கடந்த ஞாயிற்றுக்கிழமை, 10 சூலை, உத்திரப்பிரதேசம் மற்றும் அசாம் மாநிலங்களில் நடந்த இருவேறு இரயில் விபத்துகளில் சுமார் 82 உயிர்கள் போய்விட்டன. 250-க்கும் மேற்பட்டோர் படு காயங்களுடன், உயிருக்குப் போராடி கொண்டிருந்தனர். இதில், உ.பி விபத்து மனித தவறினால் நடந்திருக்கலாம் எனவும், அசாம் விபத்து, தண்டவாளங்கள் குண்டு வைத்து தகர்க்கப் பட்டதால் நடைபெற்றது எனவும் முதல் தகவல் அறிக்கை சொல்கிறது. கடந்த 2010 ஏப்ரல் முதல் நடந்த ரயில் விபத்துக்களில் இது வரை 336 பேர் இறந்து விட்டனர். 436 பேர் படுகாயம் அடைந்ததாக புள்ளிவிபரங்கள் சொல்கிறது.
அசாம் மாநிலத்தில் நடைபெற்றது, விபத்தல்ல. திட்டமிட்ட வெடிகுண்டு தாக்குதல். இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கோ, இதுவரை நடந்த ரயில் விபத்துகளுக்கோ ஆளும் அரசுகளும் சரி, இந்திய ஊடகங்களும் சரி. பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. மங்குனி பிரதமர், ரயில்வே இணையமைச்சரை, விபத்து நடந்த இடத்திற்க்கு போய்ப் பாருங்கள் என்று சொல்வாராம். அதற்கு இரயில்வே அமைச்சர், நான் 1000 மைல் தாண்டி இருக்கிறேன். என்னாலெல்லாம் போக முடியாது என்று பதில் சொல்வாராம். மங்குனியும் கேட்டுக் கொண்டு அமைதியாக, நான் வாத்து கிடையாது என்று ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பாராம்.
இதே அசாம் மாநிலத்தில் தான், நவம்பர் 2009-ம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. அப்போதும் பல மனித உயிர்கள் பறிபோயின. அப்போது, உள்துறை அமைச்சர் பறந்தோடி வந்து செய்தி வாசிப்பாளர் மாதிரி ஏதாவது அறிக்கை வாசித்தாரா? மங்குனி பிரதமரும், இத்தாலி அம்மையாரும், ஒபாமாவும் கண்டனம் தெரிவித்தார்களா? மறு நாளே, பறந்து வந்து ஆறுதல் தான் சொன்னார்களா? இந்தியாவின் இதயத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்றெல்லாம் வீர வசனங்கள் வரவில்லையே?
அசாமும் இந்தியாவில் தானே இருக்கிறது? அவைகளும் விலைமதிக்க இயலாத மனித உயிர்கள் தானே?
ஏனென்றால், அசாமில் நடப்பது இந்திய அரசின் தீவிரவாதம். இந்திய அரசியல் வியாதிகளின் கோரமுகம். வெளி நாடுகளின் சதி என்று சொன்னால்தானே அரசியல் செய்ய முடியும். இந்த உள்நாட்டு பிரச்சனையில் கருத்து சொன்னால், தங்கள் முகத்திரை தானே கிழியும்.
இந்திய வியாபார ஊடகங்களுக்கும், மும்பையை பற்றி சொன்னால் தானே காசு பார்க்க முடியும். அசாமில் பழங்குடி மக்கள் செத்தாலென்ன, உயிரோடு இருந்தாலென்ன. அசாம் குண்டுவெடிப்புகளெல்லாம், செய்திகளே இல்லாத போது, ஆவணப் படங்களில் ஓட்டிக் கொள்ளலாம் என்று இருந்திருப்பார்கள்
நாமும் பெரிதாக ஒன்றும் அலட்டிக் கொள்ள மாட்டோம். ஏனென்றால் ஊடகங்கள் தானே நம்மை இயக்குகின்றன. ஊடகங்களை இயக்குவது அரசியல்வியாதிகள். அவர்களுக்குத் தெரியும், மக்களுக்கு, எப்போது. எந்த செய்தியை கொடுக்கவேண்டுமென்று. எதை வைத்து அரசியல் செய்யலாம், ஒன்றை சொல்லி, மற்றொன்றை மறக்கடிப்பது இந்த வித்தைகளெல்லாம் ஊடகங்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் நன்றாகவேத் தெரியும்.
மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள் என்றவுடன் பொங்கி எழுந்து, உயிரிழப்புகளை காசாக்கும் நோக்கில் அடி தொண்டையில் கத்திய ஊடகங்கள், ஏன் கவுகாத்தி குண்டுவெடிப்புகளை பற்றி பேசுவதில்லை? நூற்றுக்கணக்கில் ரயில் விபத்துகளில் மாண்டு போகும் மக்களை பற்றி பேசுவதில்லை.
சமூக வலைத்தளங்களில், பொங்கி புரட்சி கோஷங்களை Status Message-களாக்கி, இறந்து போன அப்பாவி பொதுமக்களுக்காக கண்ணீர் கவிதை வடித்த தேசபக்தி ஆர்வலர்கள், அசாம் உட்பட வடகிழக்கில் நிகழும் எதையும் கண்டு கொள்வதில்லை. இவர்களிடம் கேளுங்கள், ஒற்றை வரியில் பதில் வரும், “I Hate Politics”.
