Pages

தமிழர் தினங்கள் இனி தமிழர் வரலாறு படி....


அமெரிக்க நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டு குடிமக்களின் பெயரால் காதலர் தினம், மனைவியர் தினம், நண்பர்கள் தினம், பூமி தினம், பாதிரியார் மரம் நட்டால், மரம் நட்ட தினம், மீன் பிடித்தால், “மீன் பிடித்த தினம்” என்று அறிவித்து கொண்டாடி வருகின்றனர். அங்கே பஞ்சம் பிழைக்க சென்ற நம்மவர்கள் அதை இந்தியாவிற்க்கு இறக்குமதி செய்து வருகின்றனர்.

இதுவரை காதலர் தினம் மட்டும் தான் பெரிய கொண்டாட்டமாக இருந்தது. ஆனால், இந்த வருடம், அன்னையர் தினத்திற்க்கு நமது மக்கள் ட்வீட்டரிலும், பேஸ் புக்கிலும் அடித்த கூத்தை பார்த்தவுடன் எனக்கு பற்றிக் கொண்டு வந்தது. அன்னையர் தினத்தன்று மட்டும் வசனங்களையும், படங்களையும் போட்டு அன்னையை பெருமைபடுத்துகிறார்களாம், இதில் ஓராயிரம் பார்வேர்டு மெயில் வேறு. என்ன கொடுமை ஐயா இது?

இதுவரை தமிழுணர்வாளர்கள் யாரும் பொங்கி எழாமல் இருப்பது அதை விடக் கொடுமை. இன்னும் நாம் வெள்ளையனுக்கு அடிமை தான். 

அதனால், குத்துப் பாட்டுக்களை பார்ப்பதை தலையாய கடைமையாகக் கொண்டிருக்கும் வாழும் வள்ளுவர் முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதி தெரிவிக்கலாம் என்று இருக்கிறேன். உலகத்திலேயே, ஒரு கடிதங்களாக எழுதி எழுதி, தமிழையும், தமிழ் மண்ணையும், தமிழினத்தையும் வாழ வைத்து கொண்டிருப்பது, நம்ம முதல்வர் மட்டும்தான். தமிழ் செம்மொழி மாநாடு முடிவதற்க்குள் ஒரு நல்ல பதிலை சொல்வார் என்று நினைக்கிறேன்.

மாண்புமிகு முதல்வருக்கு

”கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே மூத்த குடி தமிழ்க் குடி” … இன்றைய தேதிக்கு சுமார் 750, 000 வருடங்களுக்கு நாகரீகம் தோன்றி, அன்று முதல் தமிழே உயிர்  மூச்சாக வாழ்ந்து வருவது நமது தமிழ் இனம்”. இப்படி பல்வேறு சிறப்பு வாய்ந்த தமிழ் இனத்துக்கு ஒரு நாட்காட்டியும், புத்தாண்டும் இருக்க வேண்டும் என்று தான், திருவள்ளுவர் பிறந்த நாளை தமிழ் புத்தாண்டாகவும், திருவள்ளுவர்  நாட்காட்டியை தமிழர்களின் அதிகாரபூர்வ நாட்காட்டியாகவும் அறிவித்தீர்கள்.

இந்த நிலையில், மேலை நாடுகள், ஒவ்வொரு நாளும், தங்கள் நாட்டு குடிமக்களின் பெயரால் காதலர் தினம், மனைவியர் தினம், நண்பர்கள் தினம், பூமி தினம் போன்ற பல தினங்களை அறிவித்து கொண்டாடி வருகின்றனர். கோவையில் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற இருக்கின்ற இந்த வேளையில், தமிழினத்துக்கென தனி அடையாளம் வேண்டுமா? 
தமிழர்கள் வரலாற்றை ஆராய்ந்து, தமிழர்களுக்கென சிறப்பு தினங்களை அறிவிக்க வேண்டும் என இதன் மூலம் கேட்டுக் கொள்கிறேன். என் சிற்றரிவுக்கு தெரிந்த வகையில் நானும் சில தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன். ஆனால் நாட்கள் தான் எனக்கு குழப்பமாக உள்ளது. தாங்கள் அமைக்கும் குழு சரியான நாட்களை கண்டுபிடித்து பரிந்துரைகளை வழங்கும் என நம்புகிறேன்.

april-fool

இனி சிறப்பு தினங்களை, அந்த குழு வழங்கும் பரிந்துரைகளின் படிதான் கொண்டாட வேண்டுமென அரசு உத்தரவிட வேண்டும். தமிழகத்திலே மீண்டும் அமைய உள்ள சட்ட மேலவை, இதை தனது முதல் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இனி  தமிழர்களுக்கான சிறப்பு தினங்கள் குறித்து என்னுடைய பரிந்துரைகள்


காதலர் தினம் :    சங்க காலத்திலே, காதலன் இறந்துவிட்டான் என்று அறிந்ததும், தனது இன்னுயிரையும் இழந்து, இறந்தும் இறவாமல் ஒன்று சேர்ந்த காதலர்கள், அம்பிகாபதி – அமராவதி.  அவர்கள் இறப்பிலே ஒன்று சேர்ந்த நாளையே காதலர் தினமாக அறிவிக்க வேண்டும்.

