசிய‌ விளையாட்டைப் ப‌ற்றி தெரிந்து கொள்வோம். பார்வையாள‌ர்க‌ளும், ஹாக்கி ர‌சிக‌ர்க‌ளும் அதிக‌மாகும் போது, விளம்பரதாரர் நிறுவன‌ங்க‌ளும், ஊட‌க‌ங்க‌ளும் ஹாக்கியை கொண்டாட‌ முன்வ‌ரும்.

இந்த‌‌ உல‌க‌க் கோப்பையில் இந்திய‌ அணி வெற்றி பெறுகிறதோ இல்லையோ, வீர‌ர்க்ளை உற்சாக‌ப் ப‌டுத்துவோம். ஹாக்கி உலகில், இந்தியாவின் இழந்த பெருமையை மீட்பது சாத்தியமே!

ஜெய்ஹிந்த்!

டிஸ்கி 1 : ஆகஸ்ட் 29‍, இந்தியாவின் தேசிய விளையாட்டு தினம். அன்று தான் அர்ஜீனா மற்றும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா போன்ற விளையாட்டுத் துறையின் உயர்ந்த விருதுகள், குடியரசுத் தலைவர் மாளிகையில் வழங்கப்படும். அந்த நாள், இந்தியாவின் தேசிய விளையாட்டு தினமாக அறிவிக்கப் பட்டதற்க்குக் காரணம் "ஹாக்கியின் பிதாமகன்" என்று ஹாக்கி உலகினரால் கொண்டாடப் படும் தயான் சந்த் பிறந்த தினம்.

டிஸ்கி 2 : இந்தப் பதிவு, கிரிக்கெட்டை குறைத்து மதிப்பிட அல்ல. தொலைந்துப் போன விளையாட்டை மீட்டேடுக்கவே.

6 comments:

Chitra said...

இன்றே நம‌து தேசிய‌ விளையாட்டைப் ப‌ற்றி தெரிந்து கொள்வோம். பார்வையாள‌ர்க‌ளும், ஹாக்கி ர‌சிக‌ர்க‌ளும் அதிக‌மாகும் போது, விளம்பரதாரர் நிறுவன‌ங்க‌ளும், ஊட‌க‌ங்க‌ளும் ஹாக்கியை கொண்டாட‌ முன்வ‌ரும்.

................சரியாக சொல்லி இருக்கிறீர்கள். ...... இதன் படி நடக்க வேண்டியது, வரவேற்கப்பட வேண்டியது.

settaikkaran said...

நாடே கிரிக்கெட்டால் ஈர்க்கப்பட்டிருக்கையில், துணிந்து ஹாக்கி பற்றி ஒரு பதிவு எழுதியதற்காகவே 5/5 கொடுக்கலாம். கொடுத்திருக்கிறேன். :-))

Matangi Mawley said...

true sir! very rightly put! kudos!

ஹுஸைனம்மா said...

உண்மை.

இந்தக் குற்றவுணர்ச்சியாலோ என்னவோ, இப்ப நானும் ஹாக்கி பற்றி படித்துத் தெரிந்துகொள்கிறேன். பிள்ளையையும் பார்க்கச் சொல்கிறேன்.

நான் கிரிக்கெட்டுக்கும் ரசிகை அல்ல. ஆனால் அதுகுறித்து நான் தேடாமலே செய்திகள் தெரிந்து கொள்ள முடிகிறது. மற்ற விளையாட்டுக்கள் பற்றி அவ்வாறு முடிவதில்லை.

தராசு said...

அருமையான பதிவு.

நிறைய எழுதுங்கள்.

ஹாக்கியின் வீரர்கள் 5 பேர் ப்யரை சொல்லுங்கள். நெஞ்சை தைக்கும் கேள்வி.

வாழ்த்துக்கள்.

Leo Suresh said...

ஒலிம்பிக்கில் மூன்று முறை இந்தியாவுக்காக விளையாடிய எனது தாத்தா(பாட்டியின் அண்ணன் ) பிரான்சிஸ் ரங்கநாதன் இறந்த பிறகு அரசால் அவர் மனைவிக்கு ஒரு கலர் டிவி கொடுத்தது தான் அதிகப்படியான பரிசு.

மேலதிக தகவலுக்காக
http://www.indianetzone.com/9/ranganathan_francis.htm

லியோ சுரேஷ்