எதை பேசவேண்டுமென்று, ஊடகங்களுக்கு ஆளும் அதிகாரவர்க்கத்தால் சொல்லப்பட்டிருக்கிறது. சமூகவலைத்தளங்களில் நாமெல்லாம் பிரதிபலிப்பது ஊடகங்களின் மாய வார்த்தைகளைத்தான்.
இதில் பிரச்சனை என்னவென்றால், ஊரே ஒன்றை பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது, நாம் வேறெதையும் பற்றிப் பேசக்கூடாது. பேசிவிட்டால், அவ்வளவு தான், இங்கே உயிர்கள் மாண்டு கொண்டிருக்கிறது. நீ என்னவென்றால் பிடில் வாசிக்கிறாயே? நியாயமா, நீ மனிதன் தானா? உனக்குள் இரக்கம் இருக்கிறதா? கருணை உள்ளவன் தானா நீ என்று அடுக்கடுக்காக வசை மொழிகளை பாடிவிடுவார்கள்.
தெற்காசியாவின் நாட்டாமைப் பதவிக்கு அடித்து கொள்ளும் அமெரிக்கா, சீனா, இந்தியாவின் அதிகார, ஆயுத போட்டியே இந்த தாக்குதல்கள் என்கிற உலக அரசியல் அறியாமல், மாத சம்பளத்தில் குடும்பம் நடத்தும் அல்லது அன்றாடம் காய்ச்சி பிழைக்கும் வர்க்கம், எதையும் செய்யக் கூடாது. அவனுக்கு பிடித்ததை, அவனை மகிழ்விக்கிற எதையுமே அவன் நாடக்கூடாது.
அவனுக்கு உலக அரசியலும், குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தால் அதற்க்காக துக்கம் அனுசரிக்கிற மனோபாவமும் இருக்கவேண்டும். இல்லையென்றால் நீ, மனிதனில்லை, என்று ஏச்சுக்கள் வந்து சேர வேண்டும்.
உள்துறை அமைச்சர் செட்டி நாடு சமையலை ஒரு பிடி பிடித்துவிட்டு, சப்பாத்தி போல முகத்தை வைத்துக் கொண்டு, ”தீவிரவாதம் ஒழிக்கப்படவேண்டும்” என்று வசனம் பேசியிருக்கலாம். விளம்பர இடைவெளிகளில் பர்காதத், பாதாம் கீர் சாப்பிட்டிருக்கலாம். ராஜ்தீப், ரசகுல்லா சாப்பிட்டிருக்கலாம். சாமானியன், இது எதையுமே செய்யக் கூடாது. அங்கே ஆயிரம் உயிர்கள் சோகத்திலிருக்கிறது. ”நீ, எப்படி இங்கே, இனிப்புகள் சாப்பிடலாம். கூடவே கூடாது.” என்று கேள்வி கேட்பார்கள்.
மும்பை தாக்குதலுக்குப் பின், அன்றிரவு நடந்து கொண்டிருந்த படப்பிடிப்புகள் ஒன்று கூட நிறுத்தப்படவில்லையாம். திரையரங்குகள் வழக்கம் போல இயங்கினவாம். இவ்வளவு ஏன், அகர்வால் கடைகளில் இனிப்புகள் வழக்கம் போல விற்கபட்டனவாம். ஆனால், தமிழ் நாட்டில், தமிழன் இனிப்பு சாப்பிடக் கூடாது. மனித உயிர்கள் போய்விட்டனவே, சக மனிதன் தானே, நீதான் துக்கம் அனுசரிக்கவேண்டும்.
இந்திய உளவுத்துறையின் தோல்விக்கும், அரசியல் வியாதிகளின் கையாலாகத்தனத்திற்க்கும் பொது மக்கள்தான் முழுப்பொறுப்பு. அதனால், நாம்தான் மூன்று வாரங்கள் துக்கம் அனுஷ்டிக்கவேண்டும். இனிய வார்த்தை, இனிப்புகள் எதையுமே நினைத்துக் கூடப்பார்க்கக் கூடாது. அசாமில் செத்ததற்க்கு கவலைப் படவேண்டாம். நம்மை, நாமே எவ்வளவு வேண்டுமானாலும் கொல்லலாம். கவலைப்படாதே….. ஆனால், குண்டு மும்பையிலும், டெல்லியிலும் மட்டும் வெடிக்கக் கூடாது. வெடித்தால், ஊடகங்களோடு நாங்களும் சேர்ந்து மனிதாபினத்தை வளர்ப்போம், அதற்கு அசாமியும், தமிழனும் துக்கம் அனுசரிக்கவேண்டும்.
பதிவர் புதசெவி (TBCD) FaceBook-ல் பகிர்ந்தது
உள்ளமை (அ) நிதர்சனம் (அ) யதார்த்தம்
மும்பையில் குண்டு வெடிப்பு என்று சொன்னேன்..எந்த இடம் என்று கேட்டாள் மனைவி. இடம் சொன்னவுடன்....எத்தனை சப்பாத்தி வேண்டும் என்று கேட்கிறாள்..இத்தனைக்கும் மச்சான் மும்பையில் இருக்கிறான்.
தம்பி வேலை செய்யும் இடத்தில் வெடிக்கலை என்றவுடன் கவனம் சப்பாத்திக்கு தாவிவிட்டது...