மகளிர் தினம் : முதலாம் பராந்தக சோழன் காலத்திலே, நமது தமிழ் நாட்டு நங்கையொருத்தி, காட்டிலேயிருந்து வழி தவறி, கிராமத்துக்குள் புகுந்த கொடிய மிருகமான புலியை, முறத்தாலேயே அடித்து துரத்தி, தமிழர்களின் வீரத்தை பறை சாற்றினாள். அவள் புலியை துரத்திய தினத்தை தமிழ் சான்றோர்கள் கண்டறிந்து, இனிவரும் காலங்களில் தமிழக மக்கள்,  மகளிர் தினமாக அந்த நாளையே பிடிக்க வேண்டும்.

நண்பர்கள் தினம் : பண்டைய தமிழகத்தில், நட்புக்கு இலக்கணமாக வாழ்ந்தவர்கள் கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார். தனது நண்பன் இறந்துவிட்டான் என்று அறிந்து வடக்கிருந்து உயிர் துறந்து நட்பின் பெருமையை நிலை நாட்டினார் பிசிராந்தையார் என்ற துறவி.  இறப்பின் போதும் நட்பை மாண்பென மதித்து, இறவாப் புகழ் பெற்ற அவர்கள் உயிர்  நீத்த நாளையே, தமிழினம் “ நண்பர்கள் தினமாக” கடைப்பிடிக்க வேண்டும்.

அன்னையர் தினம் :  அய்யன் வள்ளுவனின் வழி நின்று, பத்தினி தெய்வமாக, அவனுக்கு மனைவியாக வாழ்ந்து பெரும் புகழ் அடைந்தவள் தான் தாய் “வாசுகி அம்மையார்”. அவர் ஒருமுறை கிணற்றிலே நீரிறைத்துக் கொண்டிருக்கும் போது, அய்யன் அழைக்க, அம்மையார் கயிற்றை அப்படியே விட்டு விட்டு, அய்யனுக்கு பணிவிடை செய்ய ஓடி வந்தாராம். அவர் திரும்பி வரும் வரை, அந்த குடுவை, கீழே விழாமல் அப்படியே நின்று கொண்டிருந்தது என்று சிறு வயதிலே கதை கேட்டிருக்கிறேன். அந்த நாளை கண்டுபிடித்து, அன்னை வாசுகி அம்மையாரின் நினைவாக “அன்னையர் தினமாக” கொண்டாட வேண்டும்.

தந்தையர் தினம் : பசுவின் கன்றை மகன் தேரிலிட்டுக் கொன்று விட்டான் என்பதற்காகத் தன் மகனையே தேர்க்காலில் இட்டுக் கொன்ற மனு நீதி சோழன் புகழ் நிலைக்க, அவன் கொன்ற நாளை கண்டுபிடித்து, தந்தையர் தினமாக அறிவிக்க வேண்டும்.

மனைவியர் தினம் :  தமிழ் நாட்டில் கண்ணகியை தெரியாதவர்கள் இருக்க முடியுமா? கண்ணகி பற்றி நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டுமா. ஏதாவது ஒரு நாளை அறிவித்து விடுங்கள் மனைவியர் தினமாக

முட்டாள்கள் தினம் :  தமிழக மக்களை பொறுத்த வரையில் தினம், தினம் தங்களின் கேள்வி பதில் அறிக்கையால் ஏமாறுகிறார்கள். இதற்கு தனியாக ஒரு தினம் வேண்டுமா என்ன?

பக்கத்து/எதிர் வீட்டுக்காரன் தினம், எதிரிகள் தினம், இன்னும் பல தினங்களையும் தாங்களே அறிவித்து, தமிழர்களை முன் மாதிரியாக இருக்க விடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்!

இப்படி தமிழர்களுக்கென தனியாக தினங்களை அறிவித்தால், தமிழினத்தின் ஒப்பற்ற உயரிய தலைவர் என்று வரலாறு பேசும்.

நீங்கள் தேர்வு செய்யும் தினங்களில் மே 18 வந்துவிடப் போகிறது ஜாக்கிரதை!

இப்படிக்கு
உங்கள் குடும்ப மற்றும் தமிழின அரசியல்களால் ஏமாந்து கொண்டேயிருக்கும் தமிழன்



2 comments:

சுபா காரைக்குடி said...

மிகவும் வித்தியாசமான கருத்து ! இது நடைமுறையில் வந்தால் ரொம்ப நல்லா இருக்கும். எதற்காக இந்த தினங்கள் கொண்டாடபடிகிறது என்று அனைவருக்கும் புரியும். கொண்டாடபடுவதில் ஒரு அர்த்தம் இருக்கும்.

“வாசுகி அம்மையார்” நல்ல மனைவியாக தானே கடமையாற்றினார். அவரை அன்னையர் தினத்திற்கு சொல்வது தான் புரியவில்லை! மனைவியர் தினத்து சொல்லி இருந்து இருக்கலாமோ???

- YourFriendSubha

அன்புடன் நான் said...

ஏங்க கொழுந்தியா தினமுன்னு ஏதாவது உண்டா?....
நல்லா கொண்டாடுரானுவோ....

அன்னையர் தினம் பற்றிய என் கவிதையை என் வலைத்தளத்தில் பார்க்கலாம்.