Pages

ஆயுதப் போராட்டம் தேவையா?

என்னுடைய "பிரபாகரனும் பழசிராஜாவும்" என்ற பதிவை படித்துவிட்டு, நண்பர் பிரசன்னா அவர்கள் எனக்கு ஒரு மின் அஞ்சல் அனுப்பியிருந்தார். அதில் ஒரு சில பகுதிகள் மட்டும் இங்கே!

"ராஜிவ் காந்தி, அமிர்தலிங்கம், ஸ்ரீசபாரத்னம், பத்மநாபா, பிரேமதாசா எல்லாரையும் தெரியுமாண்ணே?அவுனுகள விடுன்னே.அப்ப செத்த ஜனங்கள என்னண்ணே செய்ய சொல்ற? பொணத்து மேல ராஜாங்கம் பண்ண வேணாம்னே...அங்க ஒரு காலோ கையோ போயி அழுவுற குழந்தைகிட்ட அவுங்க அம்மா "இது ஈழ போராட்டம்,பொறுத்துக்க"‍ன்னு சொல்ல முடியுமா? இல்ல பசிக்குதுன்னு அழுவுற குழந்தைகிட்ட அப்டி சொல்ல முடியுமா? யாருக்குமே அடிச்சா வலிக்கதானே செய்யும்.அது பிரபாகரனோ ராஜபக்க்ஷேவோ... முப்பது வருசமா ஒன்னும் பாக்காத சனம். இனிமேவாவுது எதாவுது நடக்குமான்னு பாக்குது...முடிஞ்சா நம்ம சிநேகித புள்ளைங்கள கூட்டிகிட்டு Beach Resort க்கு போகாம ராமேஸ்வரம் மண்டபம் முகாமுக்கு ஒரு தடவை போயிட்டு வாங்க..."

என்று குறிப்பிட்டு எழுத்தாளர் சாருநிவேதிதா அவர்களின் "வன்முறையின் தோல்வி" என்ற பதிவையும் படிக்க சொல்லியிருந்தார்.

அவருக்கு மட்டுமல்ல, ஆயுதப் போராட்டம் பற்றி விமர்சனம் செய்பவர்களுக்கு என்னுடைய பதில் இதோ,

இந்திய அரசு சமாதான பேச்சில் ஈடுபட்ட 1986-‍ம் வருடம், சென்னையில் பிரபாகரன் தமிழக காவல்துறையால் சிறைபிடிக்கப் பட்டதும், சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். பின்னர், அவர் விடுதலை செய்யப்பட்ட நேரத்தில் பத்திரிக்கையாளர்கள் அவரிடம், "இந்தியாவில் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றியும் கண்டிருக்கும் நீங்கள், இலங்கையில் மட்டும் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுகிறீகளே, ஏன்?" என்று கேட்டார்கள்.

அறப்போராட்டத்தால் சுதந்திரம் அடைந்த இந்தியாவுக்குத்தான் அந்தத் போராட்டத்தின் மதிப்புத் தெரியும் நாங்கள் எந்த வகையான ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை எங்கள் எதிரிகள்தான் தீர்மானிக்கிறார்கள். அதனால்தான், "செய்து முடி; அல்லது செத்து மடி!" என்ற கொள்கையுடன் ஈழத்தில் உயிர்ப் போராட்டம் நடத்துகிறோம்" என்றார் பிரபாகரன்.

கோயில் பூசாரிகளாக இருந்த தமிழரை உயிருடன் தீ வைத்து சிங்களர்கள் கொளுத்திப் போட்டதையும், தமிழ்க் குழந்தைகளைக் கொதிக்கும் தார் டின்களில் உயிருடன் போட்டக் கொடுரங்களையும் கேட்ட பிரபாகரன் இரத்தம் கொதித்துப் போய், பத்தாம் வகுப்புடன் தனது படிப்பை நிறுத்தி விட்டு, டி.என்.டி எனப்ப்டும் "தமிழ் புதிய புலிகள்" எனும் அமைப்பைத் தொடங்கினார்.

1983-‍ம் வருடம் ராணுவம் தாக்குதலைத் தொடங்கி பல்லாயிரக் கணக்கான தமிழ்ப் பெண்களை சூரையாடியதைத் தொடர்ந்து, புலிகள் இயக்கம் போரை தொடங்கியது.

ஒரு இயக்கம் ஆயுதப் போராட்டத்திற்க்கு த‌ள்ள‌ப் ப‌ட்ட‌ வ‌ர‌லாறு இது.

மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் யாவும், நான் புத்தகங்கள் படித்து தெரிந்துக் கொண்டவை.

சில ஆண்டுகளுக்கு முன், மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் நிர்வாணப் போரட்டம் நடத்தினார்கள். அது வரையிலும், "இந்திய இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் அம்மாநில பெண்களை கற்பழித்து கொன்று குவிக்கிறார்கள்" என்ற குற்றச்சாட்டை ஆளும் அரசியல்வாதிகள் கேட்க வில்லை. தகவல் தொடர்பு சாதனங்களும் அதை கண்டுகொள்ளவில்லை. ஆனால், இந்த போராட்ட செய்தியை போட்டி போட்டுக் கொண்டு ஒளிபரப்பி ஒய்ந்தன். இன்று வரையிலும், இந்த குற்றச்சாட்டு வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது.

ஒரிசா, மேற்கு வங்கம், உத்தராஜ்சல் போன்ற மாநிலங்களில் நிலவும் குடி தண்ணீர், சாலை வசதி போன்ற உள்கட்டமைப்பு பிரச்சனைகள் குறித்து பல முறை கோரிக்கை விடுத்தும் எந்த பலனும் இன்றி, மக்கள் நக்ஸல் இயத்தத்தினரை ஆதரிக்கத் துவங்கி இருக்கிறார்கள். ஊடகங்கள் மாறி மாறி ஒளிபரப்புகின்றன. இப்போது பிரதமர், உள் கட்டமைப்பை மேம்படுத்த சொல்லி குரல் கொடுக்கிறார். நக்ஸல் இயக்கங்கள் வெற்றி பெற்றதா இல்லையா என்பது கேள்வியில்லை. அவர்களின் ஆயுதப் போரட்டம் தான் இன்றைய இந்திய அரசை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.

இன்றைய உலகில், அறப் போராட்டங்கள் கண்டுக் கொள்ளப் படுவதில்லை. காந்தியின் நாட்டிலேயே இந்த நிலைமை.....

ஒருவேளை விடுதலைப் புலிகள் ஆயுதப் போரட்டத்தில் ஈடுபடாமல் இருந்திருந்தால், தமிழர்களின் இனப்படுகொலைகள், உலகின் கவனத்தை இந்த அளவுக்கு ஈர்த்திருக்குமா என்பது சந்தேகமே!

ஆயுதப் போராட்டம் வெற்றி பெற்றதா இல்லையா என்பதை காலம் தான் தீர்மானிக்க வேண்டும்!

No comments: